கொரோனாவுக்கு பதஞ்சலி ஆயுர்வேத மருந்து: மீண்டும் 'கொரோனில் கிட்' அறிமுகம் செய்தார் ராம்தேவ்

பட மூலாதாரம், Getty Images
(இன்று 20.02.2021, சனிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
கொரோனாவுக்கு பதஞ்சலி ஆயுர்வேத மருந்தான 'கொரோனில் கிட்டை' பாபா ராம்தேவ் அறிமுகம் செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
"'கோவிட் 19' எனப்படும் கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது. இந்த நோய்த்தொற்றுக்கு 'கொரோனில்' என்ற ஆயுர்வேத மருந்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது.
இந்த மருந்துக்கான அறிவியல் ஆதாரங்கள் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சை உருவானது. இதையடுத்து மத்திய ஆயுஷ் அமைச்சகம், கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது என்று மட்டும் கூறியது.
இந்நிலையில் தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு அந்த மருந்து மேம்படுத்தப்பட்டு 'கொரோனில் கிட்' என்ற பெயரில் அறிவியல் ஆதாரங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனில் கிட்டில் 2 வகை மாத்திரைகள் மற்றும் மூக்கு சொட்டு மருந்துகள் உள்ளன. இந்த மருந்துக்கு இந்த முறை உலக சுகாதார நிறுவனத்தை பின்பற்றி மத்திய ஆயுஷ் அமைச்சகமும் அங்கீகாரம் அளித்துள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் அங்கீகார சான்றிதழுக்கான நகலும் நேற்று பத்திரிகையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற இதன் அறிமுக விழாவில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம் தேவுடன் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், நிதின் கட்கரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விழாவில் பாபா ராம்தேவ் பேசும்போது, "இந்த இயற்கை மருந்து 3 முதல் 7 நாட்களுக்குள் கொரோனா தொற்று உள்ளவர்களை 100 சதவீதம் குணப்படுத்தும். இது நம் நாட்டின் ஆதாரப்பூர்வமான முதல் மருந்து" என்றார்.
சோதனை அடிப்படையில் நூறு பேருக்கு அளிக்கப்பட்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இது, உலகின் 158 நாடுகளுக்கு ஏற்றுமதியாக உள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு தலைவர் டாக்டர் அனுராக் வார்ஷ்னே தலைமையிலான தயாரிப்பு குழுவுக்கு பேராசிரியர் பல்பீர்சிங் தோமர், ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் உதவியுள்ளனர்" என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 பேர் கொலை வழக்கு: தாயாரின் மரண தண்டனையை குறைக்க மகன் வேண்டுகோள்

பட மூலாதாரம், SURAJ
உத்தர பிரதேசத்தின் அம்ரோகா நகரை சேர்ந்தவர் ஷப்னம். இவரது காதலர் சலீம். தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காதலர் சலீமுடன் சேர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர் அவர்கள் அனைவரையும் ஷப்னம் கொலை செய்தார்.
இது பற்றிய வழக்கு விசாரணையில் ஷப்னம், சலீம் இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டும், உச்ச நீதிமன்றம் 2015-ம் ஆண்டும் உறுதி செய்தன.
ஷப்னம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. மதுராவில் உள்ள சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது
எனினும், அவரது தூக்கு தண்டனைக்கான நாள் மற்றும் நேரம் பற்றி அம்ரோகா நீதிமன்றம் விவரங்களை இதுவரை வெளியிடவில்லை. இந்தியாவில் சுதந்திரத்துக்கு பிறகு முதல் முறையாக ஒரு பெண் தூக்கிலடப்பட உள்ளார்.
இந்நிலையில் ஷப்னமின் மகன் முகமது தாஜ் தனது தாயாரின் மரண தண்டனையை குறைக்கும்படி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது தாயாரை நான் நேசிக்கிறேன். குடியரசுத் தலைவருக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். அவரது மரண தண்டனை குறைக்கப்பட வேண்டும். எனது தாயாருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும். மன்னிப்பு வழங்குவது என்பது அவரது முடிவு. ஆனால் எனக்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.
உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகரில் உஸ்மான் சைபி என்பவரது பாதுகாப்பில் முகமது தாஜ் வசித்து வருகிறார். இதனிடையே தன்னுடைய மரண தண்டனையை குறைக்க வேண்டுமென ஷப்னமும், உத்தரபிரதேச மாநில கவர்னருக்கு கருணை மனு அனுப்பி உள்ளார் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபுக்கு கலைமாமணி விருது

பட மூலாதாரம், KJR STUDIOS
2019-2020-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெறுபவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்த், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா, சின்னத்திரை நடிகர்கள் நந்தகுமார், சாந்தி வில்லியம்ஸ், நித்யா, சண்டை பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகோடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2019-2020-ம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பட்டியலையும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் 2019-ம் ஆண்டுக்கான சிறப்பு கலைமாமணி விருது, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பாடகி பி.சுசீலா, நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர் ஆகியோருக்கும் 2020-ம் ஆண்டுக்கான சிறப்பு கலைமாமணி விருது பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி, நடன கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது."

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













