டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: தலைநகரை திணறடித்த போராட்டம் -புகைப்பட தொகுப்பு

இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியின் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையிலான விவசாயிகளின் டிராக்டர் பேரணி நேற்று (ஜனவரி 26, புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இந்தியாவின் குடியரசு தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட இந்த பேரணி காவல்துறையினர் அனுமதியளித்த நேரம், பாதை உள்ளிட்டவற்றை மீறி டெல்லியின் முக்கிய பகுதிகளையும் அடைந்ததால் தலைநகர் முழுவதும் போக்குவரத்து முடங்கியது.

இதில் சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் 80க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்த நிலையில், போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பல்வேறு இடங்களில் பொதுச் சொத்துகள் சேதமடைந்தன.

போராட்டக்காரர்களை விரட்டவும், கட்டுப்படுத்தவும் சில இடங்களில் காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.

இந்த நிலையில், விவசாயிகள் முன்னெடுத்த இந்த போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்தும் புகைப்படங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

டெல்லியின் வெளிப்புற சாலையில் பேரணி நடத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், டிராக்டர்கள் பாதையிலிருந்து விலகி டெல்லியின் நகர்ப்புற பகுதிகளுக்குள் நுழைந்தன.

பேரணியில் பங்கேற்ற விவசாயிகளை உற்சாகப்படுத்தும் வகையில் ஆங்காங்கே மலர்கள் வீசப்பட்டன.

விவசாய சங்கங்கள் மற்றும் காவல்துறையினர் ஒப்புக்கொண்ட பாதையிலிருந்து விலகிய போராட்டக்காரர்கள், தடுப்பரண்களை தங்களது டிராக்டர்களை கொண்டு உடைத்தெறிந்தனர்.

ஒருகட்டத்தில் எல்லை மீறும் பேரணியை கட்டுப்படுத்த காவல்துறை தரப்பில் கண்ணீர் புகை குண்டுகள் போராட்டக்காரர்களை நோக்கி வீசப்பட்டன.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை சுற்றியுள்ள எல்லைப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட 11 கட்ட பேச்சுவார்த்தை கடைசிவரை பலனளிக்கவில்லை.

மூன்று விவசாய சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்க மறுப்புத் தெரிவித்த விவசாய சங்கங்கள், திட்டமிட்டப்படி டெல்லியை நோக்கி ஜனவரி 26 அன்று டிராக்டர் பேரணியை நடத்தியுள்ளனர்.

சிலர் போராட்டக்காரர்கள் டெல்லியிலுள்ள செங்கோட்டையை நோக்கி படையெடுத்து, அங்குள்ள சிறிய கொடி கம்பம் மற்றும் குவிமாடத்தில் தங்களது வசமிருந்த கொடிகளை ஏற்றினர்.

செங்கோட்டைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :