You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீர்காழியில் இருவரைக் கொன்று நகை கொள்ளை; போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் பலி
சீர்காழியில் இரண்டு பேரைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றவர்களில் ஒருவர் காவல்துறையின் என்கவுன்டரில் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் தன்ராஜ் சௌத்ரி என்பவர் அடகுக்கடை நடத்திவந்தார். மொத்தமாக நகைகளை வியாபாரம் செய்தும் வந்தார். இவர் தனது மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்தவந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமையன்று அதிகாலையில் அவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் தன்ராஜ் சௌத்ரியின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கொள்ளையர்கள் தாக்கியதில் அவர்கள் அங்கேயே உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் தன்ராஜும் அவரது மருமகள் நிகிலும் படுகாயமடைந்தனர்.
இதற்குப் பிறகு அந்தக் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 16 கிலோ எடையுள்ள நகைகளைக் கொள்ளையடித்ததுடன், சிசிடிவி பதிவாகும் கம்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் எடுத்துச் சென்றதாகச் சொல்லப்பட்டது. வீட்டுவாசலில் நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்திருந்த தன்ராஜ் சவுத்ரியும் மருமகள் நிகிலும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை விசாரணை நடத்திவந்தது.
இந்த நிலையில், கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற கார், சீர்காழி புறவழிச் சாலையில் எருகூர் அருகே நின்றுகொண்டிருந்தது. அந்தப் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் மணிப்பால், மணீஷ், ரமேஷ் என்ற மூன்று வடமாநில இளைஞர்களைக் கைதுசெய்தனர்.
அவர்கள் நகைகளை எங்கே வைத்துள்ளார்கள் என்பதைக் காட்ட அழைத்துச் சென்றபோது, அதில் ஒருவர் காவல்துறையினரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாகவும் இதையடுத்து காவல்துறை சுட்டத்தில் அந்த நபர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
மீதமுள்ள இருவர் தற்போது காவல்துறை வசமுள்ளனர். மேலும் ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.
இவர்களிடமிருந்து 16 கிலோ நகையும் ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: