ஓலை குடிசையில் வாழும் இடதுசாரி வேட்பாளர் - கையில் ரூ. 3000, உழைப்பு மட்டுமே மூலதனம்

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓலை குடிசையில் வசித்து வருபவர்.பொதுவுடைமைவாதியான மாரிமுத்துவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1.75 லட்சம் மட்டுமே. தேர்தல் காலத்தில் பணப்பட்டுவாடா புகார்கள் அதிகரித்தவண்ணம் உள்ள நிலையில், தனது உழைப்பை நம்பி மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பாடுபடுகிறார் இவர்.
திருத்துறைப்பூண்டியில் முழு நேர கட்சி பணியாற்றும் மாரிமுத்து, தன்னை போல பல குடிசைவாசிகளின் வாழக்கைத்தரத்தை உயர்த்த பல போராட்டங்களை நடத்தி,அரசின் இலவச வீடு திட்டத்தின் கீழ் வீடு பெற்று கொடுத்திருக்கிறார். மாரிமுத்துவின் மனைவி ஜெயசுதா குத்தகை நிலத்தில் உழைக்கும் ஒரு விவசாய தொழிலாளி. கட்சிப் பணி போக மீதமுள்ள நேரத்தில் ஜெயசுதாவுக்கு உதவுகிறார் மாரிமுத்து.
தமிழக தேர்தலில் பணபலத்தை கட்டுப்படுத்த கவனத்தோடு செயல்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பற்றியும், தனது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றியும் அவர் பிபிசி தமிழிடம் பேசினார்.
''அதிமுக சார்பாக வழக்கறிஞர் சுரேஷ்குமார், அமமுக சார்பாக ரஜினிகாந்த் என்பவரும் போட்டியிடுகிறார்கள். திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் பணபலம் பற்றியோ, பிற கட்சி வேட்பாளர்கள் பற்றி எதுவும் சொல்வதிற்கில்லை. எங்கள் தொகுதியில் என் குடும்பத்தைப் போல பல விவசாய ஏழை குடும்பங்கள் உள்ளன. அரசின் திட்டங்கள் சென்றுசேராத குடும்பங்கள் உள்ளன. பல காலம் பண்ணையடிமையாக இருந்த குடும்பங்கள்அடிப்படையான பட்டா பெற முடியாமல் உள்ளன. இவர்களுக்கு பட்டா பெற்றுத்தருவது, கூலித்தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலைதிட்டத்தில் சம்பளம் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்வது போன்ற நியாயமான, சாத்தியமான வாக்குறுதிகளை தந்திருக்கிறேன்,''என்கிறார் மாரிமுத்து.

முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் மாரிமுத்து கட்சி நிதியை மட்டுமே வைத்து பிரசாரத்தை மேற்கொள்கிறார் இவர். ''எங்கள் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, கட்சியின் சார்பாக நலத்திட்ட பணிகளை செய்தேன். வறட்சி காலத்தில் நிவாரண உதவி கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டேன். நான் செய்த பணிகளை உணர்ந்த மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். அதோடு எங்கள் பிரசாரத்தில் உண்மைதன்மை இருப்பதால் வாக்குகள் எங்களுக்கு வந்துசேரும்,''என்கிறார் மாரிமுத்து.
பொருளாதார துறையில் பட்டப்படிப்பு முடித்த மரிமுத்து 1994ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
''அடித்தட்டு மக்களுக்கு வேலைசெய்வது, அவர்களின் வாழக்கைத்தரத்தை உயர்த்துவது மட்டுமே என் குறிக்கோள். அதற்கு என குடும்பம் பெரிதும் உதவுகிறது. என் மனைவி, மகள் மற்றும் மகன் மிகவும் உதவுகிறார்கள். இதுநாள்வரை என் கட்சியின் கொள்கையை பின்பற்றி வாழ்ந்திருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் ஆனாலும் அந்த வாழக்கை தொடரும்,''என்கிறார் அவர்.

மாரிமுத்து வேட்புமனு தாக்கல் செய்த வேளை அவரது சொத்து மதிப்பு பற்றிய விவரம் பெரிதும் பேசப்பட்டது. மாரிமுத்துவின் வங்கி கணக்கில் ரூ.58,000 உள்ளது. அவரது கையில் ரூ.3,000 வைத்திருப்பதாகவும், அவரது மனைவி ஜெயசுதாவின் வங்கி கணக்கில் ரூ.3,000 மற்றும் கையில் ரூ.1,000 இருப்பதாகவும் சொத்துவிவர பட்டியலில் மாரிமுத்து தெரிவித்துள்ளார். அதோடு அவரது மனைவியின் பெயரில் உள்ள பாரம்பரிய வீடு மற்றும் 75 சென்ட் நிலத்தின் மதிப்பீடு ரூ.1.75 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
1962ல்தொடங்கி 11 முறை இடதுசாரி கட்சிகள் திருத்துறைப்பூண்டியில் வெற்றிபெற்றுள்ளன. 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடதுசாரிகள் இருந்ததால், திருத்துறைப்பூண்டியில் திமுக வென்றது. தற்போது திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதால், தங்கள் கட்சிக்கு சாதகமான முடிவு வரும் என மாரிமுத்து எதிர்பார்க்கிறார்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி திட்டம் கோவிட்-19 பரவல் அதிகரிப்பதை ஏன் தடுக்கவில்லை?
- கோவிட்19 தொற்று புரளிக்குப் பின் இறந்த தான்சானியா அதிபர்
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












