நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா: மும்பை மருத்துவமனையில் சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் முன்னணி இந்தி சினிமா நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரோடு, மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதேபோல, தமிழ் திரைப்பட நடிகர் ஆர். மாதவன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மகாராஷ்டிரம், தமிழ்நாடு உள்ளிட்ட சில இந்திய மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது.
இந்திய அளவில், நேற்று (4.4.2021 ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 57,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அம்மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
விக்கி கெளசல், பூமி பெட்னெகர், ரன்பீர் கபூர், ஆமிர் கான், ஆலியா பட், கார்த்திக் ஆர்யன் என பல முன்னணி சினிமா பிரபலங்கள் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வரும் ஏப்ரல் 9-ம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளோடு இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட இருக்கின்றன. ஆனால் இப்போது கொரோனா அதிகரித்து வருவதால் போட்டிகள் திட்டமிட்டப்படி நடக்குமா என்கிற சந்தேகம் நிலவுகிறது.
சச்சினைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டிகளில் கலக்கிய சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பெருந்தொற்றுப் பிரச்னை தொடங்கியதில் இருந்து, இந்தியாவில் இதுவரை 1.24 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் 1.65 லட்சம் பேர் இந்த வைரஸால் உயிரிழந்து இருக்கிறார்கள்.
உலக அளவில் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம். முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும் இருக்கின்றன.
பிற செய்திகள்:
- தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா? என்ன சொல்கிறது தமிழக அரசு?
- தேர்தல் நாளில் அரசியல் கட்சியினர் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?
- பணம் பறிமுதலான தொகுதிகளில் தோ்தல் ரத்தாகுமா? தலைமை தோ்தல் அதிகாரி விளக்கம்
- வாக்காளர் அட்டை இல்லையா? ஓட்டு போட வேறு எந்த ஆவணத்தை பயன்படுத்தலாம்?
- சூயஸ் கப்பல் சம்பவத்தில் இலக்கு வைக்கப்பட்ட எகிப்திய பெண் கேப்டன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












