தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்கத் தடை

ஒரு ஸ்திரமற்ற சூழ்நிலையில், மிகவும் சவாலான பொறுப்பை ஏற்கிறார் கிரிஜா வைத்தியநாதன்.

பட மூலாதாரம், GIRIJA VAIDYANATHAN FACEBOOK

படக்குறிப்பு, சவாலான நேரத்தில் தலைமைப் பதவி

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் சில நாட்களுக்கு முன்பாக ஓய்வுபெற்றார். அதற்குப் பிறகு அவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த ஜி. சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொழில்நுட்ப உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள் கல்வித் துறை சார்ந்தவர்களாக இருந்தால் 15 ஆண்டு அனுபவமும் அதில் ஐந்தாண்டு சுற்றுச்சூழல் சார்ந்து நேரடி களத்தில் பணியாற்றிய அனுபவமும் தேவை எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டால் 15 ஆண்டு அனுபவமும் அதில் ஐந்தாண்டு சுற்றுச்சூழல் சார்ந்து பணியாற்றிய அனுபவமும் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் சுற்றுச்சூழல் சார்ந்த பணி என்ன என்பது விளக்கப்படவில்லை. ஆகவே கல்விப்புலம் சார்ந்தவர்களுக்கு குறிப்பிடப்பட்ட தகுதியை இங்கேயும் பொருத்திப் பார்த்தால், அதிகாரிகளும் சுற்றுச்சூழல் சார்ந்து நேரடியாக கள அனுபவம் பெற வேண்டும் என்றே சொல்ல வேண்டும். கிரிஜா வைத்தியநாதனுக்கு அந்த அனுபவம் இல்லை. ஆகவே அவரது நியமனத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென சுந்தர்ராஜனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து மத்திய அரசும் கிரிஜா வைத்தியநாதன் தரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவில், கிரிஜா வைத்தியநாதன் மூன்றரை ஆண்டுகள் சுற்றுச்சூழல்துறை செயலராக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தலைமைச் செயலராக இருந்தபோது அவர் சுற்றுச்சூழல் துறை சார்ந்த விவகாரங்களையும் கவனித்ததாகச் சொல்லப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு முடிவடையும்வரை கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்கத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: