எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கோரினார் திமுகவின் ஆ. ராசா - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

பட மூலாதாரம், A raja official facebook page
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் குறித்து தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது பேச்சுக்கு ஆ. ராசா மன்னிப்புக் கோரியுள்ளார்.
சமீபத்தில் தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பிரசாரக் கூட்டமொன்றில் பேசும்போது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசினார். அதில் அவர் பயன்படுத்திய சொற்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
"ஜனநாயகத்தைக் காப்பாற்ற சிறையில் இருந்தவர் ஸ்டாலின். மாவட்டப் பிரதிநிதி, பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர் எனப் படிப்படியாக உயர்ந்து தலைவரானவர். ஆட்சி நிர்வாகத்திலும் எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என உயர்ந்தார். இப்போது முதல்வராகப் போகிறார். அவர் திணிக்கப்பட்டவர் அல்ல. முறைப்படி பெண் பார்த்து, நிச்சயம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி, 300 நாட்கள் கழித்து சுகப் பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின்.
ஆனால், ஜெயலலிதா இறக்கும்வரை இ.பி.எஸை யாருக்கும் தெரியாது. இவர் ஊர்ந்துபோய் முதல்வரானார். அதிகாரத்தில் இருப்பதால் அவருக்குப் புகழ். ஓராண்டாக கொடுத்த விளம்பரத்தால் பத்திரிகைகள் அவரை மிகப் பெரிய தலைவரைப் போல சித்தரிக்கின்றன. இ.பி.எஸ்ஸுக்கு என்ன தகுதி, தியாகம் இருக்கிறது. பொதுவாழ்வில் அவர் எட்டியிருக்கிற தொலைவு என்ன? ஒன்றும் கிடையாது," என்று பேசினார் ஆ. ராசா.
தொடர்ந்து பேசிய அவர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே ஒப்பீடு செய்யக் குறிப்பிட்ட ஓர் உவமை கடும் விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளானது.
ஆ. ராசாவின் கருத்தை அ.தி.மு.கவினரும் பா.ஜ.கவினரும் கடுமையாக கண்டித்தனர். ஏற்கனவே, மு.க. ஸ்டாலினின் அந்தஸ்தையும் எடப்பாடி கே. பழனிசாமியின் அந்தஸ்தையும் ஒப்பிட்டு ஆ. ராசா பேசியிருந்த பேச்சும் கண்டனத்திற்குள்ளாகியிருந்தது.

ஆ. ராசாவின் பேச்சிற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் அக்கட்சியின் மகளிரணித் தலைவர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்தனர். இதற்குப் பிறகு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, இந்தப் பேச்சு குறித்துக் குறிப்பிட்டு கண்ணீர் சிந்தினார்.
இந்த நிலையில், தனது பேச்சுக்கு ஆ. ராசா மன்னிப்புக்கோரியுள்ளார். நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ. ராசா, தனது பேச்சு குறித்து மனம் திறந்து மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்தார்.
"முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டு, கலங்கினார் என்ற செய்தியை செய்தித்தாள்கள் வாயிலாகப் படித்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தமற்று சித்தரிக்கப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எனது பேச்சிற்காக எனது அடிமனதின் ஆழத்திலிருந்து வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணருவாரேயானால் மனம் திறந்த மன்னிப்பைக் கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை. முதல்வருக்கும் அவரது கட்சிக் காரர்களுக்கும் நடுநிலையாளர்களுக்கும் மீண்டும் குறிப்பிட விரும்புவது, எனது பேச்சு இரண்டு தலைவர்களைப் பற்றிய தனிமனித விமர்சனமல்ல. பொதுவாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த மதிப்பீடும், ஒப்பீடும்தான்" என்று ஆ. ராசா குறிப்பிட்டிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












