புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோதி: நாராயணசாமி, காங்கிரஸ் ஆட்சி மீது கடும் விமர்சனம்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் 16 பேரும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் 9 பேரும் அதிமுக சார்பில் 5 பேரும் இந்த தேர்தலில் களம் காணுகிறார்கள்.
இதையொட்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "புதுச்சேரிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வந்தபோது ஏராளமான வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது கண்ட எழுச்சியில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரி மக்கள், மாற்றத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதை புரிந்து கொண்டேன்," என்றார்.
"ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு நான் சென்ற அஸ்ஸாம், மேற்கு வங்கம், இன்று சென்ற கேரளா, தமிழகம் தற்போது புதுச்சேரி யூனியன் பிரதேசம் என ஐந்து இடங்களிலும் தேசிய கூட்டணிக்கு ஆதரவாக மிகப் பெரிய அலை உருவாகியுள்ளது. புதுச்சேரியில் ஆட்சிமுறை சரியாகச் செயல்படாததால், இங்கு அனைத்து துறைகளிலும் மக்கள் நல திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருந்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களே வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்."
"எனக்கு அரசியலில் நிறைய அனுபவம் உள்ளது. நேரடி அரசியலில் பல ஆண்டுகளாக இருந்திருக்கிறேன், ஆனால் புதுச்சேரி அரசியல் தனித்துவமானது. அதற்கான காரணம் என்ன தெரியுமா? இங்கு ஆட்சியிலிருந்த ஒரு முதல்வருக்கே அவர் சார்ந்த கட்சியில் தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கவில்லை. அவர் எத்தனை ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக இருந்திருப்பார். அந்த முதல்வர், தான் சார்ந்த கட்சித் தலைவரின் செருப்பைத் தூக்கினார். அவர் கட்சித் தலைவரை மகிழ்விக்கத் தவறாக மொழிபெயர்ப்பு செய்தார். ஆனாலும் அவருக்கு தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கப்படவில்லை. இதில் இருந்தே கடந்த முறை மோசமான ஆட்சி நடைபெற்ற காரணத்தாலேயே முதல்வருக்குத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது தெரிகிறது," என்றார் நரேந்திர மோதி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"சொந்த தேர்தல் அறிக்கையைக் கூட காங்கிரஸ் கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை. இதுவரைக்கும் அக்கட்சியினர் என்ன செய்தார்கள் என்பது குறித்தும் அவர்களால் விளக்க முடியவில்லை. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும். புதுச்சேரியைப் பற்றி நினைக்கும் போது மகாகவி பாரதியார் நினைவிற்கு வருகிறார். புதுச்சேரி பூமி ஆன்மிகம் நிறைந்தது."
பிரதமர் ஆவாஸ் யோஜனாவின் கீழ் புதுச்சேரியில் இதுவரை 6000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 2,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நடைமுறை செய்து வருகிறது. மீனவர்கள் வளத்தை மேம்படுத்த நீல புரட்சியின் மூலமாகப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது," என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் பிரதமர் மோதி.

முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமி பேசுகையில், "இந்த தேர்தல் முக்கியமானது. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி ஒரு இருண்ட ஆட்சியாக இருந்தது. புதுச்சேரியை பத்தாண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டது. கடந்த முறை பிரதமர் நரேந்திர மோதி பிரசாரத்தில் பேசியபோது, காங்கிரஸ் முதல்வராக இருந்த நாராயணசாமி மட்டும் கடைசியில் தனியாக இருப்பார் என்று கூறினார். அதுபோலவே, தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு நாராயணசாமி தனியாக இருக்கிறார். கடந்த ஆட்சியில் ஒரு திட்டங்களைக் கூட அவரது நிர்வாகம் நிறைவேற்றவில்லை. மேலும் மத்திய அரசின் நல்ல திட்டங்கள் அனைத்தையும் முடக்கி விட்டார்," என்றார் ரங்கசாமி.
"கடந்த முறை குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவதாகக் கூறிய காங்கிரஸ் அரசு, 10 பேருக்குக் கூட வேலை கொடுக்கவில்லை. ரேஷன் கடையில் உள்ள ஊழியர்களுக்குச் சம்பளம் தரவில்லை. ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை," என்று குற்றம்சாட்டினார் ரங்கசாமி.
"காங்கிரஸ் கட்சியிலிருந்த சட்டப்பேரவை உறுப்பினர்களால் எதுவுமே செய்ய முடியாத காரணத்தால்தான் பெரும்பாலானோர் அந்த கட்சியில் இருந்து வெளியேறினர். நாராயணசாமி கொல்லைப்புறமாக்க வந்த காரணத்தால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. வரும் தேர்தலில் விழிப்புடன் இருக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதை மத்திய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது," என பேசினார் ரங்கசாமி.
பிற செய்திகள்:
- 'ஐ.நாவில் தமிழில் பேசியது ஒரு மகிழ்ச்சியான தருணம்' - தாராபுரத்தில் நரேந்திர மோதி பிரசாரம்
- தலைக் கவசம் அணியாத கர்ப்பிணியை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவல் அதிகாரி
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: உங்கள் தொகுதியில் வேட்பாளர் யார்?
- சூயஸ் கால்வாய் கப்பல்: முடிவுக்கு வந்தது நடுக்கடல் நெருக்கடி - புதிய தகவல்கள்
- புதையலுக்கு ஆசைப்பட்டு சுரங்கம் தோண்டியவர்கள் விஷவாயு தாக்கி பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












