கோவை மருத்துவமனையில் கைவிரலில் காயத்தால் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்

கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட ஏழு வயது சிறுமி உயிரிழந்தார்.
தவறான சிகிச்சை காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாக பெற்றோர் புகார் அளித்த நிலையில், சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைக்கு தலையில் அடிபட்டதால் இறந்துள்ளது. ஆனால், தலையில் அடிபட்டதை பெற்றோர் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்கிறது மருத்துவமனை தரப்பு.
இதே மருத்துவமனையின் இன்னொரு கிளையில் கடந்த மாதம் இதே போன்று ஒரு குழந்தை இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை
கோவையில் நீலிகோணம்பாளையம் எனும் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவரின் மகள் ஹேமவர்ணா. கடந்த வாரம் ஏழு வயதான மகள் உட்பட தனது குடும்பத்துடன் மைசூருக்கு சென்று இருந்தார் கார்த்திகேயன்.
அப்போது உறவினர் வீட்டில் தங்கியிருந்த போது கதவு இடுக்கில் ஹேமவர்ணாவின் இடது கை நடுவிரல் சிக்கி காயம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. அங்கு முதலுதவி மட்டும் செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் கார்த்திகேயன் குடும்பத்துடன் கோவைக்கு திரும்பினார். டாக்டர் முத்தூஸ் எலும்பு சிகிச்சை மருத்துவமனையில் ஹேமவர்ணாவை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
சிறுமிக்கு கையில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் கையில் அடிபட்ட குழந்தை எப்படி இறந்து போகும் என கேட்டு மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே சிறுமி உயிரிழந்து போனதாக குற்றம்சாட்டிய பெற்றோர் இது குறித்து நேற்று இரவு சிங்காநல்லூர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளின் உயிரிழப்பு குறித்து தந்தை கார்த்திக்கேயன் கூறுகையில், "மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை என்றார்கள். நாங்களும் சரியென்று 13,500 ரூபாய் பணத்தை கட்டி சிகிச்சைக்காக அனுமதித்தோம். ஆனால் மகளைப் பிணமாகத்தான் திருப்பிக் கொடுத்தார்கள். இதுகுறித்து கேட்டால் தலையில் காயம், வீசிங் வந்தது என பல காரணங்களை சொல்கிறார்கள், என்று குற்றம்சாட்டினார்.
இதுபற்றி டாக்டர் முத்தூஸ் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, "சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. என்னவென்று பார்பதற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது சிறுமி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கட்டியிருந்துள்ளது தெரியவந்தது. கீழே விழுந்ததை பெற்றோர் சொல்லவில்லை", என தெரிவித்தனர்.
கை விரலுக்கு சிகிச்சை முடிந்த பின் குழந்தைக்கு வலிப்பு வந்துள்ளது எனவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் பெற்றோரின் குற்றச்சாட்டு குறித்து தெளிவுபடுத்த சிறுமியின் உடலை பிரேதபரிசோனை செய்ய அனுமதித்துள்ளதாகவும் அறிக்கை கிடைத்தவுடன் சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுமியின் உடலை வாங்க மறுத்து குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனையின் பிணவறை முன்பாக தீடீர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர்.
குழந்தைக்கு தலையில் அடி ஏதும் படாத நிலையில், குழந்தையின் தலையில் காயம் இருப்பதாக தவறான தகவலை மருத்துவமனை நிர்வாகம் சொல்வதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், அந்த மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சிறுமியின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து கிளம்பினர்.
கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மூன்றரை வயது மகள் பிரியதர்ஷினி கையில் ஏற்பட்ட காயத்திற்கு, சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையின் கிளையில் சிகிச்சைக்கு சேர்த்த போது உயிரிழந்தார்.
அப்போதும் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












