You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி சென்னை வருகை; எடப்பாடி பழனிசாமியுடன் தனியாக சந்திப்பு
சென்னைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோதி பல்வேறு திட்டங்களை துவக்கிவைத்ததோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பாரதியார், ஔவையாரை மேற்கோள் காட்டிப் பேசிய நரேந்திர மோதி, முதலமைச்சர் கே. பழனிசாமி, ஆளுநர் ஆகியோரை தனியாக சந்தித்துப்பேசினார்.
இன்று காலை 11 மணியளவில் சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை, சென்னை கடற்கரையிலிருந்து அத்திப்பட்டு வரையில் நான்காவது ரயில்வே தடம், மின்மயமாக்கப்பட்ட விழுப்புரம் - தஞ்சாவூர் - திருவாரூர் வழித்தடத்தில் ரயில் சேவை ஆகியவற்றைத் துவக்கிவைத்தார்.
மேலும், கல்லணைக் கால்வாய் புதுப்பிக்கும் திட்டம், சென்னை ஐஐடியில் ஆராய்ச்சிகளுக்காக உருவாக்கப்படும் டிஸ்கவரி வளாகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் ஆவடியில் தயாரான அர்ஜுன் எம்பிடி எம்கே ரக டாங்கை ராணுவத்திற்கு கையளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
பிரதமரை ஓ. பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார். இதற்குப் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியும் உரை நிகழ்த்தினார். முதலமைச்சர் தனது உரையில் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருவாதகக் கூறினார். இதன்பின், பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் துவக்கிவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதற்குப் பிறகு ஆங்கிலத்தில் தனது உரையைத் துவங்கிய பிரதமர் மோதி, தான் துவக்கி வைத்த திட்டங்களின் சிறப்புகளைச் சிலவரிகளில் தெரிவித்தார். கல்லணை கால்வாயை புனரமைக்கும் திட்டம் குறித்துப் பேசிய பிரதமர் மோதி, ஔவையார் எழுதிய "வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்" என்ற பாடலை மேற்கோள் காட்டினார்.
மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை, இந்திய கான்ட்ராக்டர்களால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் ரயில் பெட்டிகள் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது ஆத்மநிர்பார் (தற்சார்பு இந்தியா) திட்டத்திற்கு எடுத்துக்காட்டு எந்றும் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திறஅகு 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் அவர் தெரிவித்தார்.
சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான நான்காவது வழிப்பாதை சரக்குகளை வேகமாகக் கொண்டுசெல்ல உதவும் என்றும் விழுப்புரம் - தஞ்சாவூர் - திருவாரூர் மின்மயமாக்கம் டெல்டா மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம் என்றும் மோதி தெரிவித்தார்.
இரண்டாண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் நடந்த புல்வாமா தாக்குதலைப் பற்றிக் குறிப்பிட்ட நரேந்திர மோதி, அந்தத் தாக்குதலில் இறந்த வீரர்களின் தியாகம் பல தலைமுறைகளுக்கு உத்வேகமளிக்குமெனத் தெரிவித்தார்.
உலகின் பழமையான மொழியான தமிழில் எழுதிய மகாகவி பாரதியார், "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்" என்று கூறியிருக்கிறார் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர் , இந்தியா பாதுகாப்புத் துறையில் சுயசார்பு அடைய பெறும் முயற்சியை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் அமையவுள்ள இரண்டு பாதுகாப்புப் பெருவழித்தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் அமையவிருப்பதாகவும் அதற்கு ஏற்கனவே 8,100 கோடி ரூபாய் முதலீட்டு உத்தரவாதம் வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவிலேயே தயாரான அர்ஜுன் பீரங்கி மார்க் 1ஏ-வை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் பெருமையடைவதாகவும் கூறினார்.
எல்லா கிராமங்களுக்கு மின்சாரம் அளிக்கும் இயக்கத்தைத் துவக்கியருப்பதாகவும் உலகிலேயே மிகப் பெரிய சுகாதாரத் திட்டத்தை இந்தியா செயல்படுத்திவருவதாகவும் தெரிவித்த பிரமதர் மோதி, தேவேந்திர குல வேளாளர்கள் குறிக்க முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.
2015ஆம் ஆண்டில் தன்னை வந்து சந்தித்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், 6-7 சமூகங்களை ஒன்றாகச் சேர்த்து தேவேந்திர குல வேளாளர்கள் என அறிவிக்க வேண்டுமெனக் கூறியதை நினைவுகூர்ந்ததோடு, தேவேந்திரர் என்ற சொல்லும் நரேந்திரா என்ற தன்னுடைய பெயரும் ஒத்திசைவுடன் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
அவர்களுடைய விருப்பப்படி 6- 7 சமூகத்தினர் ஒன்றாக இணைக்கப்பட்டு, தேவேந்திர குல வேளாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்றும், இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் இதே போல மாற்றுவதற்கான சட்டம் மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அடுத்த கூட்டத்தொடரில் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படுமென்றும் பிரதமர் மோதி தெரிவித்தார்.
இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தனது அரசு எப்போதுமே கவனத்தில் கொண்டிருப்பதாகவும் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஒரே இந்தியப் பிரதமர் தாம்தான் என்ற பெருமை தனக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தைவிட தனது அரசுதான் இலங்கைத் தமிழர்களுக்காக அதிகம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மன்னாருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மீண்டும் ரயில் பாதை போடப்பட்டுவருவதாகவும் சென்னை - யாழ்ப்பாணம் விமானப் போக்குவரத்துத் துவங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா கட்டிவரும் யாழ்ப்பாண கலாசார மையம் விரைவில் திறக்கப்படுமென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழர்களின் உரிமை குறித்த விவகாரங்களை இலங்கையின் அரசு தலைவர்களுடன் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்ததாக, தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர் மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படுமென்று தெரிவித்தார். தங்களுடைய காலகட்டத்தில் 1600 மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் மோதி சுட்டிக்காட்டினார். அதேபோல 316 படகுகளும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தன்னுடைய பேச்சை முடித்துக்கொண்ட பிறகு மேடையிலிருந்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது கரங்களை ஒன்றாகப் பிடித்து உயர்த்தினார்.
இந்த நிகழ்ச்சிகள் முடிவடைந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, ஆளுனர் பன்வாரிலால் புரோகித், பங்காரு அடிகளார், அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி ஆகியோரை தனியாகச் சந்தித்தார்.
பிற செய்திகள்:
- மான்யா சிங்: ஆட்டோ ஓட்டுநரின் மகள் மிஸ் இந்தியா போட்டியில் 2ஆம் இடம்
- நெப்போலியன் படையெடுப்பு: இறந்த வீரர்களின் எச்சங்கள் 209 ஆண்டுகளுக்குப் பின் அடக்கம்
- சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோதி: இந்திய அளவில் ட்ரெண்டாகும் GoBackModi ஹேஷ்டேக்
- அமைச்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கொங்கு மண்டல சர்வே முடிவுகள்: அதிரடி வியூகங்களை ஆராய்கிறது அதிமுக
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: