"தினகரனிடமிருந்து சசிகலா தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்": சி.வி. சண்முகம்

பட மூலாதாரம், Getty Images
ஆளும் அமைச்சர்களுக்கும் டிடிவி தினகரன் தரப்பிற்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. தினகரனிடமிருந்து சசிகலா தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என சி.வி. சண்முகம் கூறியிருப்பதற்கு பதிலளித்துள்ள டிடிவி தினகரன், மிருகங்களைப் போலக் கூச்சலிடும் அற்பப்பிறவிகள் என விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு, அ.தி.மு.கவின் கொடியைத் தனது காரில் பயன்படுத்தியதற்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக காவல்துறையிலும் அ.தி.மு.கவின் சார்பில், அமைச்சர்கள் சென்று புகார் அளித்தனர்.
இதற்குப் பிறகு டிடிவி தினகரன் தரப்பிற்கும் அ.தி.மு.கவிற்கும் இடையிலான உரசல் அதிகரித்தபடியே இருந்தது. அ.தி.மு.கவின் சார்பில் தினமும் அமைச்சர்கள் சசிகலா தரப்பை விமர்சித்து பேட்டியளித்துவருகின்றனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், டிடிவி தினகரனை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். "சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை. டிடிவி தினகரனிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அவர் ஒரு வெத்துவேட்டு. அவரிடமிருந்து உங்களையும் குடும்பத்தினரையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள். டிடிவி தினகரனை நம்பிதான் கட்சி, ஆட்சி என அனைத்தையும் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். 4 வருடங்கள் பார்த்துக்கொள் என்ற சொல்லிவிட்டுச் சென்றார். அதை ஒரே மாதத்தில் கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தார். அ.தி.மு.க. எந்தக் காலத்திலும் இந்தக் குடும்பத்திற்கு அடிமையாக இருக்காது" என்றார் சி.வி. சண்முகம்.
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கும் டிடிவி தினகரன், சி.வி. சண்முகத்தின் பெயரைக் குறிப்பிடாமல் அவரைச் சாடியுள்ளார். "நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து, மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது" என்று சொல்லியிருக்கிறார்.
தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது என்றும் தினகரன் குறிப்பிட்டிருக்கிறார்.
சசிகலா சிறையிலிருந்து வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அ.தி.மு.கவையும் சசிகலா பிரிவையும் ஒன்றாக இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தில்லியில் நடப்பதாக செய்திகள் வெளியாயின. இந்தச் செய்திக்கு தில்லியில் வைத்தே மறுப்புத் தெரிவித்தார் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி.
இதற்குப் பிறகு சசிகலா பெங்களூரிலிருந்து சென்னை திரும்பியபோது, வழிநெடுக அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தத் தருணத்தில் அ.தி.மு.கவின் தலைமை அலுவலகம் பூட்டப்பட்டு, காவல்துறையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இதன் பின் இரு தரப்பு ஊடக பேட்டிகளின் மூலம் மோதி வருகின்றன. முதலமைச்சர் எடப்பாடி தனது தேர்தல் பிரசாரத்திலும் டிடிவி தினகரன் தரப்பு குறித்து சாடிவருகிறார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













