தமிழ்நாடு பட்ஜெட் 2021: தமிழக அரசின் கடன் ரூ. 5.7 லட்சம் கோடியாக உயர்வு; கூட்டத்தொடரைப் புறக்கணிக்க தி.மு.க. முடிவு

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை மாநில துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்தக் கூட்டத் தொடரைப் புறக்கணிக்கப்போவதாக தி.மு.க. அறிவித்து, வெளிநடப்புச் செய்துள்ளது.
தற்போது தாக்கல்செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையின்படி, தமிழகத்தின் கடன் 5.7 லட்சம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அவர் நிதி நிலை அறிக்கையை வாசிக்க சபாநாயகர் அழைத்தவுடன், தி.மு.கவின் துரைமுருகன் எழுந்து தங்களைப் பேச அனுமதிக்க வேண்டுமெனத் தெரிவித்தார். ஆனால், சபாநாயகர் அதனை ஏற்கவில்லை.
"உங்களுக்கு மைக் கொடுக்க முடியாது. பேச வேண்டியதைப் பேசிவிட்டுக் கிளம்புங்கள்" என்று பதிலளித்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தி.மு.க. உறுப்பினர்களுக்கு நாளை வாய்ப்பு அளிப்பதாகக் கூறிய சபாநாயகர், நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கலாம் என்று தெரிவித்தார்.
இதற்குப் பிறகும் தங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென தி.மு.கவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து நிதிநிலை அறிக்கையை வாசித்தார். இதையடுத்து தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.
"பினாமிகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள்" - தி.மு.க
அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் பொதுச் செயலாளர் துரைமுருகன், "தமிழக நிர்வாகத்தையும் நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக்கிய ஆட்சி, இந்த அ.தி.மு.க. ஆட்சி. ஆகவே இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையை கண்டித்து வெளிநடப்புச் செய்திருக்கிறோம். கடன் வாங்கி வாங்கி, தமிழ்நாட்டின் கடன் தொகை 5.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடன் வாங்கி, மக்களுக்கு நன்மை செய்யவில்லை. டென்டர் விட்டு பினாமிகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதுதான் பழனிசாமிக்குத் தெரிந்த நிதி நிர்வாகம்."

பட மூலாதாரம், Tndipr
"கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக பண உதவி செய்யாமல், தேர்தல் நெரக்கத்தில் பணம் கொடுக்கிறார்கள். தேர்தல் முன்பு பணிகளை முடிக்க முடியாது என்று தெரிந்தும், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40,000 மேல் மதிப்புள்ள டெண்டர்களைவிட்டு அரசு கஜானாவை காலிசெய்துள்ளார்கள்."
"தமிழ்நாட்டின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு மேலாக பின்னோக்கிச் சென்றுவிட்டார்கள். தமிழக நிதி வரலாற்றில் பன்னீர்செல்வமும் பழனிசாமியும் அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அனைத்துத் துறைகளிலும் அவல ஆட்சியைத் தந்துவிட்டுச் செல்பவர்களின் கடைசி நிதிநிலை அறிக்கை இது" என்று குற்றம்சாட்டினார். கூட்டத் தொடரை தி.மு.க. முழுமையாகப் புறக்கணிக்குமெனவும் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழக நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் தொகை ரூ. 5.7 லட்சம் கோடியாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியாண்டில் 84,686 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













