பாஜக vs காங்கிரஸ்: 'அர்னாப் கோஸ்வாமிக்கு ராணுவ ரகசியத்தை அளித்தது நரேந்திர மோதியா, அமித் ஷாவா?' - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் இடையே புதிய விவசாயிகள் சட்டம், இந்தியா - சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இன்று ஒரு வார்த்தை போர் உருவாகியுள்ளது.

ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் இந்தியத் தொலைக்காட்சிகளின் டிஆர்பி கணக்கீட்டை மேற்கொள்ளும் 'பார்க்' அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா ஆகியோரிடையே நிகழ்ந்ததாகக் கூறி மும்பை காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ள வாட்ஸ்-ஆப் உரையாடல் விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி முதல்முறையாக கருத்து வெளியிட்டுள்ளார்.

அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்-ஆப் உரையாடலில் பாகிஸ்தான் மீது இந்தியா பாலகோட் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அது குறித்து தகவல்களை பார்த்தோ தாஸ்குப்தாவிடம் தெரிவித்திருந்தார்.

"இதுபோன்ற தகவல்கள் மிகச் சிலருக்குத்தான் தெரியும். பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு படைகளின் தளபதி, விமானப் படை தளபதி, ராணுவத் தளபதி ஆகியோருக்கே தெரிந்திருக்கும். இதுபோன்ற ஒரு ரகசியம் ஊடகவியலாளர் ஒருவருக்கு கசியவிடப்பட்டு இருக்கிறது என்றால் அது அலுவல்பூர்வ ரகசியங்கள் சட்டத்தை மீறிய செயலாகும். இது அரசு ரகசியத்தை வெளியிட்ட செயல்," என்று ராகுல் காந்தி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"நீங்கள் விசாரணை நடக்கக்கூடாது என்பதை உறுதி செய்வீர்கள். ஏனென்றால் தகவலைக் கசிய விட்டது பிரதமர்தான்," என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

அர்னாப் கோஸ்வாமி

பட மூலாதாரம், Getty Images

"இவர்கள் தங்களைத் தாங்களே நாட்டுப்பற்றாளர்கள் என்றும் தேசியவாதிகள் என்றும் கூறிக் கொள்கிறார்கள், ஆனால் இந்த செயல் ஒரு தேச விரோத செயல். இத்தகைய தகவல்களை அளிப்பது ஒரு குற்றச்செயல். இது இந்திய விமானப் படையும் அதன் விமானிகளையும் கடுமையான ஆபத்துக்கு உள்ளாக்குகிறது. இது நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும்," என்று ராகுல் காந்தி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த தகவலை அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்தவர்கள் யார் என்று தெரிய வேண்டும். அது பிரதமர் நரேந்திர மோதியா அல்லது உள்துறை அமைச்சரா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அளிக்கும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. போராடும் விவசாயிகளை நான் 100% ஆதரிக்கிறேன். இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அவர்களை ஆதரிக்க வேண்டும் என விவசாயிகள் சட்டங்கள் தொடர்பான சிறுநூல் ஒன்றை வெளியிட்ட ராகுல்காந்தி தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா எழுப்பிய கேள்விகள்?

இந்தியா தனது எல்லை என்று கூறும் பகுதிக்குள் சீனா கிராமம் ஒன்றை கட்டமைத்து வருவது குறித்து ராகுல் காந்தி கடுமையாக இந்திய அரசை விமர்சித்து இருந்ததற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா ராகுல் காந்திக்கு தொடர்ச்சியாக சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ராகுல் காந்தி விடுமுறையில் இருந்து தற்போது திரும்பி வந்துள்ள நிலையில் அவரிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவற்றுக்கு அவர் பதில் அளிப்பார் என நம்புகிறேன் என நட்டா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலத்தை சீனாவுக்கு ஜவகர்லால் நேரு பரிசாக வழங்கி இருந்தார் என்றும், மீண்டும் மீண்டும் காங்கிரஸ் சீனாவிடம் சரணடைந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார் நட்டா.

சீனா மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீக்குவதற்கான நோக்கம் ராகுல் காந்தியிடம் உள்ளதா என்றும் அவர் கேட்டிருந்தார்.

இந்திய விவசாயிகளை தவறாக வழி நடத்துவது காங்கிரஸ் கட்சி என்றும், பல தசாப்தங்களாக காங்கிரஸ் ஆட்சியில் இந்திய விவசாயிகள் ஏன் ஏழைகளாக இருந்தார்கள், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ராகுல் காந்தி இந்திய விவசாயிகள் குறித்து கவலை கொள்வாரா என பல கேள்விகளை அவர் முன்வைத்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேட்டபோது "நான் ஏன் அவருக்கு பதில் சொல்லவேண்டும்? அவர் என்ன எனது பேராசிரியரா? நான் இந்த நாட்டுக்கு பதில் சொல்வேன்" என்று தெரிவித்திருந்தார்.

'பதிலளிக்காமல் ஓடுகிறார்' - பாஜக அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

பிரகாஷ் ஜாவடேகர்

பட மூலாதாரம், Getty Images

ராகுல் காந்தி பதிலளிக்காததை விமர்சித்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ராகுல் காந்தி கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓடுகிறார் என்று கடுமையாகத் தாக்கினார்.

"ஒரு தேசியக் கட்சியின் தலைவர் உங்களிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும்," என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.

சில தொழிலதிபர்கள் நாட்டை கட்டுப்படுத்துவதாக ராகுல் காந்தி தனது செய்தியாளர் சந்திப்பில் கூறினார். ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இருந்தது. அதை நாட்டு மக்கள் தூக்கி எறிந்துள்ளார்கள் என்று நேரு - காந்தி குடும்பத்தை அவர் விமர்சித்தார்.

அக்சாய் சின், அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகள் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி விட்டுக்கொடுத்தது ஏன் என்பதற்கு ராகுல் பதில் அளிக்க வேண்டும் என்றும் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

1984-ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், பாகல்பூர் கலவரம் ஆகியவற்றின் போது ரத்தம் சிந்தப்படவில்லையா? ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோது ரத்தம் சிந்தப்படவில்லையா என்றும் பிரகாஷ் ஜாவடேகர் கேள்வி எழுப்பினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: