புதுச்சேரி இடுகாட்டில் மூட்டைக்குள் கல்லூரி மாணவியின் சடலம் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
புதுச்சேரியில் கல்லூரி மாணவி கொல்லப்பட்டு சடலமாக சுடுகாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி ஒன்றிய பிரதேசம், திருக்கனூர் அருகே வசிக்கும் ராமன் என்பவருக்கு 17 வயதில் மகள் இருக்கிறார்.
இவர், புதுச்சேரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை மாணவி வழக்கம் போல கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் கல்லூரி முடிந்து நேற்று பிற்பகல் பெற்றோரிடம் தொலைபேசியில் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் மாலை நீண்ட நேரத்திற்கு பிறகும் மாணவி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மாணவியின் பெற்றோர், அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பொறையூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில், பெண் ஒருவரின் சடலம் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிடப்பதாக காவ்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், மூட்டைக்குள் இருந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு உட ல் கூராய்வு செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, கல்லூரி சென்ற மகளை காணவில்லை என பெற்றோர் புகாரில் குறிப்பிட்ட பெண்தான் சடலமாக மீட்கப்பட்டவர் என்று தெரிய வந்தது.
இது தொடர்பான விசாரணையில், அந்த மாணவியை பொறையூர் பகுதியைச் சேர்த்த வாலிபர் ஒருவர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு குறித்து விசாரணை செய்து வரும் புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியபோது தங்களுக்கு கிடைத்த தகவலை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.
"உயிரிழந்த மாணவி மற்றும் புதுச்சேரி பொறையூர் பகுதியைச் சேர்த்த 18 வயதுடைய வாலிபர் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். மாணவியை காதலித்த வாலிபர் 10ஆம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, வேலைக்கு எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதனிடையே மாணவி கல்லூரி முதலாம் ஆண்டு படித்துள்ளார்."
"குறிப்பாக மாணவி கடந்த சில நாட்களாக சரியாகப் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவி தன்னை தவிர்ப்பதாக அந்த வாலிபர் நினைத்துள்ளார். இந்த சூழலில் நேற்று மாணவியுடன் பேசுவதற்காக வாலிபர் அவரது ஊருக்கு வரும்படி கட்டாயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது."
"இதைத் தொடர்ந்து, மாணவி நேற்று வாலிபரின் ஊருக்குச் சென்று அவருடன் பேசியதாகவும் அதன் பிறகு இவர்களுக்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்று தெரியவில்லை. பிறகு, மாணவியை வீட்டில் விடுவதற்காக வாலிபர் அவரது இளைய சகோதரனுடன் சென்றுள்ளார்.
போகும் வழியில் பொறையூர் சுடுகாடு அருகே இவர்களுக்குள் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த மாணவியின் தலையில் கட்டையால் அடித்து வாலிபர் கொலை செய்துள்ளார். பின்னர் அந்த வாலிபரின் இளைய சகோதரர் உதவியுடன் உயிரிழந்த மாணவியை சாக்கு மூட்டைக்குள் கட்டி சுடுகாட்டில் வீசி சென்றுள்ளனர்," என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.
தற்போது மாணவியைக் கொலை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திய வருகின்றனர். இந்த கொலைக்காக அந்த வாலிபருக்கு வேறு யாரேனும் உதவி செய்தார்களா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
- 'மன்னிக்க தயார்; ஆனால் யாரை?' - ஈஸ்டர் தாக்குதலில் குடும்பத்தை இழந்தவரின் நீங்கா நினைவுகள்
- 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: கொந்தளிக்கும் கல்வியாளர்கள் - முடிவின் பின்னணி என்ன?
- ஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தில் கால் வைத்து நசுக்கிய முன்னாள் காவலர் குற்றவாளி என தீர்ப்பு
- புதுவை லாக்டவுன்: ஆளுநர் தமிழிசை அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












