தமிழ்நாடு அரசியலில் சுற்றுச்சூழல் அக்கறை: நம்பிக்கை என்ன? சவால்கள் என்ன?

குருவி

பட மூலாதாரம், Getty Images/shajan SS / 500px

    • எழுதியவர், நித்யானந்த் ஜெயராமன்
    • பதவி, சூழலியல் செயற்பாட்டாளர், பிபிசி தமிழுக்காக

சூழலியல் குறித்த உறுதிமொழிகள் தமிழக அரசியலில் அழுத்தமாக இடம் பிடித்திருக்கின்றன. பெரிய அளவிலான உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கான திட்டங்களைக் காட்டிலும் விவசாயிகள், மீனவர்களின் உரிமைகள் கூடுதல் மதிப்பைப் பெற்றிருக்கின்றன. அ.இ.அ.தி.மு.கவைத் தவிர, 2021 தேர்தல் களத்தில் நிற்கும் அனைத்து முக்கியக் கட்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் தமது தேர்தல் அறிக்கைகளில் தனிப் பகுதியை ஒதுக்கியிருக்கின்றன.

தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படுமா என்னும் ஐயம் நியாயமானதுதான் என்றாலும் அரசியல் சார்ந்த அக்கறைகளில் சூழலியலும் இடம்பெறுவதே தமிழக அரசியலில் வரவேற்கத்தக்க பண்பாட்டு ரீதியான மாற்றத்தைக் குறிக்கிறது. இவை வெறும் அடையாளபூர்வமானவை என்று நிராகரிப்பது அறிவுடைமை ஆகாது. சூழலியல் கோட்பாட்டின் உள்ளூர் வடிவங்களை உருவாக்குவதில் சுய மரியாதை இயக்கம் போன்ற முந்தைய பண்பாட்டு இயக்கங்கள், தமிழர்களின் மொழிசார் அடையாளத்தின் ஆழம் ஆகியவற்றின் ஆற்றலை அவமதிப்பதாக அது அமையும். தொழிற்சாலைகளுக்குப் பதிலாக வேளாண்மையை தமிழகத்தின் அடையாளமாக வரையறுக்கும் போக்கு தற்போது புதிய மதிப்பைப் பெற்றிருக்கிறது.

ஆனால், அரசியல் களத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சதகமான மாற்றத்தை இரண்டு அச்சங்கள் குலைக்கக்கூடியவை. முதலாவதாக, சுயமரியாதையின் அடிப்படையில் அமைந்த சூழலியல் கோட்பாடு என்பது, தமிழ்த் தேசியவாதம் சார்ந்த தீவிரப்போக்கின் துணைப் பிரிவான, "எங்கள் ரத்தம், எங்கள் மண்" என்பதாகச் சறுக்கிவிடக் கூடாது. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களின் அனைவரையும் உள்ளடக்கும் மரபிலிருந்து உருவான வலுவான அரசியல் போக்குகள் இந்த அச்சத்தைத் தணிக்கின்றன.

கூடங்குளம் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் நடந்த போராட்டம்

இரண்டாவது அச்சம், பூமியைப் பாதிக்கக்கூடிய சூழலியல் நெருக்கடியின் பிரம்மாண்டத்தன்மையையும் அவசரத்தையும் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கான சாத்தியப்பாடு.

தமிழக அரசியல் என்பது பெருமக்கள் திரளின் விருப்பத்தை மையமாகக் கொண்டது. போராட்டங்களின் மூலமாகவே பெரும்பாலும் வெளிப்படும் மக்களின் விருப்பங்களை அடிப்படையாக வைத்து உருவாவது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து ஜல்லிக்கட்டுப் போராட்டம்வரை போராட்டங்களும் எதிர்ப்பு இயக்கங்களும்தான் தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைக்கின்றன. ஆகவே, சூழலியல் சார்ந்த அக்கறை தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணம் விழிப்புணர்வு என்பதைக் காட்டிலும் வெகுஜனத்தன்மைதான் காரணம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

போராடுவதில் சளைக்காத தமிழகம் கடந்த பத்தாண்டுகளில் வழக்கத்தைவிட அதிகமாகவே போராட்டங்களைக் கண்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் அரசியலில் திராவிட யுகத்தைத் தொடங்கியது என்றால், அணு உலைக்கு எதிராக 2011 முதல் 2013வரை நடைபெற்ற போராட்டம் அரசு ஆதரவு பெற்ற பெருநிறுவனங்களிடமிருந்து நிலம், நீர், வாழ்வாதாரம் ஆகியவற்றைக் காப்பதற்கான போராட்டங்களுக்குத் தனித்த தமிழ் அடையாளத்தைக் கொடுத்தது.

கூடங்குளத்தில் அணு உலையை எதிர்த்து இடிந்தகரை என்னும் சிறிய கிராமத்தில் மீனவர்கள் அஹிம்சை வழியில் போராடினார்கள். இதன் மூலம் அந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால், அந்தப் போராட்டம் அணு ஆற்றல் குறித்தும் சூழலியல் சார்ந்த முடிவுகளில் பங்கேற்பதற்கான மக்களின் உரிமை குறித்தும் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்தப் போராட்டத்தின் விளைவுகள் அணுசக்தியை வெளிப்படையாகவே ஆதரிக்கும் சி.பி.எம். போன்ற கட்சிகளுக்கும் தொழில்துறைக்கு ஆதரவான தி.மு.க. போன்ற கட்சிகளுக்கும் அணுசக்தித் திட்டங்களின் மீது இருந்த ஈடுபாட்டினைக் குறைத்தன.

தேர்தல் அறிக்கைகளில் சுற்றுச்சூழல் என்று சித்தரிக்கப்படும் விஷயங்களின் அடிப்படைகள், மின் உற்பத்தி நிலையங்கள், அதிவிரைவுச் சாலைகள், துறைமுகங்கள், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கான எதிர்ப்பு இயக்கங்களால் மட்டும் உருவாகவில்லை. இதற்கு முன்னர் நடைபெற்ற சமூகப் போராட்டங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றின் ஊற்றுக் கண்களிலிருந்தும் அவை உருப்பெற்றிருக்கின்றன.

பெரிய அளவில் நடைபெற்ற சில போராட்டங்களைப் பாருங்கள்: இலங்கை இறுதிப் போருக்கும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கும் எதிரான போராட்டம் (2009), அணு உலைக்கு எதிரான போராட்டம் (2011-13), டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிரான இயக்கம் (2009-13), கொடைக்கானலில் யூனிலீவர் நிறுவனத்தால் உருவாகக்கூடிய பாதரசக் கழிவு குறித்துச் சமூக ஊடகப் பரப்புரையால் தூண்டப்பட்ட ஆவேசம் (2005முதல் நடந்துவருவது), எண்ணூர் கழிமுகத்தில் தொழில்துறை ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான மீனவர்களின் போராட்டம் (2015முதல் நடந்துவருவது), இளைஞர்கள் தலைமை ஏற்று நடத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டம் (2017 ஜனவரி), ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் உருவாகி (பிப்ரவரி 2017) டெல்டாவின் இதர மாவட்டங்களுக்கும் காட்டுத் தீ போலப் பரவிய போராட்டம், சலுகை சார்ந்த முதலாளித்துவத்தையும் தொழில்துறை மாசுபாட்டையும் எதிர்த்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 100 நாட்கள் நடந்த போராட்டம் (2018), சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் (2018 முதல் இன்றுவரை), கன்னியாகுமரியில் சர்வதேச கொள்கலன் பரிமாற்ற முனையம் அமைவதை எதிர்த்து மீனவர்களும் விவசாயிகளும் மேற்கொள்ளும் போராட்டம் (2018முதல் நடந்துவருவது), காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிராக நடக்கும் மக்கள் இயக்கம் (2019முதல் நடந்துவருவது). இந்தப் போராட்ட இயக்கங்கள் அனைத்துமே மாநில, மத்திய அரசுகளுக்கு எதிராக நடப்பவை என்பதுதான் இதில் சுவாரஸ்யமான தகவல்.

ஒன்றிய அரசு வடக்கை மையமாகக் கொண்டு இயங்குவதாகவும், தென்னிந்திய நலன்கள் குறித்து அது அலட்சியமாக இருப்பதாகவும் தமிழகத்தில் பலரும் கருதுகிறார்கள். மேலே சொன்ன திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசால் திணிக்கப்படுபவை என்றும், இவை தொலைவில் இருக்கும் யாருக்கோ நன்மை செய்வதற்காக உள்ளூர் இயற்கைச் சூழலையும் விவசாயிகளையும் மீனவர்களையும் பாதிக்கக்கூடியவை என்றும் மக்கள் கருதுகிறார்கள். உள்ளூர் வாழ்வாதாரங்களையும் வருமான வாய்ப்புகளையும் அடையாளங்களையும் அழித்து, பிரம்மாண்ட வணிகத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான மத்திய அரசின் முயற்சியாக இவற்றைப் பார்க்கிறார்கள்.

இதற்கிடையே, சென்னை வெள்ளப் பெருக்கு (2015), வார்தா புயல் (2016), ஒக்கி புயல் (2017), கஜா புயல் (2018), சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் (2019) ஆகிய அதீதமான இயற்கைச் சீற்றங்கள் அதிகரித்துவரும் பருவநிலை சார்ந்த நெருக்கடியை நினைவூட்டி வருகின்றன. இத்தகைய பேரழிவுகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆற்றும் பலவீனமான எதிர்வினைகள் மத்திய அரசின் புறக்கணிப்பு, மாநில அரசின் சொதப்பல் என்னும் வாதங்களை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

கவலைக்குரிய இந்தப் பின்னணியில், திமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இளைஞர்களைத் தலைவர்களாகக் கொண்ட சுற்றுச்சூழல் பிரிவுகளைத் தமது கட்சிகளில் உருவாக்கியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இந்தப் பிரிவுகள் சூழலியல் குறித்த இந்தக் கட்சிகளின் முனைப்புகளைக் கூட்டுவதுடன் சூழலியல் பேரழிவின் மாபெரும் அபாயத்தை அரசியல்வாதிகள் உணரவும் உதவும். இந்தப் பிரிவுகளின் இளம் தலைவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் போன்ற அறிவார்த்தமான தலைவர்கள் எடுத்துரைக்கும் சமூக நீதி, சாதிய அதிகாரப் படிநிலைகள், முற்போக்குத் தமிழ் இயக்கங்களின் வரலாறு ஆகியவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல், தூய்மை, தகுதி ஆகிய கருத்தாக்கங்களில் மட்டுமே வேர்கொண்ட சுற்றுச்சூழலியமாக அமைந்து மேட்டிமைவாத அடக்குமுறையாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

எதிர்காலம் அச்சமூட்டுகிறது. கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும் என்று அமெரிக்கன் ஜியோஃபிசிக்கல் யூனியனின் இதழில் அண்மையில் வெளியான கட்டுரை ஒன்று எச்சரிக்கிறது. "பூமி தொட்ர்ந்து வெப்பமயமாகிவருவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் இருக்கட்டும்; ஏற்கனவே தெற்காசியாவின் சில பகுதிகள் வெப்பத்தால் உருவாகும் அபாயகரமான மன அழுத்தங்களை இப்போதே எதிர்கொண்டு வருகின்றன" என்றும் அந்தக் கட்டுரை கூறுகிறது.

பாரிஸ் ஒப்பந்தம் இலக்காக நிர்ணயித்திருக்கும் 1.5 செல்சியஸுக்குள் வெப்ப நிலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டாலும் தமிழகக் கடலோரப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அபாயகரமான வெப்ப அலைகள் உருவாகும்.

தண்ணீர்

பட மூலாதாரம், Getty Images

2020ஆம் ஆண்டில் உலகின் வெப்ப நிலை, உலகில் நவீன தொழிற்சாலைகள் உருவாவதற்கு முன்பு இருந்த சராசரி வெப்ப நிலையைக் காட்டிலும் 1.2 டிகிரி உயர்ந்திருந்ததாக உலக வானிலை அமைப்பு கூறுகிறது. இதே வேகத்தில் கழிவு வெளியேற்றப்பட்டால், உலக வெப்ப நிலை 2030ஆம் ஆண்டிற்குள் 1.5 டிகிரி என்னும் அபாயப் புள்ளியைத் தாண்டிவிடும்.

அடுத்த பத்தாண்டுகளுக்குக் கழிவு வெளியேற்றத்தை ஆண்டுக்கு 7.6 சதவீதம் என்னும் அளவில் குறைத்தால்தான் 1.5 டிகிரி என்னும் எல்லைக்குள் வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்தி, மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். 2020இல் உலகம் முழுவதும் பொது முடக்கம் அமலில் இருந்தபோதிலும் கழிவு வெளியேற்றம் வெறும் 6.4 சதவீதம்தான் குறைந்திருந்தது என்று நேச்சர் இதழ் குறிப்பிடுகிறது.

நவீனப் பொருளாதாரம், பூமியையே அச்சுறுத்தக்கூடிய கரிமக் கழிவுகளையும் சீரழிக்கும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களையும் அபாயகரமான வகையில் சார்ந்திருக்கிறது. 2019இல் 153 நாடுகளைச் சேர்ந்த 11,258 வல்லுநர்கள் "பருவநிலை நெருக்கடிநிலை குறித்த எச்சரிக்கை"யை விடுத்தார்கள்.

"மொத்த உற்பத்தி வளர்ச்சி, வசதி படைத்தோரின் நோக்கங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்தல், சமத்துவமின்மையைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் மானுட நல வாழ்வை மேம்படுத்துவதை நோக்கியதாக நமது இலக்குகள் மாற வேண்டும்" என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

ஹைட்ரோகார்பன் எடுத்தல், அதிவிரைவுச் சாலைகள், மாபெரும் துறைமுகங்கள் ஆகியவற்றுக்குப் பதிலாக வேளாண்மை, வனங்கள், மீன் வளம், தண்ணீர் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தமிழக அரசியல் அத்தகைய மாற்றத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது. மக்களின் அபிலாஷைகள், நிலத்துடனான உறவு ஆகிய மதிப்பீடுகளுடன் கூடிய அரசியல் என்பது ஆழமானது.

கட்சிகள், அரசியல்வாதிகள், தேர்தல் அறிக்கைகள் ஆகியவற்றின் சுற்றுச்சூழலியம் என்பது மேம்போக்கானது, கூடுதலான உழைப்பைக் கோருவது. காட்டுப்பள்ளித் துறைமுகத்தையும் எட்டு வழிச் சாலையையும் எதிர்க்கும் கட்சிகள் நிலக்கரியின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் அனல் மின் நிலையங்கள், கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், சென்னையில் இரண்டாவது விமான நிலையம் ஆகியவை குறித்த வாக்குறுதிகளை அளிப்பதில் உள்ள முரண்பாட்டை உணர்வதில்லை.

சமூகத்தின் முன் உள்ள பணி மிகவும் கடினமானது. சூழலைப் பாழாக்கக்கூடிய, ஆவேசமான ஈடுபாடு கொண்ட பொருளாதாரப் பாதையிலிருந்து முற்றிலுமாக விலகுவதற்கான மாற்றுப் பாதையை மக்கள் உருவாக்க வேண்டும். சூழல் சீர்குலைவைத் தவிர்ப்பதற்கான இந்தப் பாதை பொருளாதார ரீதியாகப் பாதகமானது என்பதால் இது மாபெரும் சவாலாக நிற்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: