You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மான்யா சிங்: மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டியில் ஆட்டோ ஓட்டுநரின் மகள் 2ஆம் இடம்
- எழுதியவர், மது பால்
- பதவி, பிபிசி இந்திக்காக
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மான்சா வாரணாசி, ஃபெமினா மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஃபெமினா மிஸ் இந்தியா 2020-ன் 'கிராண்ட் ஃபினேலே' மும்பையில் நடைபெற்றது, இதில் மிஸ் இந்தியா 2020 மகுடம் 23 வயது மன்சா வாரணாசிக்கு கிடைத்தது
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மான்யா சிங் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த மணிகா ஷியோகாண்ட் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.
ஆங்கிலத்தில், மூன்று வெற்றியாளர்களின் பெயரின் முதல் எழுத்தும் 'எம்'. அவர்களது பெயர்களின் முதல் எழுத்தைப் போலவே, இந்த மூவருக்கும் பல குணங்களும் ஒத்துள்ளன. மிஸ் இந்தியா என்ற பட்டத்தை அடைவதற்கான வழி இந்த மூவருக்கும் எளிதானதாக இருக்கவில்லை.
மான்யா சிங்: தந்தை ஆட்டோ ஓட்டுபவர், தாயார் தையல்காரர்
உத்தரப் பிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்த மான்யா சிங்கை சென்ற வாரம் வரை யாருக்கும் தெரியாது, ஆனால் இன்று அனைவரும் இவரைப் பற்றி அறிய விரும்புகின்றனர்.
மான்யாவின் தந்தை ஓம்பிரகாஷ் சிங் மும்பையில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறார். அவரது தாயார் மனோரமா தேவி மும்பையில் ஒரு தையல் கடையை நடத்தி வருகிறார்.
மான்யாவின் குழந்தைப் பருவம் துன்பங்களைத் தாங்கியே இருந்தது. தனது பெற்றோரின் போராட்டங்களை நினைவு கூர்ந்த மன்யா, "இந்திய மக்களின் சிந்தனை வெவ்வேறாக உள்ளது. பெண்களால் அதிகம் சாதிக்க முடியாது என்று நினைக்கும் போக்கு சில மாநிலங்களில் அதிகம் உள்ளது, " என்றார்.
"ஒருவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம், அவர்களிடம் நல்ல உடைகள் இல்லாமல் இருக்கலாம். பார்க்க பகட்டாக இல்லாமல் இருக்கலாம், காசு பணம் இல்லாமல் போகலாம். ஆனால், கற்பனைக்கெட்டாத அளவு கனவு காணும்போக்கு இருந்தால், வானமே எல்லையாகும். கனவு காணாத வரை, உங்கள் மதிப்பை நீங்களே உணர முடியாது," என்பது அவர் கருத்து.
பல இரவுகள் பட்டினியில்..
மான்யா சிங் குழந்தைப் பருவத்திலிருந்தே நிதி நெருக்கடியைக் கண்டு வளர்ந்தவர். அவர் பல இரவுகளைப் பட்டினியில் கழித்துள்ளார். பணத்தை மிச்சப்படுத்த அவர் பல கிலோமீட்டர் தூரம் நடந்திருக்கிறார்.
மன்யா தானே தைத்த துணிகளையே அணிந்து வந்துள்ளார். அவரது பட்டப்படிப்புக்கான கட்டணத்தைச் செலுத்த கூட, அவரது தாயும் தந்தையும் நகைகளை அடகு வைக்க வேண்டியிருந்தது. கல்வி கற்கும் போதே, பொருளீட்டும் பொருட்டு, கால் சென்டரிலும் பணியாற்றியுள்ளார்.
தன்னுடைய கடந்த கால நினைவுகளை அசை போடும் மான்யா, "எல்லாமே முடிந்து விட்டதாகத் தோன்றும் போது, அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்று நானும் நிலை தடுமாறி நின்றேன். " என்று கூறுகிறார்.
அவர் கூறுகிறார், "பெண்களுக்கு அசாத்தியமான ஒரு சக்தி இருப்பதாக நான் எப்போதும் நம்புகிறேன். என் பெற்றோருக்கு என்னைப் பார்க்கும்போதெல்லாம், ஒரு மகன் இருந்திருந்தால் நிலைமையைச் சமாளித்திருப்பான் என்று தோன்றிவிடக்கூடும். அதை நான் விரும்பவில்லை. அதனால் நான் மூத்த மகளாக, பொறுப்பெடுத்துக் கொண்டேன். அவர்களுக்கு மகனில்லாத குறை தெரியக்கூடாது என்று உறுதியெடுத்தேன். எனது கடின உழைப்பு 20 சதவீதம் என்றால், அவர்களின் அர்ப்பணிப்பு 80 சதவீதம். அவர்கள் செய்த தியாகம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. "
அழகுப் போட்டி என்பது பணக்காரர்களுக்கானது என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. பணம் இல்லாதவர்களுக்கு, இந்த போட்டியில் பங்கேற்பது மிகவும் கடினம், எனவே இந்த போட்டியை உங்கள் இலக்காக மாற்றுவதில் என்னென்ன சிரமங்கள் இருந்தன, என்ற பிபிசியின் கேள்விக்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
"நம்மிடம் மாற்றுக்கான வழிகளும் வளங்களும் இருந்தால், இது இல்லாவிடில் இன்னொன்று என்ற எண்ணம் வரும். ஆனால் எனக்கு வேறு வழியில்லை என்றுதான் எப்போதும் நினைத்தேன். நான் விழுந்தாலும் மீண்டும் எழுவேன், மீண்டும் விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுவேன் என்று உறுதியாக நம்பினேன்."
அவர் "தோல்வி தான் என் நண்பன். நான் தட்டிய கதவுகள் எப்போதும் எனக்காக திறக்கவில்லை. என்னால் மிஸ் இந்தியா ஆவது பற்றி நினைக்கக் கூட முடியாது என்று என்னைக் கேலி செய்தவர்கள்தான் அதிகம். ஆனால் இவை அனைத்திலும் நான் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது முக்கியமில்லை. நான் என்ன விரும்புகிறேன், என்ன செய்ய முடியும் என்பதை நான் அறிவது முக்கியம். இதற்கான உழைப்பு என்னுடையது. அவர்களது இல்லை. அதனால் நான் நம்புவதுதான் முக்கியம்," என்று உறுதியாகக் கூறுகிறார்.
மான்யா சிங் மிஸ் இந்தியா ஆகவில்லை. ஆனால் அவர் நிச்சயமாக மக்களின் இதயங்களைக் கவர்ந்தார்.
தன் கையே தனக்குதவி
23 வயதான மான்சா வாரணாசி மிஸ் இந்தியா ஆனதன் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.
"2020 ஆம் ஆண்டு யாருக்கும் நல்லதாக இல்லை" என்று கூறுகிறார் மான்சா.
கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு, அவர் பல ஆண்டுகளாக ஃபெமினா மிஸ் இந்தியாவில் பங்கேற்கத் தயாராகி வந்தார்.
"மிஸ் இந்தியாவைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்பு, நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்தேன், பின்னர் நான் ஒரு நிதி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினேன். நான் வேலையில் இருந்து நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு, முழு நேரமும் இந்தப் போட்டிக்காகக் கடுமையாக உழைத்தேன்," என்கிறார் மான்சா.
"கோவிட் தொற்றுக்காலத்தில், கடினமாக உழைத்தோமே, போட்டி நடக்குமா, என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. ஆனால் சில நாட்களில் போட்டிக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் செய்யலாம் என்ற செய்தி கிடைத்தது. ஆரம்பத்தில் மிகவும் பயந்தேன். பின்னர் இது முதல் அனுபவமானது. எல்லாம் இணையம் வாயிலாகவே நடந்தது. எல்லாமே நானே செய்ய வேண்டியிருந்தது. மேக்-அப்பிலிருந்து அனைத்தும் சுயமாகச் செய்ய வேண்டியிருந்ததால், நாங்கள் மல்டி டாஸ்கர்களாக மாறினோம். நான் முதல் 15 இடங்களுக்குள் தேர்வான பிறகு பயணம் செய்ய வேண்டியிருந்தது. இது ஒரு தனி அனுபவமாக இருந்தது," என்று நினைவுகளை பகிர்கிறார் மான்சா.
'ப்ரியங்கா சோப்ரா தான் எனக்கு உத்வேகம்'
இந்த வெற்றியின் பெருமையை மான்சா வாரணாசி தனது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறார்.
"என் குடும்பத்தில் என் அம்மா, என் தங்கை மற்றும் என் பாட்டி உள்ளனர். அம்மாவும் சகோதரியும் போட்டிக்கு ஒப்புக் கொண்டனர். ஆனால் என் பாட்டியைச் சமாதானப்படுத்த எனக்கு நேரம் எடுத்தது. அவர்கள் ஒப்புதல் பெற்றதும், அவர்கள் மூவரும் எனக்கு ஊக்கமளித்தனர். இணையம் வாயிலாக நடந்த போட்டியில் எனக்கு மிகவும் ஒத்துழைத்தனர்," என்று தன் நன்றியைத் தெரிவிக்கிறார்.
அவர், "நான் இன்று இருக்கும் நிலைக்கு அவர்களே காரணம். இப்போது நான் மிஸ் வோர்ல்ட் போட்டிக்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனது உத்வேகம் பிரியங்கா சோப்ரா, அவரைப் போன்றே எனக்கான ஒரு தனி அடையாளத்தை உருவாக்க நான் கடுமையாக உழைக்க விரும்புகிறேன்," என்று நம்பிக்கை ஒளிரக் கூறுகிறார் மான்சா.
பிற செய்திகள்:
- நெப்போலியன் படையெடுப்பு: இறந்த வீரர்களின் எச்சங்கள் 209 ஆண்டுகளுக்குப் பின் அடக்கம்
- சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோதி: இந்திய அளவில் ட்ரெண்டாகும் GoBackModi ஹேஷ்டேக்
- யூடியூப் 'ப்ராங்க்' செய்தவர் சுட்டுக் கொலை: சோகத்தில் முடிந்த விளையாட்டு
- அமைச்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கொங்கு மண்டல சர்வே முடிவுகள்: அதிரடி வியூகங்களை ஆராய்கிறது அதிமுக
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: