மம்தா பேனர்ஜி: "என்னை அழைத்து அவமதிக்காதீர்கள்" - மோதி முன்னிலையில் கோபம்

பிரதமர் நரேந்திர மோதியுடன் ஒரே மேடையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, அங்கிருந்த கூட்டம் கூச்சல் எழுப்பியதால் எரிச்சலடைந்து, என்னை அழைத்து அவமானப்படுத்தாதீர்கள் என்று கூறி பேச்சை முடித்துக்கொண்டார்.

விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்த நாள் விழாவை ஒட்டி கொல்கொத்தா விக்டோரியா மெமோரியலில் நடந்த அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டு பேசினார்.

அந்தக் கூட்டத்தில் மம்தா பேனர்ஜி நரேந்திர மோதியுடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்டார்.

சமீப காலத்தில் பாஜக- மம்தா பேனர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை கடுமையாக மோதி வரும் சூழ்நிலையில், இருவரும் ஒரே மேடையில் தோன்றியது ஆச்சரியப்படுத்தியது.

ஆனால், மம்தா பேசுவதற்கு முன்பாக, அங்கே கூடியிருந்த கூட்டம், ஜெய் ஸ்ரீராம், மோதி... மோதி என்று கூச்சல் எழுப்பியதால் முதல்வர் மம்தா கோபப்பட்டார்.

அரசு நிகழ்ச்சிக்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது. இது ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் நிகழ்ச்சியும் அல்ல. எல்லா அரசியல் கட்சிகளுக்குமான நிகழ்ச்சி என்று குறிப்பிட்டதுடன், "என்னை அழைத்துவிட்டு அவமானப்படுத்தாதீர்கள்" என்று கூறினார். அத்துடன், ஜெய் ஹிந்த், ஜெய் பங்களா என்று கூறி சட்டென்று பேச்சை முடித்துக்கொண்டு, மேடையை விட்டு இறங்கிச் சென்றார்.

சலனமின்றி அமர்ந்திருந்த நரேந்திர மோதி, தாம் பேச வரும்போது, "பெஹன் மம்தா" (சகோதரி மம்தா) என்று அவரைப்பற்றி குறிப்பிட்டார்.

பிரதமர் பேசும்போதும் 'பாரத் மாத்தாகி ஜே' போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், திரிணமூல் காங்கிரசை எரிச்சலூட்டும் வகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் மேற்கு வங்கத்தில் பாஜக எழுப்பும் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் மோதி பேசும் போது எழுப்பப்படவில்லை என்று என்.டி.டி.வி. ஊடகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :