உ.பி - டெல்லி எல்லையை காலி செய்ய விவசாயிகளுக்கு உத்தரவு: மின்சாரம், குடிநீர் வசதி துண்டிப்பு

பட மூலாதாரம், Gopal shoonya /bbc
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி - உத்தரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள காசிப்பூரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அவர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு சாலையை காலி செய்ய வேண்டும் என்று காசியாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
காசியாபாத் மாவட்ட நிர்வாகம் அங்கு குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-இன் கீழ் பொது நடமாட்டத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆனால் இடத்தை காலி செய்ய முடியாது என்று போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கு காவல் துறையினர் அதிகமான எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி காவல்துறையினர், உத்தரப் பிரதேச காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினரும் இதில் அடக்கம்.
இருந்தாலும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அரசை விமர்சித்து அங்கு உரையாற்றி வருகின்றனர்.
போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த உ.பி அரசு உத்தரவிட்டதா?
இன்று (வியாழன்) இரவுக்குள் அவர்கள் இடத்தை காலி செய்யவில்லை என்றால் பலப்பிரயோகம் செய்து போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரப் பிரதேச அரசு அறிவுறுத்தி உள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது .
ஆனால் இதை பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவிடம் பேசிய உத்தரப் பிரதேச மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் நவ்நீத் சேகல் மறுத்துள்ளார்.
"அப்படிப்பட்ட உத்தரவு எதுவும் மாநில அரசால் பிறப்பிக்கப்படவில்லை. தற்போது காசியாபாத் மாவட்டத்தில் மட்டுமே விவசாயிகள் போராட்டம் நடக்கிறது. அந்த மாவட்ட நிர்வாகம் எது சரி என்று நினைக்கிறதோ அதைச் செய்யலாம்," என்று அவர் கூறினார்.
போராட்டம் நடத்தி வருபவர்களைக் கலைக்குமாறு மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காசிப்பூர் எல்லையில் என்ன நடக்கிறது?
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-இன் கீழ், காசிப்பூர் எல்லையில் உள்ள கூட்டத்தை கலைக்குமாறு காசியாபாத் மாவட்ட நிர்வாகம் போராடும் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. துணை ஆட்சியர் சைலேந்திர குமார் சிங் இதைத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான வழிகளில் தொல்லை செய்யும் அல்லது தடையை ஏற்படுத்தும் நபர்கள், பொருட்கள் அல்லது கட்டடத்தை நீக்க, தொடர்புடைய மாவட்ட நிர்வாகத்துக்கு இந்தச் சட்டப்பிரிவு அதிகாரம் வழங்குகிறது.
நவம்பர் 26 முதல் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் ஒருபகுதியாக காசிப்பூரிலும் விவசாயிகள் போராடி வருகின்றனர். அதன் பின்பு டெல்லி - உத்தரப் பிரதேச எல்லை அங்கு மூடப்பட்டுள்ளது.
"காசிப்பூர் எல்லையில் இதுவரை எந்த வன்முறையும் நிகழ்ந்ததில்லை. அமைதியான போராட்டத்தை உச்ச நீதிமன்றமே நியாயப்படுத்தியுள்ளது. இருந்தாலும் எங்களை ஒடுக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. இதுதான் உத்தரப் பிரதேச அரசின் உண்மையான முகம்," என்று அங்கு போராட்டம் நடத்திவரும் பாரதிய கிசான் யூனியன் எனும் வேளாண் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

"பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து போராடும் விவசாயிகளை தாக்குவதற்காக வந்துள்ளனர். இங்கு போராட்டம் நடத்துபவர்கள் சுடப்பட்டால், காவல் துறைதான் அதற்கு பொறுப்பு," என்றும் ராகேஷ் திகைத் கூறியுள்ளார்.
எங்களது போராட்டத்தை நாங்கள் இங்கே தொடர்வோம். அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை இந்த இடத்தை காலி செய்ய மாட்டோம். மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை மாவட்ட நிர்வாகம் துண்டித்துள்ளது. அருகில் இருக்கும் கிராமங்களிடமிருந்து நாங்கள் குடிநீர் பெற்றுக் கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் குடியரசு நாளன்று நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது.
அப்போது டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றியவர்களின் தொலைபேசி அழைப்புகள் விசாரிக்கப்பட வேண்டும். இந்த விசாரணை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் இன்று கூறியிருந்தார்.
டெல்லி - ஹரியானா எல்லையில் என்ன நிலவரம்?
காசிப்பூர் எல்லையில் பதற்றமான சூழல் உண்டான பின்பு டிக்ரி மற்றும் சிங்கு ஆகிய எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா தெரிவிக்கிறார்.
டெல்லி - ஹரியானா எல்லையில் உள்ள அந்த இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இணையதளம் மற்றும் செல்பேசி சேவைகளும் டிக்ரி மற்றும் சிங்கு ஆகிய எல்லைகளில் இயங்காததால், இந்தப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு செய்திகள் வந்து சேர்வது மிகவும் மெதுவாகவே இருக்கிறது.
இணையதளம் இப்பகுதியில் இயங்கவில்லை என்ற வாய்ப்பை பயன்படுத்தி இங்கு புரளிகள் கிளப்புகின்றனர். சரியான தகவல்கள் எங்களை வந்து சேர்வதில்லை என்று டிக்ரி எல்லையில் இருக்கும் விவசாயிகள் தலைவர்களில் ஒருவரான ராஜேந்திர சிங் தீப் சிங்வாலா பிபிசியிடம் தெரிவித்தார்.
காசிப்பூர் எல்லையில் தற்போது என்ன நிலவரம் என்பது குறித்து எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
'உயிர் மூச்சு உள்ளவரை போராடுவோம்'

பட மூலாதாரம், Ani
"விவசாயிகள் போராட்டம் எந்தவகையிலும் நிறுத்தப்படாது. எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம். எங்களுக்கு அதைத் தவிர வேறு திட்டம் எதுவுமில்லை . அரசு என்ன சதித் திட்டம் தீட்டுகிறது என்றும் எங்களுக்கு தெரியவில்லை," என்று பாரதிய கிசான் யூனியனின் ஹரியானா மாநில தலைவர் குருநாம் சிங் சதுனி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
குடியரசு நாள் டிராக்டர் பேரணியின் போது வன்முறை ஏற்பட்ட சமயத்தில் செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை ஏற்றியதற்காக பஞ்சாபி நடிகர் தீப் சித்துவை குருநாம் சிங் கடுமையாக விமர்சித்தார்.
தீப் சித்து மத்திய அரசின் தரகர் என்று புதன்கிழமை அவர் கூறியிருந்தார்.
தேச துரோக வழக்கு - டெல்லி காவல்துறை
இதனிடையே ஜனவரி 26ஆம் தேதி நடந்த வன்முறைச் சம்பவங்களின் போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுச் சொத்துகள் வன்முறைக் கும்பலால் சேதப்படுத்தப்பட்டது என்றும் பணியில் ஈடுபட்டிருந்த 394 காவல்துறையினர் காயம் அடைந்தனர் என்றும் டெல்லி காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP
டெல்லி காவல்துறை இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி காவல்துறை மற்றும் போராட்டம் நடத்திவரும் விவசாய அமைப்புகள் இடையே (டிராக்டர் பேரணி செல்லும் பாதை குறித்து) ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டதை மீற, முன்கூட்டியே ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்ததாக தங்களது முதல் கட்ட விசாரணை தெரிவிப்பதாகவும் டெல்லி காவல்துறை கூறுகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களின் புனிதத் தன்மையை மீறவும், இந்திய அரசுக்கு சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது என்றும் டெல்லி காவல்துறையின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
ஜனவரி 26-ஆம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக தங்களது சிறப்பு பிரிவு விசாரணை நடத்தி வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசத்துரோகக் குற்றங்களுடன் தொடர்புடைய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












