You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா: என்றென்றும் கனவுக்கன்னியாக நீடிக்க என்ன விலை கொடுக்கிறார்கள் நடிகைகள்?
- எழுதியவர், ஷாலினி
- பதவி, மனநல மருத்துவர்
(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
சின்ன திரை பெரிய திரை என்கிற பாரபட்சமே இல்லாமல், எல்லா திரைகளிலுமே பெண்களுக்கு ஒரு மிக பெரிய நிர்பந்தம், அவர்கள் எப்போதுமே இளமையாகவும், ஒயிலாகவும், கவர்ச்சிகரமாகவும் இருந்தே ஆக வேண்டும்.
ஆனால் நடைமுறையில் இது சாத்தியபடுவதே இல்லை. என்ன தான் பதிமூன்று, பதினான்கு வயதில் வயதிற்கு வந்த உடனே நடிக்க வந்தாலும் கூட, சரியான கதை, சரியான களம் என்றெல்லாம் புரிந்துக்கொள்ளவும், கதாபாத்திரத்தை சரியாக கிரகித்துக்கொண்டு நடிக்க பழகுவதற்குள் பத்து பன்னிரெண்டு ஆண்டுகள் அப்படியே பறந்துவிடும். இத்தனை ஆண்டுகள் போனாலும் அன்றலர்ந்த தாமரை மாதிரியே அப்படியே என்றும் பதினாறாய் காட்சி அளிக்க முடிந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும்.
இயற்கைக்கு இந்த அவஸ்தைகளை பற்றி அக்கறையே இல்லையே. அது வயதிற்கு ஏற்றாற் போல எலும்பையும், திசுவையும் தோலையும் முதிர வைக்கும். இயற்கையின் இந்த பயணத்தை அப்படியே நிறுத்தி பிடிக்கவோ, முடிந்தால் எதிர்த்து பின்னுக்கு நகர்த்தவோ அவர்கள் பெரும் பாடு படுகிறார்கள்.
பதினாறு வயதின் தோற்றத்தை அப்படியே தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் வாய்க்கு பிடித்ததை சாப்பிட முடியாது. உடல் பருமனாகாமல் காக்க வேண்டும். தினமும் மிக சிரமமான உடல் பயிற்சி செய்ய வேண்டும். களைப்பு, முதிர்ச்சி, நரை, தொப்பை என்று எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது. பல், நகம், முக ரோமம், என்று ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டும்.
மிக சிலரை தவிர யார்க்கும் இவ்வளவு கெடுபிடி சுலபமில்லை. அதனால் சரும நிறத்தை வெளுப்பாக்க, ரோமங்களை அகற்ற, இளமை தோற்றத்தை தக்க வைக்க, கொழுப்பை கரைக்க, அங்க அளவுகளை மாற்ற என்று பல காரணங்களுக்காக செயற்கை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று எண்ணத்தோன்றுகிறது.
இந்த பிரச்சனை ஆண்களுக்கும் இருந்தாலும், இது பெண்ணுக்கே மிக பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.காரணம் திரை துறை இன்றும் ஆண்களே ஆதிக்கம் செய்யும் களமாக உள்ளது.
ஆண்கள் பணத்தை முதலீடு செய்து, ஆண்களே கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, விநியோகம் எல்லாம் செய்து, ஆண்களே செலவு செய்து பார்க்கும் போக்கு தான் இத்துறையின் அடிப்படை நிலை. இப்படி ஆண்களால் ஆண்களே ஆண்களுக்காக எடுக்கும் இந்த திரைபடங்களில் இளம் பெண்களின் வேலை வெறும் அழகு பதுமையாய் வளம் வருவது மட்டுமே. இதனாலேயே திரைத் துறை பெண்களுக்கு தங்கள் அழகை மிகைபடுத்திக்காட்டவேண்டிய அவசியம் மேலோங்குகிறது.
இந்த ஆடையை அணிய முடியாது என்றோ, இந்த காட்சியில் இப்படி நடிக்க முடியாது என்று சொல்லவோ புதிதாய் நடிக்க வாய்ப்புகிடைத்த பெண்ணால் துணிந்து சொல்ல முடியாது. காரணம் திரைத் துறை இன்று வரை நடிகைகளுக்கு மனம் என்று ஒன்று உண்டு, மனித உரிமைகள் உண்டு என்றெல்லாம் முழுமையாக உணர்ந்திருப்பதாக தென்படவில்லை.
குறைந்தபட்ச அதிகாரம் கூட இல்லாத இந்த பெண்களின் ஒரே வாழ்வியல் துருப்பு சீட்டு அவர்களது உடல். ஆனால் எல்லா பெண்களுக்குமே உடல் ஒரே மாதிரி தானே இருக்கும். இல்லை, மற்ற சராசரி பெண்களை போல இல்லை, அதை விட ஸ்பெஷல் என்று எப்போதுமே தங்கள் உடலை எக்ஸ்டிராடினரியாக மிகைபடுத்தி பெரிதும் கவனம் ஈர்த்தாலே ஒழிய நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். இதனலேயே நடிகைகள் தங்களுக்கு என்று ஒரு பெரிய வரவேற்பை பெற்று, இன்னார் என்கிற அந்தஸ்து வரும் வரை, தங்கள் உடலை ஓவர் கவர்ச்சியாக வெளிபடுத்துவது, கிளர்ச்சி பொருளாக தன்னை சித்தரிப்பது என்று hypersexualised version of womanhood என்கிற புதிய பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
இது அந்த நேரத்திற்கு அவர்களது பிழைப்பு விகிதத்தை அதிகரித்தாலும், இதனால் சில மோசமான பக்க விளைவுகளும் ஏற்படுத்துகின்றன.
இந்த பெண்களுக்கு எப்போதுமே இந்த கனவு கன்னி பிம்பத்தை தூக்கி நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவர்களது வெற்றியின் போது இருந்த தோற்றம் தான் நிஜம், அது தான் நிரந்திரம் என்பதை வாழ்நாள் முழுக்க நிருபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற கட்டயத்திற்கு தள்ளுகிறது.
தொடர்புடைய செய்திகள்:
சினிமாவை தவிற வாழ்வில் வேறு வெற்றிகளும் அடையாளங்களும் உள்ள பெண்கள் இந்த சின்ன வட்டத்திற்குள் தன்னை அடைத்துக்கொள்ள முயல்வதில்லை. ஆனால் சினிமா மட்டும்தான் தன் ஒரே அடையாளம், தன் அழகு மட்டும் தான் ஒரே மூலதனம் என்கிற பிம்ப கோளாறில் மாட்டிய பெண்களுக்கோ, இந்த "நிரந்தர சுவப்பனசுந்தரி"தனம் பெரும் உளவியல் சிக்கலை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு முறை இயற்கை தன் கைவரிசையை காட்டும் போதெல்லாம், "அய்யோ, நான் தோற்றுவிடுவேனோ, என் அழகு போய் விடுமோ, என்னை மதிக்க மாட்டார்களோ" என்கிற பரிதவிப்பும். இன்செக்யூரிட்டியும் உண்டு இல்லை என்று பாடாய் படுத்தி விடும். இதனாலேயே தூக்கமின்மை, பதட்டம், மனசோர்வு, அன்ரெக்சியா, புலிமியா, மாதவிடாய் கோளாறுகள், உடல் பிம்ப கோளாறுகள் ஏற்படலாம். இப்படியெல்லாம் நொந்துபோகும் மனதை சமாதானப்படுத்த மது மற்றும் பிற வகையான போதை தேவைபடலாம். வெளியில் மிக அழகான பதுமையாய் தெரியும் பெண் உள்ளே நொருங்கிப்போன உள்ளத்தோடு போராடலாம்
திரைத் துறை பெண்களின் இந்த அவல நிலை எதுவும் வெளியில் தெரியாது. இது பற்றி வெளிப்படையாக பேசினாலும் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடும் அச்சம் பெண்களை வாயடைத்துவிடும். இந்த உள்விவகாரம் எதுவுமே தெரியாமல் சாமானிய பெண்களும் திரைப் பெண்களை நகல் செய்கிறார்கள். உண்மையிலேயே பெண் என்றால் இப்படித்தான் இருப்பாளோ என்று பெண்களும் குழம்பி ஆண்களையும் குழப்புகிறார்கள்.
பெண்களோடு தனிப்பட்ட பரிசயம் இல்லாத ஆண்களுக்கு எது இயற்கை எது செயற்கை, எது வாழ்வில் அவசியம் எது அநாவசியம் என்று வித்தியாசப்படுத்த தெரியாது. அதனால் திரையில் வருவதெல்லாம் உண்மை என்று நம்பி, பருவ வயதின் ஆரம்பம் முதல் திரை நாயகிகளை பார்த்தே ஆண்மைவளர்த்தவர்களுக்கு கடைசியில் ஒரு சாமானிய பெண்ணோடு திருமணம் நடக்கும் போது, சரியாக கடமை ஆற்ற முடியாமல் போகிறது.
இப்படி திரைத்துறை பெண்கள் மட்டுமல்லாது பொது மக்களையும் இந்த செயற்கை பிம்பங்கள் பாதிக்கின்றன. எதை பற்றியும் தொலை நோக்கு சிந்தனை இல்லாமல் நம் திரைத்துறை ஆண்கள் தங்கள் வேட்கையிலேயே சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.
வெளிநாடுகளில் பெண் இயக்குனர்கள் ஆஸ்கர் விருது வாங்குவது, பெண்கள் மைய கதைகள் அதிகரிப்பது, பெண்கள் தங்கள் பாலியல் கொடுமைகளை Me too மாதிரியான விழிப்புணர்வு முயற்சி மூலம் அம்பலப் படுத்துவது என்பது மாதிரியான பல நகர்வுகள் ஏற்பட்டதால் பெண்கள் மெள்ள தலை நிமிர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் எப்போதோ?!
2018இல் பிபிசி தமிழ் இணையதளத்தில் வெளியான இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :