புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: "எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது; அதை நிரூபிப்போம்"

பட மூலாதாரம், Getty Images
(பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! இந்திய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.)
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறி வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் விதிமுறைகள் உட்பட்டு செயல்படுவோம் - என்றும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "எங்களை பொறுத்தவரை காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களின் கோரிக்கை நியாயமானது அல்ல. எதிர்க்கட்சிகளின் பலத்தை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். எங்களுடைய கூட்டணி பலமாக இருக்கிறது. எங்களுக்கு பெரும்பான்மை இருக்கின்ற காரணத்தால், எந்த அளவிற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளதோ, அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம்," எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று (பிப்ரவரி 16, செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ.ஜான்குமார் அவரது பதவியை ராஜிநாமா செய்தார். அதற்கான ராஜிநாமா கடிதத்தைச் சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து வழங்கினார். அடுத்தடுத்து, நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்தது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசை கலைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "பிரதமர் நரேந்திர மோதியும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் தொடர்ந்து நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் அரசிற்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். ஆட்சியை மாற்றுவதற்கும், கலைப்பதற்கும் முயற்சி எடுக்கின்றனர். இன்னும் இரண்டு வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய வைத்து, ஆட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையை கலைத்து மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை செய்யவிருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்து, கடந்த ஜனவரி மாதம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து புதுச்சேரி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், அவரது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ராஜிநாமா கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ஆட்சியை இழக்கிறதா நாராயணசாமி அரசு?
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 11இல் இருந்து தற்போது 10ஆக குறைந்துள்ளது. குறிப்பாக புதுச்சேரியை ஆட்சி செய்யக்கூடிய அரசின் பெரும்பான்மை 16ஆக இருக்கும் நிலையில், தற்போது காங்கிரஸ், திமுக மற்றும் சுயேட்சை ஆதரவு உட்பட 14 தொகுதிகளைக் காங்கிரஸ் கூட்டணி அரசு கைவசம் வைத்துள்ளது.
இதேபோல் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4 மற்றும் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் உட்பட 14 எண்ணிக்கையை கொண்டுள்ளது. தற்போது புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி இருவரும் சமநிலையில் இருப்பதால், நாராயணசாமி தலைமையிலான ஆட்சி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய புதுச்சேரியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர், "புதுச்சேரி அரசு தற்போது இழுபறியில் இருக்கிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இருவருக்கும் தலா 14 சீட்டுகள் இருக்கின்றன. புதுச்சேரி காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டது. மேற்கொண்டு சட்டமன்றத்தைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தினால், சபாநாயகர் இதுபோன்ற இழுபறியைச் சமாளிக்க சிறப்பு வாக்குரிமை உண்டு (Casting vote) அதன் அடிப்படையில் அவர் வாக்களித்தால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழாமல் தப்பிக்கும்.
தற்போது எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை நிரூபிக்க வலியுறுத்தும் வரை இந்த ஆட்சியை நாராயணசாமி தொடரலாம். ஆட்சி கவிழும் பட்சத்தில் துணை ஆளுநரை முதல்வர் சந்தித்து ராஜிநாமா கடிதம் கொடுத்தாலும் கூட, அடுத்தகட்ட மாற்று ஏற்பாடு செய்யும் வரை இந்த பதவியை தொடரலாம் என ஆளுநர் கூற வாய்ப்பிருக்கிறது," என்று கூறினார்.

2009 தேர்தலில் ப. சிதம்பரம் வெற்றிபெற்றது செல்லும்: உயர்நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இருந்து ப. சிதம்பரம் வெற்றிபெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ப. சிதம்பரமும் அ.தி.மு.கவின் சார்பில் ராஜ கண்ணப்பனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப. சிதம்பரம் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால், இந்த வெற்றி செல்லாது என ராஜகண்ணப்பன் வழக்குத் தொடர்ந்தார். தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கவிருந்த நிலையில், மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு சிதம்பரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகவே இந்த வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டுமென ராஜகண்ணப்பன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென ப. சிதம்பரம் ஒரு இடை மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2019ஆம் ஆண்டிலிருந்து இந்த வழக்கு தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வந்தது. 2020 டிசம்பர் 10ஆம் தேதி வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (பிப்ரவரி 15, செவ்வாய்க்கிழமை) நீதிபதி புஷ்பா சத்யநாராயணா தீர்ப்பளித்தார்.
அதில், ப. சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகளை ராஜகண்ணப்பன் நிரூபிக்கவில்லையென்று கூறி, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் ப. சிதம்பரம் 3,34,348 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் 3,30,994 வாக்குகளைப் பெற்றார். இதனால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப. சிதம்பரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவை அறிவிக்கும்போது குழப்பம் நிலவியதாக அ.தி.மு.க. குற்றம்சாட்டியது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













