You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அ.தி.மு.கவை மீட்கும் போராட்டத்தை சசிகலா நடத்துவார்: டி.டி.வி. தினகரன்
பெங்களூரில் உள்ள சசிகலா பிப்ரவரி ஏழாம் தேதி சென்னைக்குப் புறப்பட்டுவருவார் என்றும் அ.தி.மு.கவை மீட்பதற்கான சட்டப்போராட்டத்தை அவர் தொடர்ந்து நடத்துவார் என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், "சசிகலா பிப்ரவரி ஏழாம் தேதி காலை 9 மணிக்கு சென்னையை நோக்கி புறப்பட்டு வருகிறார். ஓசூர் அருகில் தமிழக எல்லையிலிருந்து தி.நகர் வீடு வரை வழிநெடுகிலும் அவரை வரவேற்க தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். யாருக்கும் சிரமம் கொடுக்காமல் வழிநெடுகிலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கோருகிறேன். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் ஆங்காங்கே இருந்தபடி வரவேற்பு அளிக்க வேண்டும். அவர்கள் பின்தொடர்ந்து சென்னைக்கு வந்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே கெட்ட பெயர் ஏற்படாதபடி நடந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
சமீபத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடம் தற்போது மூடப்பட்டிருப்பது குறித்து கேட்டபோது, "ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஆட்சி தொடர வேண்டுமென்பதற்காக இந்த ஆட்சியை அமைத்துவிட்டுத்தான் சிறைக்குச் சென்றார். சட்டத்தின் முன் அவர் தண்டிக்கப்பட்டிருந்தாலும் உண்மையான குற்றவாளியா என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் விடுதலையாகி வருவதற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர் விடுதலையாகிறார் என்றவுடன் எத்தனை வேதியியல் மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது என்பதும் தெரியும். அதைப்போலத்தான் அவசர அவசரமாகத் திறக்கப்பட்டு, அவர் வந்துவிடுவார் என்று தெரிந்தவுடன் அவசர அவசரமாக நினைவகம் மூடப்பட்டிருக்கிறது. இதெல்லாம் சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்பதைப் போலத்தான். என்றைக்காவது திறந்துதான் ஆக வேண்டும். அன்றைக்கு சென்னையிலிருந்தே போய்வருவார்கள். இதற்கெல்லாம் தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தீர்ப்பு வழங்குவார்கள்" என்றார் தினகரன்.
நீங்கள் மன்னிப்புக் கேட்டால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவீர்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியிருப்பது குறித்துக் கேட்டபோது, "யார் தவறு செய்தவர்கள், யார் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள், யார் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்" என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் தி.மு.கவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கத்தான் அ.ம.மு.க. தொடங்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவரவும் எம்.ஜி.ஆரின் கட்சியை மீட்கவும் தொடர்ந்து செயல்படுவோம் என்ற தினகரனிடம், சசிகலா அதிமுக கொடியுடன் காரில் வந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் கூறியிருப்பது குறித்து கேட்டபோது, "அ.தி.மு.கவின் விதிகளின்படி ஜெயலலிதா மறைந்த பிறகு, 2016 டிசம்பர் 29ஆம் தேதி அவசர பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். நிரந்தர பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும்வரை அவர்தான் பொதுச்செயலாளர். பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் படைத்தவர் பொதுச்செயலாளர்தான். தேர்தலை நடத்தவும் ஒருவருக்கு பதவி வழங்கவும் பதவியைவிட்டு நீக்கவும் அதிகாரம் படைத்தவர் பொதுச்செயலாளர்தான்.
அவர் சிறைக்குச் செல்ல நேர்ந்தபோது, துணைப் பொதுச் செயலாளராக என்னை நியமித்தார். பொதுச் செயலாளர் இல்லாதபோது துணை பொதுச் செயலாளர்தான் அதிகாரம் படைத்தவர். ஆகவே 2017 செப்டம்பர் 12 அன்று கூட்டிய பொதுக்குழுவே சட்டவிரோதமானது என தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இது குறித்து நீதிமன்றம் முடிவுசெய்யும்வரை காத்திருப்போம். நீங்களாகக் கூடி, பொதுச் செயலாளர் பதவியையே நீக்கிவிட்டு எங்கள் நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா என்று செல்வது வேடிக்கையாக உள்ளது.
இது தொடர்பான சட்டப்போரட்டத்தை சசிகலா தொடர்வார். ஜனநாயகப் போராட்டத்தை அ.ம.மு.க. தொடரும். எங்களுடைய ஒரே குறிக்கோள் தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான்" என்று விளக்கமளித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட வி.கே. சசிகலா நான்காண்டு சிறை தண்டனை முடிந்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால், சிறையிலிருந்த கடைசி நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்த காலத்திலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அவர், தற்போது பெங்களூரிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
பிற செய்திகள்:
- அ.தி.மு.கவை மீட்கும் போராட்டத்தை சசிகலா நடத்துவார்: டி.டி.வி. தினகரன்
- கோவிட்-19- கொரோனா தடுப்பூசி உங்கள் கைகளுக்கு எப்படி வந்து சேரும்
- பருத்திக்கு இறக்குமதி வரி: உண்மையில் இந்திய விவசாயிகளுக்கு பலன் கிடைக்குமா?
- 'எனது திராவிட நாட்டுக்கு உரிமை கேட்கிறேன்' - நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா
- அமேசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: