உத்தராகண்ட் பனிச்சரிவு, பெருவெள்ளம்: பேரழிவுக்கு என்ன காரணம்? புவி வெப்பமடைதல்

பட மூலாதாரம், PUNNA RANA
- எழுதியவர், நவீன் சிங் கட்கா
- பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி
பனிச்சரிவு ஏற்பட்டு அதனால் பெருவெள்ளம் ஏற்பட்ட இடம் உத்தராகண்டின் தொலைநிலை பகுதி என்பதால் அதற்கான காரணம் குறித்து இதுவரை சரிவர தெரியவில்லை.
இமயமலை தொடரின் இந்த பகுதியில் மட்டும் ஏறக்குறைய 1,000 பனிப்பாறைகள் உள்ளதாக துறைசார் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், அவற்றில் மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று வெப்பநிலை உயர்வின் காரணமாக உடைந்து, அதனுள் இருந்த அதிகளவிலான தண்ணீர் ஒரே சமயத்தில் வெளியேறி இருக்க வேண்டுமென்றும் நம்பப்படுகிறது.
இதைத்தொடர்ந்தே, பனிச்சரிவு ஏற்பட்டு பாறைகளும், மண்ணும் வீழ்த்திருக்க வேண்டுமென்றும் கருதப்படுகிறது.
"பிரதான பனிப்பாறைகளிலிருந்து தனித்திருந்து, பாறைகள் மற்றும் கற்பாறைகளினால் சூழப்பட்ட இவற்றை நாங்கள் இறந்த பனி என்று அழைக்கிறோம். இவற்றுக்கு கீழ் வண்டல்கள் அதிகளவில் பயணிப்பதும் விரும்பத்தகாத நிகழ்வுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கக்கூடும்" என்று டேராடூனிலுள்ள அரசின் வாடியா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியோலோஜி நிறுவனத்திலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற பனிப்பாறை குறித்த வல்லுநரான டி.பி. தோவல் கூறுகிறார்.

பட மூலாதாரம், PUNNA RANA
வேறுசில வல்லுநர்களோ, மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று பனிப்பாறை ஏரியின் மீது விழுந்ததன் காரணமாக அது வெடித்து பெருமளவில் நீர் வெளியேற்றம் நடந்ததே, வெள்ளத்துக்கு வித்திட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
ஆனால், அந்த பகுதியில் அதுபோன்ற நீர்நிலை இருந்ததற்கான தகவலே இல்லையென்றும் கூறப்படுகிறது.
"ஆனால், தற்போதெல்லாம் பனிப்பாறை ஏரிகள் எவ்வளவு விரைவாக உருவாகுகின்றன என்று நம்மால் கணிக்க முடியாது" என்று தோவல் கூறுகிறார்.

பட மூலாதாரம், PUNNA RANA
புவி வெப்பமடைதலால் இந்து குஷ் இமயமலைப் பகுதியில் வேகமாக உருகும் பனிப்பாறைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பனிப்பாறை ஏரிகள் ஆபத்தான முறையில் விரிவடைந்து வருகின்றன. மேலும் பல புதிய பனிப்பாறை ஏரிகளும் உருவாகி வருகின்றன.
அவற்றின் நீர் மட்டம் ஆபத்தான நிலையை அடையும் போது, அவை மனிதக் குடியேற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்திலும் பேரழிவை ஏற்படுத்தி அடித்து செல்கின்றன. இதுபோன்ற பல சம்பவங்கள் கடந்த காலத்தில் இப்பகுதியில் நிகழ்ந்துள்ளன.
நதியின் ஓட்டத்தை சிறிது காலத்திற்கு மண்சரிவு தடுத்து வைத்திருந்து, நீர்மட்டம் உயர்ந்த பிறகு அது தடுப்பை உடைத்துக்கொண்டு பாய்ந்திருக்கலாம் என்பது மற்றொரு சாத்தியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், PUNNA RANA
இமயமலைப் பகுதியில், தற்காலிக ஏரிகளை உருவாக்கும் ஆறுகளைத் தடுக்கும் நிலச்சரிவுகள் அதிகரித்து வருகின்றன. பின்னர் அவை சில சமயங்களில் வெடித்துச் சிதறும் போது, மனித குடியிருப்புகளையும், பாலங்கள் மற்றும் நீர் மின் நிலையங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளையும் அடியோடு இழுத்துச் செல்கின்றன.
உத்தராகண்டில் கேதார்நாத் மற்றும் பல இடங்கள் 2013இல் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது அதுகுறித்து பல கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
"சோராபரி பனிப்பாறை ஏரியில் நீர்மட்டம் அதிகரித்து அது வெடித்து பாய்ந்ததே வெள்ளத்தின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் என்பதை சிறிது காலம் கழித்துதான் நாங்கள் உறுதிப்படுத்த முடிந்தது" என்று தோவல் கூறினார்.
இந்த நிலையில், தௌலிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அறியும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளதாக உத்தராகண்ட் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:
- பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2021க்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு
- லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு
- ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தவிக்கும் கிராமம் - காரணம் என்ன?
- 'செங்கோட்டையில் சீக்கிய கொடியை ஏற்றுவது உளவுத் துறைக்கு முன்பே தெரியாதா?' - சிசிஜி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













