"என்னால் தமிழ் மொழியை கற்க முடியவில்லை" - நரேந்திர மோதி வருத்தம்

(உலக, இந்திய மற்றும் தமிழக அளவிலான செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.)

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நரேந்திர மோதி

உலகம் முழுவதும் பிரபல மொழியாக உள்ள தமிழை கற்க முடியாதது தனக்கு வருத்தமளிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் என்றழைக்கப்படும் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே பிரதமர் மோதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த அபர்ணா ரெட்டி என்பவர் தன்னிடம், "நீங்கள் பல ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறீர்கள், பல ஆண்டுகளாக முதல்வராக இருந்தீர்கள். இதில் ஏதாவது விட்டுப்போனதாக நீங்கள் எப்போதாவது நினைத்தத்துண்டா?" கேட்டதாகவும் அவரது கேள்வி எளிமையானதாகத் தோன்றினாலும், ஒரு வகையில் கடினமானதாக இருந்ததாகவும் பிரதமர் மோதி கூறினார்.

"நான் இதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன், எனது குறைகளில் ஒன்று, உலகின் பழமையான மொழியான தமிழைக் கற்க என்னால் அதிக முயற்சி எடுக்க முடியவில்லை என்பதுதான்; என்னால் தமிழ் மொழியைக் கற்க முடியவில்லை. அது ஒரு அழகான மொழி, இது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. தமிழ் இலக்கியத்தின் தரம் மற்றும் அதில் எழுதப்பட்ட கவிதைகளின் ஆழம் குறித்து பலர் என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார்கள். இந்தியா பல மொழிகளின் நிலம், இது நம் கலாசாரத்தையும் பெருமையையும் குறிக்கிறது" என்று பிரதமர் தனது உரையின்போது குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து கோடைகாலத்திற்காக மழைநீரை சேமிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், "நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வார்வதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். இயற்கை அளிக்கும் தண்ணீரை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நீரானது நமக்கு இயற்கை அளித்த கூட்டு பரிசு. அதனை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நீரை பாதுகாக்கும் கூட்டு முயற்சி திருவண்ணாமலையில் நடக்கிறது. அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக மூடப்பட்ட கிணறுகளை புதுப்பித்து வருகின்றனர்" என்று கூறினார்.

ஸ்டாலின் விருப்ப மனுத்தாக்கல்: மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், DMK

படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

2011, 2016 ஆகிய இரண்டு தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள ஸ்டாலின், தொடர்ந்து அவரது தொகுதியில் நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது அதே தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் விருப்ப மனுவை மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

முன்னதாக திமுகவினர் பலரும் ஸ்டாலின் கொளத்தூர் பகுதியில் போட்டியிடவேண்டும் என்றும் அவரது மகனும், திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் கோரி விருப்பம் மனு அளித்திருந்தனர்.

கடந்த வாரம், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். தற்போது ஸ்டாலின் அவர் முன்னர் போட்டியிட்ட தொகுதியில் தேர்தலை சந்திக்க முடிவுசெய்துள்ளார்.

1984ல் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார் ஸ்டாலின். தற்போது 2021ல் அவர் ஒன்பதாவது முறையாக நேரடி தேர்தலில் பங்குபெறுகிறார் என்பது குறிப்பிடதக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :