ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய 4 பேர்: குலுக்கல் முறையில் மணமகன் தேர்வு

ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய 4 பேர்: குலுக்கல் முறையில் மணமகன் தேர்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

(இன்று மார்ச் 07, 2021, ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

உத்தர பிரதேசத்தில் கிராமம் ஒன்றில், பெண்ணொருவரை 4 இளைஞர்கள் திருமணம் செய்ய விரும்பியதாகவும் இதனால் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் மணமகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அதே ஊரைச் சேர்ந்த 4 இளைஞர்களுடன் ஊரை விட்டு தப்பி சென்றார். மீண்டும் அப்பெண்ணை கிராமத்திற்கு அழைத்து வந்த ஊர்க்காரர்கள் கிராம பஞ்சாயத்தை கூட்டி அந்த பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று குலுக்கல் முறையில் சீட்டு போட்டு தேர்வு செய்துள்ளனர்.

அசிம் நகரை சேர்ந்த 4 இளைஞர்களும் அருகாமையில் உள்ள தண்டா போலீஸ் நிலைய எல்லையைச் சேர்ந்த அந்தப் பெண்ணை காதலித்துள்ளனர். 4 பேரும் அந்த பெண்ணுடன் அவர்களின் கிராமத்திற்கு வந்து, இரண்டு நாட்களுக்கு அப்பெண்ணை தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர். இதற்கிடையே தங்கள் மகளை காணாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவரின் பெற்றோர்கள் முயற்சித்த போது இளைஞர்களின் கிராமத்தினர் அவர்களை தடுத்துள்ளனர்.

இதற்கிடையே கிராம மக்கள் அந்த 4 இளைஞர்களிடமும் தனித்தனியாக பேசி யாராவது ஒருவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 3 நாட்களாக இளைஞர்களிடம் பேசியும் யாரும் ஒருமித்த கருத்து ஒற்றுமைக்கு வராமல் இருந்துள்ளனர். மேலும் யாராவது ஒரு இளைஞரை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண்ணிடம் ஊர்மக்கள் பேசிய போதும் அவரும் யாரையும் தேர்வு செய்யவில்லை,

இதனையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் பெண் எந்த இளைஞருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சீட்டு குலுக்கி போட்டு முடிவு செய்து கொள்ளலாம் என பஞ்சாயத்தார் ஒரு முடிவுக்கு வந்தனர். இதற்கு அனைத்து தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து 4 இளைஞர்களின் பெயரையும் எழுதி மடித்து ஒரு குவளையில் போட்டனர். பின்னர் அக்கிராமத்தில் இருந்த சிறுவன் ஒருவனை அதில் இருந்து சீட்டு எடுக்குமாறு அவர்கள் கூறியதன் பேரில் அதில் ஒரு இளைஞர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்" என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Presentational grey line

பிராந்திய மொழிகளில் உயா்நீதிமன்ற தீா்ப்புகள்: குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

குடியரசுத் தலைவா்

பட மூலாதாரம், Getty Images

முக்கியத் தீா்ப்புகளை சில உயா்நீதிமன்றங்கள் பிராந்திய அல்லது உள்ளூா் மொழிகளில் வழங்கி வருவதை வரவேற்ற குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், இதேபோன்று மற்ற உயா்நீதிமன்றங்களும் உள்ளூா் மொழிகளில் தீா்ப்புகளை மொழிபெயா்த்து வழங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"அகில இந்திய சட்ட கல்வி இயக்குநா்கள் மாநாடு மத்திய பிரதேசம் மாநிலத்தில் சனிக்கிழமை அன்று தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து பேசிய குடியரசுத் தலைவா், பொது முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்புகளை உச்சநீதிமன்றம் 9 பிராந்திய மொழிகளில் மொழிபெயா்த்து வெளியிட்டு வருவது வரவேற்கத்தக்கது. சில உயா்நீதிமன்றங்களும் முக்கிய தீா்ப்புகளை பிராந்திய அல்லது உள்ளூா் மொழிகளில் வெளியிட்டு வருகின்றன. இதேபோல், பிற உயா்நீதிமன்றங்களும் முக்கிய தீா்ப்புகளை உள்ளூா் மொழிகளில் மொழி பெயா்த்து வழங்க வேண்டியது அவசியம்" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

அயோத்தி ராமர்கோயில் நன்கொடை வசூல் நிறைவு

அயோத்தி ராமர் கோயில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு பிப்ரவரி 4-ம் தேதி வரை 2500 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் அறிவித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.

அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமர் மோதி அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவதற்காக, அறக்கட்டளை, பொது மக்களிடம் நன்கொடைகளை பெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டுவதற்கு பல்வேறு இந்து அமைப்புகளும் நிதி திரட்டி வருகின்றன. கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு பிப்ரவரி 4-ம் தேதி வரை 2500 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது.

கடந்த 45 நாட்களில் நடந்த இந்த நிதி வசூல் போதுமான அளவு இருப்பதால் நன்கொடை வசூல் இயக்கம் நிறைவடைந்ததாக விஸ்வ ஹிந்து பரிஷத் கூறியுள்ளது. அதேசமயம் இனிமேல் நன்கொடை அனுப்ப விரும்புவர்கள் தீர்த்த ஷேத்திர அறக்கட்டகளையின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: