தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: ஐந்து ஆண்டுகளுக்குமுன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா அ.தி.மு.க? ஒரு விரிவான அலசல் #BBC_Exclusive

2016இல் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் அதிமுக நிறைவேற்றியது எத்தனை? #BBC_Exclusive

2016 சட்டமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க பொது செயலாளரும், அப்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா கிட்டத்தட்ட 300 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பெருந்துறையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் வெளியிட்டார்.

"மாநிலத்தின் நீராதாரங்களை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். உழவர் பாதுகாப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாணவர்கள் மேலும் பயனடையும் வகையில், அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினிக்கான இணைய வசதியும் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்து கொடுக்கப்படும். மகளிருக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஆட்டோக்கள் வாங்க மானியம் வழங்கப்படும்" என பெருந்துறை பொதுக்கூட்டத்தில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

அந்தத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு 136 இடங்களில் வெற்றிப் பெற்றது. அ.தி.மு.கவின் வெற்றிக்கு பெண்களை மையப்படுத்தி அக்கட்சி வெளியிட்ட வாக்குறுதிகளும் ஒரு பிரதான காரணமாக பார்க்கப்பட்டது.

அதன்பிறகு, ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தமிழக அரசியல் களம் இதற்கு முன்னர் கண்டிராத நிகழ்வுகளை எல்லாம் எதிர்கொண்டது.

பல திருப்பங்களுக்கு பிறகு 2017 பிப்ரவரி மாதத்தில்தான் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று கொண்டார். அவர் முதல்வராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டார்.

2016 தேர்தலில் அதிமுக கொடுத்த சுமார் 300 வாக்குறுதிகளின் நிலை என்ன என்பதை விரிவாக அலசி ஆராய்ந்தது பிபிசி தமிழ்.

ஜெயலலிதா

தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக தலைமையிலான அரசு நிறைவேற்றி உள்ளதா?

இதை ஆராய அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற அனைத்து வாக்குறுதிகளையும் நாம் கணக்கில் எடுத்து கொண்டோம்.

தமிழர்களின் வாழ்வை மேம்படுத்துவோம், விவசாயிகளின் வாழ்வை வளமாக்குவோம் போன்ற பொதுவான வாக்குறுதிகளை நாங்கள் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை. தேர்தல் அறிக்கையில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட சில வாக்குறுதிகளை நீக்கிவிட்டோம்.

ஆனால், நாங்கள் கணக்கில் எடுத்து கொண்ட 244 வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து அதற்கான ஆதார இணைப்புகளையும் கொடுத்துள்ளோம்.

அ.தி.மு.க கொடுத்த மொத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவை 19%, பணிகள் தொடர்ந்து நடப்பவை 44%, நிறைவேற்றப்படாதவை 8%, வாக்குறுதிகள் குறித்த தகவல் இல்லாதவை 23%, பிற வாக்குறுதிகள் 6% ஆகவும் இருக்கின்றன.

இதுபற்றிய விரிவான விவரங்கள் கீழே.

Please wait....

தயாரிப்பு: ஷதாப் நஸ்மி, கவுதமன் முராரி

தரவுகள் சரிபார்ப்பு: எம். மணிகண்டன்

ஒருங்கிணைப்பு: அறவாழி இளம்பரிதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :