தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: "சசிகலா அ.தி.மு.கவில் இணைந்தால் நல்லது!" - விரைவில் சந்திக்கும் கொங்கு தனியரசு பேட்டி

தனியரசு

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, தனியரசு
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார் சசிகலா.

பெங்களூருவில் இருந்து அவர் தமிழகம் வந்தபோது, கார் கொடுத்து உதவிய கிருஷ்ணகிரி அ.தி.மு.க நிர்வாகி சம்பங்கி உள்பட 7 பேர் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலாவை சந்திக்க உள்ளார், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ-வும் கொங்கு இளைஞர் பேரவையின் அமைப்பாளருமான உ.தனியரசு. அ.தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் தனியரசுவின் இந்தச் சந்திப்பு விவரம், விவாதப் பொருளாக மாறியுள்ளது.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

சசிகலாவை எப்போது சந்திக்கப் போகிறீர்கள்? என பிபிசி தமிழுக்காக உ.தனியரசுவிடம் கேட்டோம்.

``கடந்த 3 மாதங்களாக அவரைச் சந்திக்கப் போவது குறித்துப் பேசி வருகிறேன். அவரை எப்போது சந்திப்பேன் எனத் தெரியவில்லை. ஆனால், சந்திப்பது உறுதி. நேற்று முதல்வர் என்னுடைய தொகுதிக்கு வந்திருந்தார். மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகள் இருந்ததால் என்னால் தொகுதியை விட்டு நகர முடியவில்லை. மருத்துவர்களின் அறிவுரைப்படி சந்திக்கும் முடிவில் சின்னம்மா இருக்கிறாரா என்பதை அறிந்த பிறகு பார்ப்பேன். இது அரசியல்ரீதியான சந்திப்பு கிடையாது. உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கான மரியாதை நிமித்தமான சந்திப்புதான். மற்றபடி, அ.தி.மு.கவோடு கூட்டணி தொடர்கிறது.

முதல்வரும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமும் தொடர்ச்சியாக சசிகலாவையும் தினகரனையும் விமர்சித்து வருகின்றனர். நீங்கள் சசிகலாவை சந்திப்பது விமர்சனத்தை ஏற்படுத்தாதா?

அது அவர்களின் உள்கட்சி விவகாரம்.

`சதிகாரர்கள்' என்றே முதல்வர் பேசுகிறார். நீங்கள் சந்திப்பதன் மூலம் கூட்டணிக்குள் சிக்கல் வராதா?

ரஜினிகூட சின்னம்மா தொடர்பாக நலம் விசாரித்ததாக டி.டி.வி சொல்கிறார். பிரேமலதாவும் சந்திக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களின் பார்வையில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். வெளியில் உள்ளவர்கள் யாரும் சந்திக்கக் கூடாது என முதல்வரோ துணை முதல்வரோ கூறவில்லையே?

Presentational grey line

நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று காங்கேயம் தொகுதியில் வெற்றி பெற்றீர்கள். கூட்டணியிலும் இருப்பதால் முதல்வருக்கு கோபத்தை ஏற்படுத்தாதா?

நான் கோபாலபுரம் சென்று ஸ்டாலினை சந்தித்து, மக்கள் பிரச்சனை தொடர்பாகப் பேசியுள்ளேன். கலைஞரின் இறுதி ஊர்வலத்தில்கூட பங்கெடுத்தேன். டி.டி.வி. தினகரனிடம் பலமுறை பேசியுள்ளேன். பொன். ராதாகிருஷ்ணன் கூட சசிகலாவை வரவேற்றுப் பேசியுள்ளார். அவரும் கூட்டணிக் கட்சிதான். எனவே, நீங்கள் குறிப்பிடுகின்ற பார்வையில் அ.தி.மு.க தலைமை எங்களைப் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. சின்னம்மாவைப் பற்றி முதல்வர் எதுவும் பேசவில்லையே?

தனியரசு

பட மூலாதாரம், Facebook

அப்படியென்றால், சதிகாரர்கள் என முதல்வர் யாரைச் சொல்கிறார்?

அவர்களின் வாதப் பிரதிவாதங்களுக்குள் நாங்கள் செல்லவில்லை.

`ஒற்றுமையாக இருந்து மீண்டும் அம்மா ஆட்சியை கொண்டு வருவோம்' என்கிறார் சசிகலா. இது சில அமைச்சர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதே?

இது சலசலப்பை ஏற்படுத்தியதாக எப்படிச் சொல்ல முடியும். அவர் பாசிட்டிவ்வாகத்தானே சொல்லியிருக்கிறார்.

தனியரசு

அ.தி.மு.க-வில் சசிகலா இணைய வேண்டும் எனச் சொல்ல வருகிறீர்களா?

இணைந்தால் நல்லதுதானே. ஒரு குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புவதுதானே தர்மம். அவர்களுக்குள் சேராமல் இருக்கலாம். ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிப்பவர்கள் பின்னர் சேர்ந்து கொள்வார்கள். தொடக்கத்தில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் கடுமையாக விமர்சித்துக் கொண்டார்கள். பின்னர் சேர்ந்து கொண்டார்கள். தி.மு.கவை செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்தார்.

தற்போது அவர் தி.மு.கவில் சேர்ந்து எம்.எல்.ஏ.வாகவும் ஆகிவிட்டார். கடுமையாகப் பேசுகிறார்கள் என்றால் நெருங்கி வருகிறார்கள் என்று அர்த்தம். சதிகாரர்கள் என எடப்பாடி சொல்வது தி.மு.க குறித்துகூட இருக்கலாம். கட்சியின் நலன் கருதி பெரிதாக முரண் வளராது என்றுதான் நினைக்கிறேன்.

சசிகலாவைச் சந்திக்க அனுமதி கிடைத்துவிட்டதா?

நான் யாரிடமும் முன் அனுமதி கேட்பதில்லை. அவரைச் சந்திக்க முடிந்தால் நேரடியாகச் சென்று பார்ப்பேன்.

சசிகலாவை சந்திக்க வேண்டாம் என ஆளும் தரப்பில் இருந்து ஏதேனும் அழுத்தங்கள் வந்ததா?

அப்படியெல்லாம் எதுவும் வரவில்லை. சின்னம்மாவை யாரும் பகையாளியாகப் பார்க்கவில்லை. அவர் யாருக்கும் பகையாக இல்லை. அவரைச் சந்திக்கச் செல்ல வேண்டாம் என எனக்கு எந்த வேண்டுகோளும் வரவில்லை.

உங்களுடன் கருணாஸ் எம்.எல்.ஏவும் சசிகலாவை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறதே?

இது தவறான தகவல். நான் அவருடன் தொடர்பில் இல்லை. அவர் என்ன முடிவில் இருக்கிறார் எனவும் தெரியவில்லை. நான் சசிகலாவை சந்திப்பது என்னுடைய அரசியல் கடமை.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: