பிரதமர் நரேந்திர மோதி உரை: “கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்தால் ஊரடங்கு தேவையில்லை”

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Narendra Modi

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறித்து பிரதமர் நரேந்திர மோதி நேரலையில் இன்று உரையாற்றினார்.

இந்தியா கொரோனா இரண்டாம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார்.

நாட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பது, மக்கள் நடைமுறைகளை சரியாக பின்பற்றுவதன் தேவை போன்ற அம்சங்கள் குறித்து உரையாற்றினார் மோதி.

பிரதமர் மோதியின் உரையிலிருந்து:

"கொரோனாவுக்கு எதிராக நாடு பெரிதாக போராடிவருகிறது. சில வாரங்களுக்கு முன் நிலைமை சரியாகிக் கொண்டிருந்த நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலை வந்து விட்டது. நீங்கள் அனுபவிக்கும் வலியை நான் உணருகிறேன்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆக்ஸிஜென் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அதி விரைவாக எடுத்து வருகிறது.மத்திய அரசு, மாநில அரசு, தனியார் துறை என அனைத்து தரப்பும் இந்த விஷயத்தில் இணைந்து தேவையானவர்களுக்கு ஆக்ஸிஜென் கிடைக்க வேண்டும் என பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக்ஸிஜெனின் உற்பத்தியை அதிகரிக்கவும், விநியோகத்தை அதிகரிக்கவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் புதிய ஆக்ஸிஜென் ஆலைகளைத் தொடங்கவும், ஒரு லட்சம் ஆக்ஸிஜென் சிலிண்டர்களைக் கொண்டு வரவும், ஆக்ஸிஜென் ரயில் சேவையை அறிமுகப்படுத்தவும் பல வழிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நமது விஞ்ஞானிகள் மிகக் குறுகிய காலத்தில் நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளனர். இன்று, உலகின் விலை குறைந்த தடுப்பூசி இந்தியாவில் கிடைக்கிறது.

மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பெரு நகரங்களில் கொரோனாவுக்கு என்றே பிரத்யேகமாக மிகப் பெரிய மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதுவரை இந்தியாவில் 12 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என நேற்று தெரிவிக்கப்பட்டது.

நம் அனைவரின் முயற்சியும் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் மிகக் குறைவாக பாதிக்கப்படுவதை உறுதி செய்வதும் ஆகும். மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க, பார்மா நிறுவனங்களிடம் முழு உதவி பெறப்பட்டு வருகிறது. நம்மிடம் வலுவான ஃபார்மா துறை இருக்கிறது. நான் ஒரு விஷயத்தை குறிப்பாக என் சிறார் நண்பர்களிடம் சொல்ல விரும்புகிறேன். வேலை இல்லாதவர்கள், காரணமின்றி, வீட்டை விட்டு வெளியேறாத ஒரு சூழ்நிலையை வீட்டில் உருவாக்குங்கள். உங்கள் பிடிவாதம் மிகப்பெரிய முடிவுகளுக்கு வழிவகுக்கலாம்.

மாநில அரசு தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு தொடர்ந்து இருக்க மாநில அரசுகள் நம்பிக்கை கொடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தடுப்பூசி வசதிகளையும் வழங்க வேண்டும்,

மேலும், ஊரடங்கு உத்தரவை கடைசி வழியாக வைத்துக் கொள்ளுமாறும், மைக்ரோ கன்டெய்ன்மென்ட் பகுதிகளை உருவாக்குமாறும் மாநில அரசுகளிடம் பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தினார்.

கொரோனா விதிமுறைகளை நாம் முழுமையாக கடைப்பிடித்தால், ஊரடங்கு உத்தரவுகள் தேவை இல்லை. நாம் இந்தியாவை ஊரடங்கில் இருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் பேசினார் பிரதமர் நரேந்திர மோதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: