''கே.வி.பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாததற்கு அதிமுக - பாஜக கூட்டணிதான் காரணம்'' - மு.க. ஸ்டாலின்

Mk stalin

பட மூலாதாரம், Mk stalin facebook page

தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களே இல்லை என்ற அவல நிலை ஏற்பட்டதற்கு அ.தி.மு.க. அரசு, பா.ஜ.க.விடம் கூட்டணி வைத்ததுதான் காரணம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை என்பது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக சமூக செயல்பாட்டாளர் ஒருவர் பெற்ற தகவல் சமூக வலைத்தளங்களில் உலாவியது.

அதனை தொடர்ந்து, தமிழ் ஆசிரியர்கள் பணியமர்த்தபடாமல் இருப்பதை கண்டித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசு பாஜகவுக்கு அடிபணிந்து இருப்பததுதான், தமிழ் நாட்டில் தமிழ் மொழியை கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் கற்பிக்க வசதிகள் இல்லமல் இருப்பதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களே இல்லை என்ற அவல நிலை, அ.தி.மு.க. அரசு, பா.ஜ.க.விடம் கும்பிட்டுக் கூட்டணி வைத்து குழைந்து குழைந்து குற்றேவல் செய்வதால் விளைந்துள்ள விபரீதம் ஆகும். தமிழகத்தில் தமிழ்மொழிக்கு உரிய இடம் இல்லை, பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனமும் இல்லை என்று மதிமயங்கிச் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்தி பேசும் மாநிலங்களில் இதுபோன்று 'இந்தி கட்டாயம் இல்லை', 'இந்தி கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்க மாட்டோம்' என்று சொல்லி விட முடியுமா? இந்தி பேசும் மாநிலங்களில் "இந்தியும், சமஸ்கிருதமும் கட்டாயம் இல்லை; தமிழ் மொழி கற்பது கட்டாயம்' என்று அறிவிக்கும் மன தைரியம் இருக்கிறதா?,'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ''மாணவர்கள் தமிழில் தேர்ச்சி (பாஸ்) அடைந்தால் மட்டுமே, 6-ஆம் வகுப்பிலிருந்து 7-ஆம் வகுப்பிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்தி பேசும் வட மாநிலங்களில் உத்தரவு பிறப்பித்து விட முடியுமா, என்றும் தெரிவித்துள்ளார்.

''தமிழகத்தில் கே.வி பள்ளிகளில் தமிழ்மொழியை ஏன் கற்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறும் ஸ்டாலின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைக் கற்கவும், கட்டாயமாக கற்கவும் உத்தரவிட்டு , சமஸ்கிருத, இந்தித் திணிப்பை தமிழகத்தில் அறவே கைவிட வேண்டும். பதவிப் பித்து பிடித்து, எல்லா உரிமைகளையும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, தமிழர்களுக்கும் அன்னைத் தமிழ் மொழிக்கும் செய்யும் துரோகத்தை உணர்ந்து, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசை விமர்சித்துள்ள ஸ்டாலின், ''தமிழ்ச் செம்மொழிக்கு, "அ.தி.மு.க. - பா.ஜ.க. அரசுகள்" கை கோர்த்து உருவாக்கும் பேராபத்தை தமிழகம் ஒருபோதும் மறக்காது; மன்னிக்காது, தமிழகத்தின் எதிர்காலமாம் இன்றைய மாணவ - மாணவியர் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்கவும், கட்டாயமாக கற்க உத்தரவிட்டு, சமஸ்கிருத, இந்தித் திணிப்பை தமிழகத்தில் மத்திய அரசு பா.ஜ.க. அறவே கைவிட வேண்டும்,'' என்றும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: