திருக்குறள் மீது சிறுவயதில் எழுந்த ஆர்வம்; ஓலைச்சுவடியில் எழுதும் பஞ்சாபியர் ஜஸ்வந்த் சிங்

ஜஸ்வந்த் சிங்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் வசிக்கும் பஞ்சாபியரான ஜஸ்வந்த் சிங், தமிழ் கற்றுக்கொண்டு திருக்குறளை படித்ததோடு மட்டுமல்லாமல் ஓலைச் சுவடியிலும் எழுதியுள்ளார். அடுத்தடுத்து பிற பழந்தமிழ் இலக்கியங்களையும் அவர் இதேபோல எழுத திட்டமிட்டிருக்கிறார்.

சென்னை முகப்பேரில் உள்ள ஜஸ்வந்த் சிங்கின் வீடு பல்வேறு மூலிகைகள், பலவிதமான செடிகள், மரங்கள் சூழ காட்சியளிக்கிறது. "யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்/ சாந்துணையுங் கல்லாத வாறு" (கற்றோருக்கு எந்நாடும் தன்னாடாகும்; எவ்வூரும் தம் ஊராகும். அப்படியிருக்க ஒருவன் சாகும்வரை கற்காமல் இருப்பது ஏன்?) என்ற திருக்குறளுக்கு பொருத்தமான மனிதர் ஜஸ்வந்த் சிங்.

பஞ்சாபின் ஹோஷியார்பூரை பூர்வீகமாகக் கொண்டது ஜஸ்வந்த் சிங்கின் குடும்பம். 1930களிலேயே ஜஸ்வந்த் சிங்கின் தாத்தா சென்னைக்குக்கு குடிபெயர்ந்துவிட்டார். அதற்குப் பிறகு அவரது தந்தை இங்கேயே வசிக்க முடிவுசெய்ய, ஜஸ்வந்த் சிங்கின் ஊராக மாறிப்போனது சென்னை.

"நான் பள்ளிக்கூடத்தில் தமிழ் படிக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல தமிழைப் பற்றி மற்றவர்கள் கூறியதைக்கேட்டு ஆர்வம் ஏற்பட்டது. இந்தியாவின் பழமையான மொழி தமிழ்தான். ஆகவே பத்தாண்டுகளுக்கு முன்பாக, தமிழைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் திருக்குறளும் அறிமுகமானது. எந்த இடத்திலும் மொழியின் பெயரையோ, இனம், மதம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் எழுதப்பட்டிருக்கும் அந்த நூல் உலகப் பொதுமறையாக இருக்க வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்தேன்," என திருக்குறள் மீது தனக்கு ஆர்வம் வந்த கதையைச் சொல்கிறார் ஜஸ்வந்த் சிங்.

புத்தக வடிவிலும் டிஜிட்டல் வடிவிலும் திருக்குறள் இருந்தாலும், துவக்கத்தில் எழுதப்பட்டதைப்போல, ஓலைச்சுவடியில் எழுதிப்பார்க்க ஆசைப்பட்டார் ஜஸ்வந்த். இதற்காக, ஓலையைப் பதப்படுத்துவது, எழுத்தாணியில் எழுதுவது போன்றவற்றை இணையத்தைப் பார்த்தே கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் ஜஸ்வந்த்.

ஜஸ்வந்த் சிங்

"இருப்பதிலேயே முக்கியமானது ஓலையைப் பதப்படுத்துவதுதான். ரொம்பவும் ஈரமாகவும் இல்லாமல் ரொம்பவும் காய்ந்தும் போயிருக்காமல் இருக்கும் ஓலைதான் எழுதுவதற்கு ஏற்றது. அதற்கு, இளம் ஓலையாக எடுத்து, அவற்றை ஜாதிக்காய், பப்பாளி இலை உள்ளிட்டவற்றுடன் தண்ணீரில் ஊற வைத்து பிறகு நிழலில் காயவைக்க வேண்டும். அவை சரியான பதத்திற்கு வந்தவுடன் எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். எழுத்தாணியில் எழுதுவது எடுத்தவுடன் வந்துவிடாது. அதற்கு ஆணியை வைத்து முதலில் மணலில் எழுதிப்பழக வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஓலையில் எழுதிப் பழக ஆரம்பிக்கலாம்," என்கிறார் ஜஸ்வந்த்.

திருவள்ளுவர் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தன் வீட்டில் உள்ள ஒரு மாமரத்தில், திருவள்ளுவரின் சிற்பத்தைச் செதுக்கி வைத்திருக்கிறார் ஜஸ்வந்த். பிறகு 2019ல் திருக்குறளை ஓலையில் எழுதும் பணியைத் துவங்கினார் அவர். 2020ன் துவக்கத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட, அந்த காலகட்டத்தை திருக்குறளை ஓலையில் எழுதப்பயன்படுத்திக்கொண்டார் ஜஸ்வந்த். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பணியை தற்போது முடித்திருக்கிறார் மனிதர்.

ஜஸ்வந்த் சிங்

ஒரே அளவில் வெட்டப்பட்ட ஓலைகளில், ஒரு பக்கத்திற்கு இரண்டு எனக் குறள்களை எழுதி முடித்திருக்கிறார் ஜஸ்வந்த் சிங்.

"ஓலையில் எழுதியவுடன் அவை நம் கண்களுக்குத் தெரியாது. அதற்கு கரிசலாங்கண்ணி கீரையை காயவைத்து எரித்து, அதில் எண்ணையைக் கலந்து அந்த ஓலைகளின் மீது பூச வேண்டும். பிறகு துணையைக் கொண்டு துடைத்தால், எழுத்துகள் துலங்கும்" என விவரிக்கிறார் ஜஸ்வந்த்.

புத்தகங்கள்கூட சில நூறாண்டுகளுக்கு நீடிக்காது. ஆனால், ஓலைகள் நீடிக்கும் என்பதால் இதில் எழுத ஆசைப்பட்டதாகச் சொல்லும் ஜஸ்வந்த் சிங்கின் முயற்சியை தமிழக தமிழ் வளர்ச்சித் துறை பாராட்டியிருக்கிறது.

விரைவில் திருமுருகாற்றுப்படை, தேவாரம் போன்ற இலக்கியங்களையும் ஓலைகளில் எழுதப்போவதாகச் சொல்கிறார் ஜஸ்வந்த்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: