`வாத்தி ரெய்டு' முதல் `இன்ஸ்டன்ட்' தீர்வு வரை! சமூக வலைதளங்களில் வைரலாகும் திருப்பூர் ஆட்சியர்

திருப்பூர் கலெக்டர்
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு, ஆன்லைனில் உடனுக்குடன் பதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் சமூக வலைதள அணுகுமுறை, மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாத்தி ரெய்டும் ஆட்சியரின் ரெய்டும்!

காட்சி 1

திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரி. சமூக வலைதளங்களில் `வாத்தி ரெய்டு' என்ற பெயரில் வலம் வருகிறார். தீவிர விஜய் ரசிகரான இவர், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி பதிவிட்ட ட்வீட் ஒன்று வைரலானது. அவர் தனது பதிவில், `என் தங்கை திருப்பூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு இன்று அரையாண்டுதேர்வு. கடந்த ஆண்டிலிருந்து எங்களால் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியவில்லை.. அதனால் பள்ளியிலிருந்து தேர்வுக்கான லிங்க்கை அனுப்பவில்லை' எனப் பதிவிட்டிருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலக டுவிட்டர் கணக்குக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனின் கவனத்துக்கு வந்தது.

அடுத்த சில நிமிடங்களில், `தேர்வுக்கான லிங்க் மாணவிக்குச் சென்று சேர்ந்துவிட்டது' என ஆட்சியர் பதிவிட்டார். வாத்தி ரெய்டை, மாவட்ட ஆட்சியரின் ரெய்டாகவே சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டது.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

காட்சி 2:

திருப்பூர்

திருப்பூர் சிக்கினாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்த தரணேஷ் என்ற மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் கொடுத்த சர்ப்ரைஸ் இது.

பேருந்து வசதியில்லாத அப்பகுதியில் உள்ள ஓடை முழுவதும் தண்ணீர் நிரம்பி ஓடும். மழைக் காலத்தில் அந்த ஓடையைத் தாண்டி மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதே பெரும் போராட்டமாக இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக, சமூக வலைதளம் மூலமாகவே அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, 10 தினங்களுக்குள் பேருந்து வசதியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் விஜய கார்த்திகேயன். இதனையறிந்த தரணேஷ், ` உங்கள் உத்தரவின்பேரில் எங்களுக்குப் பேருந்து வசதி கிடைக்கவுள்ளது. உங்களுக்கு நேரமிருந்தால் எங்களுக்காக வரும் பேருந்தை நீங்கள் துவக்கி வைக்க வேண்டும். உங்களை நேரில் காண ஆவலாக இருக்கிறோம்' எனக் கைப்பட எழுதிய கடிதத்தை ட்விட்டரில் பதிந்தார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது.

காட்சி 3

திருப்பூர் கலெக்டர்

கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய காலகட்டத்தில் திருப்பூரில் உள்ள இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதற்கு முடிவுரை எழுத நினைத்த மாவட்ட ஆட்சியர், `திருப்பூர் மக்களே.. நாளை மிக முக்கியமான நாள். இறைச்சிக் கடைகளில் தயவு செய்து கூடாதீர்கள். நாளை காலை வீதிகளில் உங்கள் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருப்பேன்' எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், #GiveupChallenge என்ற ஒன்றையும் வெளியிட்டார்.

அதன்படி, `நாளை யாரெல்லாம் வீட்டில் இருக்கிறீர்களோ, எங்களுக்கு உதவுவதற்காக உங்களது விருப்பமான உணவை விட்டுக் கொடுக்கிறீர்களோ, உங்களின் சுயக் கட்டுப்பாடு, சுய தியாகம் குறித்துப் பதிவிட்டு எனக்குப் பகிருங்கள். நீங்கள் தயாரா?' எனச் சவால்விட்டார். இதனை ஏற்றுக் கொண்ட பலரும், தங்கள் வீட்டில் சமைத்த உணவை புகைப்படம் எடுத்து ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனின் இந்தச் சவாலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

- இவையெல்லாம் உதாரணங்களே. பணமதிப்பிழப்பை அறியாமல் வீட்டிலேயே பெரும் தொகையை சேர்த்து வைத்திருந்த மூதாட்டிகளுக்கு ஓய்வூதியத் தொகை கிடைக்க உதவியது, மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவது, கொரோனா தடுப்பூசி பயத்தை அகற்ற மாநிலத்திலேயே முதல் ஆட்சியராக ஊசி போட்டுக் கொண்டது, உடற்பயிற்சியை வலியுறுத்தும் பிட்னஸ் வீடியோக்கள் என விஜய கார்த்திகேயனின் செயல்பாடுகளுக்கு தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.

``சமூக வலைதளங்கள் மூலமாக குறைகளைத் தீர்ப்பது எளிதாக இருக்கிறதா?" என ஆட்சியர் விஜய கார்த்திகேயனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

`` பணியில் சேர்ந்த நாள் முதலாக சமூக வலைதளங்கள் மூலமாக ஏராளமான கோரிக்கைகளை எதிர்கொண்டு வருகிறேன். சமூக வலைதளங்கள் மூலமாக அதனை உடனுக்குடன் தீர்த்து வைக்க முடிகிறது. `மாவட்ட ஆட்சியரை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்' என்ற எண்ணம் மக்களுக்குச் சென்று சேர வேண்டும். அப்படியிருந்தால் அதிகாரிகள் இன்னும் கூடுதல் விழிப்புடன் செயல்படுவார்கள். அரசாங்கத்திடம் புகார் கொடுத்தால் தாமதமாகத்தான் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தை மாற்றுவதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. அதனை அடிப்படையாக வைத்தே செயல்படுகிறோம்" என்கிறார்.

திருப்பூர் கலெக்டர்

தொடர்ந்து பேசுகையில், ``உடுமலைப் பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தினோம். சமூக வலைதளத்தில் எங்களின் அறிவிப்பைப் பார்த்து 15,000 பேர் பங்கேற்றார்கள். அதில், 7,000 பேருக்கு வேலை உறுதியானது. அன்றைக்கே 3,500 பேருக்கு பணி நியமன உத்தரவு சென்று சேர்ந்தது. இந்த முகாமைக் கேள்விப்பட்டு கேரளாவில் இருந்தெல்லாம் இளைஞர்கள் வந்திருந்தார்கள். கோவிட் நேரத்தில் பொதுமக்களை எளிதாகத் தொடர்பு கொள்வதற்கு சமூக வலைதளங்களே உதவியாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில் வீட்டுக்கு வீடு காய்கறிகளையும் மருந்துகளையும் கொண்டு சேர்ப்பதற்கு எங்களுக்கு உதவியாக இருந்தன. அதேபோல், தன்னார்வலர்களை எளிதாக ஒருங்கிணைக்கவும் முடிந்தது" என்கிறார்.

`சமூக வலைதளத்தை அறியாத மக்கள் பலரும் பல மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்துக்குத் தொடர்ந்து படையெடுப்பதையும் பார்க்க முடிகிறதே?' என்றோம். `` சமூக வலைதளம் மட்டுமல்லாமல் நேரடியாகப் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களில் ரேசன் கார்டு பெயர் மாற்றம் உள்பட பல்வேறு சான்றுகளை சில மணித்துளிகளில் விநியோகித்து வருகிறோம். அந்தவகையில் இதுவரையில் நூற்றுக்கணக்கான சான்றிதழ்களை கொடுத்துள்ளோம். அரசின் திட்டங்களும் உதவிகளும் மக்களுக்கு விரைந்து சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர்ப்பு முகாம்களில் காத்துக் கிடக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், திருப்பூர் ஆட்சியரின் `இன்ஸ்டன்ட்' தீர்வு அணுகுமுறை வரவேற்பைப் பெற்றுள்ளது.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: