சென்னை பிரபல நகைக்கடையில் சுமார் 1000 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images
சென்னையின் பிரபல நகைக்கடை மற்றும் தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1.2 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது.
மார்ச் நான்காம் தேதியன்று சென்னையை சேர்ந்த முன்னணி தங்க விற்பனை நிறுவனம் ஒன்றிலும் பனகல் பார்க் பகுதியில் ஷோ ரூம் வைத்துள்ள மிகப் பெரிய நகைக்கடையிலும் அவற்றின் கிளைகளிலும் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தியது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள இந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான 27 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
தங்க விற்பனை நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அந்த நிறுவனம் கணக்கில் வராத வகையில் ரொக்கமாக பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருப்பதும் தனது கிளைகளில் இருந்து கடன் வாங்கியதைப் போல பொய்க் கணக்குக் காட்டியிருப்பதும் தெரியவந்தது. மேலும், பொருளை வாங்குவதற்கு முன்பணம் கொடுப்பதைப் போல போலிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருந்ததோடு, பண மதிப்பிழப்புக் காலத்தில் விளக்கம் சொல்ல முடியாத அளவுக்கு பணம், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. விளக்கம் தர முடியாத அளவுக்கு பெருந்தொகையான பங்குகள் வாங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
நகைக்கடையிலும் அதன் கிளைகளிலும் நடத்தப்பட்ட சோதனையைப் பொறுத்தவரை, உள்ளூரில் வட்டிக்கு விடுபவர்களிடமிருந்து ரொக்கமாக கொடுக்கல் - வாங்கல் நடைபெற்றிருப்பதோடு, பில்டர்களுக்கு ரொக்கமாக கடன் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரியல் எஸ்டேட் துறையில் ரொக்கம் முதலீடு செய்யப்பட்டிருந்ததோடு, கணக்கில் வராமல் தங்கம் பெருமளவில் வாங்கப்பட்டிருந்தது. திரும்ப வராத கடன் என பொய்க் கணக்குக் காட்டப்பட்டிருந்தது, பழைய நகையை வாங்கிக்கொண்டு, புதிய நகையை அளிக்கும்போது, பெரிய அளவில் சேதாரம் வசூலிக்கப்பட்டிருந்தது ஆகியவையும் இந்த சோதனையில் தெரியவந்தன.
இந்தச் சோதனையில் ஒட்டுமொத்தமாக கணக்கில் வராத 1000 கோடி ரூபாய் கண்டறியப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரொக்கம் 1.2 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை தொடர்ந்து நடந்துவருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








