You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருத்திக்கு இறக்குமதி வரி: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பால் பலன் பெறுவது இந்திய விவசாயிகளா? சீனா, வங்கதேசமா?
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பூஜ்ஜியமாக இருந்த பருத்தி இறக்குமதிக்கான சுங்கவரியை பத்து சதவீதமாக உயர்த்தி அறிவித்ததோடு, இதனால் உள்நாட்டு விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஜவுளித்துறையின் அடிப்படை மூலதனப் பொருளாக விளங்கும் பருத்தி மீதான இந்த வரிவிதிப்பு நடவடிக்கையை, பட்ஜெட் அறிவிப்பின் பல்வேறு அம்சங்களை வரவேற்கும் ஜவுளித்துறையினரே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
பருத்தியின் மீதான இறக்குமதி வரிவிதிப்பு, பருத்தி ஜவுளித்துறையினருக்கு பலத்த அடி என்கிறார் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் அஷ்வின் சந்திரன்.
"சற்றும் எதிர்பாராத வகையில் பருத்தி மற்றும் கழிவு பஞ்சின் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமங்களை சந்தித்து வரும் ஜவுளித்துறைக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது."
"நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 80 சதவீதம் பருத்தியை சார்ந்துள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற பருத்தி மற்றும் கழிவு பஞ்சுக்கு இதுவரை இறக்குமதிவரி எதுவும் விதிக்கப்படாத நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையில் பருத்தி மீது 5 சதவீத வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக 5 சதவீத வரி என மொத்தம் 10 சதவீத வரிவிதிப்பை அறிவித்துள்ளது, பருத்தியை சார்ந்துள்ள ஒட்டு மொத்த ஜவுளித்துறைக்கும் பேரிடியாக விழுந்துள்ளது" என தனது அதிருப்தியை தெரிவிக்கிறார் இவர்.
"நமது நாட்டின் ஆண்டு உற்பத்தி மற்றும் நுகர்வில் 3 சதவீதம் அளவிலான பருத்தி மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், இறக்குமதி செய்யப்படும் பருத்தி வகை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. எனவே, இந்த 10 சதவீத வரிவிதிப்பின் மூலம் பருத்தி விவசாயிகளுக்கு எந்த பயனும் இருக்காது. மேலும், பருத்தி ஜவுளி பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி வரியும் உள்ளதால் உற்பத்தி செலவை அதிகரிப்பதோடு அந்தப் பளு வாடிக்கையாளர்கள் மீதும் திணிக்கப்படும். இதனால் மதிப்புக் கூட்டப்பட்ட ஜவுளிப் பொருள் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்" என்கிறார் அஷ்வின் சந்திரன்.
இந்தியாவை முந்தி வரும் சீனா
சர்வதேச அளவிலான பருத்தி உற்பத்தியில் முக்கிய இடத்தில் இருக்கும் இந்தியாவை, சீனா தொடர்ந்து முந்தி வருகிறது. இந்தியாவில், கடந்த ஆண்டு 35.49 மில்லியன் பேல்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன (170 கிலோ எடை கொண்ட பருத்தி, ஒரு பேல் என அழைக்கப்படுகிறது) 2020-2021 ஆம் ஆண்டுகளில் 37.12 மில்லியன் பேல் அளவிற்கு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பருத்தி இறக்குமதிக்கான வரிவிதிப்பு சர்வதேச ஜவுளிச்சந்தையில் இந்தியாவை பின்நோக்கி நகர்த்தும் எனத் தெரிவிக்கிறார் தென்னிந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் தாமோதரன்.
"இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக அதிக அளவில் பல்வேறு வகையிலான பருத்திகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தும் ஒவ்வொரு வருடமும் 12 முதல் 15 லட்சம் பேல் அளவிற்கு குறிப்பிட்ட வகை பருத்தி மட்டுமே பெரும்பான்மையாக இறக்குமதி செய்யப்படுகிறது. அவை அமெரிக்காவில் விளையக்கூடிய உயர் ரக 'சுப்பிமா' பருத்தி வகை ஆகும். இதெற்கென இந்திய ஜவுளித்துறையில் தனிச்சந்தை உள்ளது. இவற்றை நம் நாட்டில் உற்பத்தி செய்யமுடியவில்லை என்பதால் தான் இறக்குமதி செய்யப்படுகின்றது."
"அமெரிக்க வியாபாரிகள் இந்தியாவில் தயாராகும் உயர் ரக பருத்தி நூல் மற்றும் ஆடைகளில் சுப்பிமா இலச்சினை இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதற்காக 51% அளவிற்கு சுப்பிமா பருத்தி தேவைப்படுகிறது. இவை இந்தியாவில் கிடைக்காததால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மலிவான விலையில் உள்நாட்டிலேயே கிடைக்கும் பருத்தியை தவிர்த்துவிட்டு வெளிநாட்டிலிருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டும் என எந்த வியாபாரியும் விரும்பமாட்டார். இங்கு கிடைக்காததைத்தான் இறக்குமதி செய்கிறோம். எனவே, பருத்தி மீதான இறக்குமதி வரி விதிப்பதை தவறான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். மேலும், இதனால் கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச அளவில் உயர் ரக பருத்தி ஆடைச்சந்தையில் இந்திய ஜவுளித்துறை தக்கவைத்திருந்த முக்கியத்துவம் பறிபோகும் நிலைஉருவாகும்" என்கிறார் தாமோதரன்.
பருத்தி இறக்குமதி மீதான வரிவிதிப்பு நடவடிக்கையால் இந்தியா சர்வதேச அளவிலான உயர் ரக பருத்தி ஆடைச்சந்தையில் வங்கதேசம், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளோடு போட்டியிடும் திறனை இழக்கநேரிடும் என ஜவுளித்துறையினர் கருதுகின்றனர்.
மேலும், பருத்தி விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தி தரமான பருத்தி வகைகளை விவசாயிகள் உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர வரிவிதிப்பை அதிகப்படுத்துவது உள்நாட்டு ஜவுளிச்சந்தையை தான் பெருமளவு பாதிக்கும் என தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பருத்தியை உருபத்தி செய்கின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி, சேலம், தர்மபுரி மற்றும் தேனி மாவட்டங்களில் பருத்தி பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பஞ்சாலைகள் உள்ளன.
விவசாயத்தை அடுத்து அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக இந்தியாவில் ஜவுளித்துறை உள்ளது. நேரடியாக 5.1 கோடி பேரும், மறைமுகமாக 6.8 கோடி பேரும் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: