You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி சென்னை வருகை: சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகும் GoBackModi ஹேஷ்டேக்
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர இன்று (பிப்ரவரி 14, ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னை வந்தடைந்தார்.
விமான நிலையத்திலிருந்து அடையாறில் உள்ள ராணுவ தளத்துக்கு ஹெலிகாஃப்டரில் சென்ற அவர், அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு காரில் சென்றார். வழிநெடுகே கூடியிருந்த பொது மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த, நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இன்று மதியமே கேரளாவின் கொச்சி புறப்படும் அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோதியின் தமிழக வருகை மற்றும் கேரள வருகையை எதிர்க்கும் விதத்தில், GoBackModi மற்றும் PoMoneModi என இரண்டு ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்திய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. மேலும், இதற்கு போட்டியாக, மோதியின் வருகையை ஆதரிக்கும் தொனியில் TNWelcomesModi மற்றும் KeralaWelcomesModi என்கிற ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன.
சென்னை, கொச்சின் பயணம்
பிரதமர் நரேந்திர மோதி இன்று (2021 பிப்ரவரி 14, ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக, தனது இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழியிலும், மலையாளத்திலும் ட்விட் செய்திருந்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை முன்னிட்டு சென்னையில் சுமார் 10,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், 4,486 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களைப் பிரதமர் மோதி தொடங்கி வைக்க உள்ளார். மேலும், 3, 640 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கும் அவா் அடிக்கல் நாட்டுகிறாா்.
சென்னையில், இன்று காலை 11:15 மணியளவில், பிரதமர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், அர்ஜூன் போர் பீரங்கியை (எம்கே-1ஏ) இந்திய ராணுவத்துக்கு சமர்பிக்கிறார்.
சென்னை நகர மக்கள் அதிகம் எதிர்பார்த்த, வண்ணாரப்பேட்டையிலிருந்து, விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து அத்திப்பட்டு வரைக்குமான நான்காவது ரயில் பாதையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து, சென்னையிலிருந்து கொச்சினுக்கு புறப்படும் அவர், மாலை 3.30 மணியளவில், அங்கு நடைபெறவுள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக இந்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம்
சென்னையில் மெட்ரோ ரயிலின் அனைத்து வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.14) ஒரு நாள் மட்டும் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கத் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூா் விம்கோ நகா் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து, அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இலவசமாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை பயணிகள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
டிரெண்டாகும் GoBackModi
தமிழகம் மற்றும் கேரளா என இரு மாநில சட்டசபைகளுக்கும் அடுத்து வரும் சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே மோதியின் வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் களம் சூடுபிடிக்கும் இந்த நேரத்தில், ட்விட்டர் களமும் சூடுபிடித்திருக்கிறது.
தமிழகத்துக்கு மோதி வருவதை எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் GoBackModi என்கிற ஹேஷ்டேக் நேற்று மலை முதலே டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அதே போல கேரள வருகையை எதிர்க்கும் விதத்தில் PoMoneModi என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யாதது, குடியுரிமை திருத்தச் சட்டம், பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம், சமையல் எரிவாயு விலை ஏற்றம், பிரிவினைவாத அரசியல், மாநில சுயாட்சி அதிகாரங்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது, பெருநிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவது, இந்தி மொழித் திணிப்பு எனப் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்திய அளவில் இந்த இரண்டு ஹேஷ்டேகுகளை கொண்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் இதுபோன்ற பதிவுகளை இட்டு வருகின்றனர்.
அதே சூழ்நிலையில், பிரதமரின் வருகையை ஆதரிக்கும் வகையில், பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் TNWelcomesModi என்கிற ஹேஷ்டேக்கில் மோதியை வரவேற்று பதிவிட்டு வருகின்றனர்.
இதில் நடிகை குஷ்பு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த போது GoBackModi என்கிற ஹேஷ்டேகுக்கு ஆதரவாகப் பேசியதும், தற்போது பாஜகவுக்கு மாறிய பின், TNWelcomesModi ஹேஷ்டேகுக்கு அதரவு கொடுப்பதுமாக இருக்கிறார் என பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.
அதற்கு குஷ்பு தன் அதிகார ட்விட்டர் பக்கம் மூலம் பதிலளித்துள்ளார்.
குஷ்புவைப் போலவே, ஹெச்.ராஜா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜகவின் துணைத் தலைவருமான கே.அண்ணாமலை போன்ற பல பாஜக தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை ஆதரித்து TNWelcomesModi ஹேஷ்டேக்கைப் பதிவிட்டு உள்ளனர்.
பிற செய்திகள்:
- அமைச்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கொங்கு மண்டல சர்வே முடிவுகள்: அதிரடி வியூகங்களை ஆராய்கிறது அதிமுக
- அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல்: தண்டனையில் இருந்து தப்பினார் டிரம்ப்
- விவசாயிகள் போராட்டம்: காலிஸ்தானுடன் தொடர்புபடுத்துவதால் இந்திய அரசு சந்திக்கும் சவால்கள்
- ஜப்பானில் ஃபுகுஷிமாவிற்கு அருகில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: