You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மருத்துவர் சாந்தா காலமானார்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட டாக்டர் சாந்தா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
அகில இந்திய அளவில் அனைவரின் மனத்திலும் நீங்கா இடம் பெற்றவர் மருத்துவர் சாந்தா என கூறிய முதல்வர் பழனிசாமி, அவரின் இழப்பு ஈடு செய்யமுடியாது என்றும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றிய சாந்தா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இந்திய அளவில் முன்னோடியாக கருதப்படுகிறார்.
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த செலவிலும் அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.
மருத்துவ சேவைக்காக பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்ற சந்தா, தனது இறுதி காலம் வரை, புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நவீன சிகிச்சைகளை அளிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். பல கிராமங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் சோதனைகள் செய்யப்படுவதற்கு காரணமானவர் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் டாக்டர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் சாந்தா திருமணம் செய்துகொள்ளவில்லை. சகோதரி சுசீலா சந்தாவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மருத்துவர் சாந்தாவின் குடும்ப உறவுகள் ஆவர்.
'கடைசி நேரம் வரை பணியாற்றினார்'
மருத்துவர் சாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரம் வரை பணியாற்றிக்கொண்டிருந்தார் என அவருடன் பணிபுரிந்தவர்கள் கூறுகின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் சுரேந்தர், ''நான் கடந்த 19 ஆண்டுகளாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறேன். மூச்சு திணறல் அதிகமாக உள்ளது என்பதால் மருத்துவர் சாந்தா நேற்று ஓய்வெடுக்க நேரிட்டது. அந்த தருணம் வரை அவருடன் நான் இருந்தேன். அதற்கு சற்றுநேரம் முன்பு வரை, நன்கொடையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் வேலையில் இருந்தார். மருத்துவமனையின் தேவை என்ன, அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதுதான் எப்போதும் அவருடைய சிந்தனையாக இருந்தது,'' என்கிறார் சுரேந்தர்.
தலைவர்கள் இரங்கல்
மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உயர்தர புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சிறந்த முயற்சிகளுக்காக டாக்டர் வி. சாந்தா நினைவுகூரப்படுவார். சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. 2018ஆம் ஆண்டு நான் அங்கு சென்றதை நினைவுகூர்கிறேன். மருத்துவர் வி. சாந்தாவின் மறைவை எண்ணி வருந்துகிறேன்" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் சாந்தா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும், புகழ் பெற்ற மருத்துவருமான டாக்டர் வி. சாந்தா அவர்கள் திடீரென மறைவெய்தினார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிய்வத்துள்ளார்.
"புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் டாக்டர் சாந்தா அவர்களைப் போல் இன்னொருவரை இந்தியாவில் மட்டுமல்ல - உலகத்திலேயே காண்பது அரிது. தனது மருத்துவப் படிப்பை முடித்தவுடன் 12 படுக்கைகள் மற்றும் ஒரேயொரு கட்டடத்துடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் துவங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்த அவர், மூன்று ஆண்டுகள் சம்பளமே பெறாமல் தன்னலமற்ற சேவை ஆற்றியவர். உலகெங்கும் வாழ்வோருக்குப் புற்றுநோய் சிகிச்சையளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தி - அம்மருத்துவமனையில் கடந்த 66 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு மிகுந்த சேவையாற்றியவர். அங்குள்ள ஒவ்வொரு செங்கல்லும் டாக்டர் சாந்தா அவர்களின் புகழ்பாடும். மருத்துவமனையிலேயே தனது வாழ்க்கை முழுவதையும் கழித்த ஒரு மருத்துவர் இன்றைக்கு நம்மை விட்டுப் பிரிந்திருப்பதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை" என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சாந்தாவின் சகோதரி சுசீலா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மருத்துவர் சாந்தாவின் மரணம் மருத்துவ துறைக்கு பெரிய இழப்பு என கூறும் தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், ''அவர் மிகவும் எளிமையானவர். என்னுடைய தாய் போன்றவர். தனது இறுதி வரை ஏழை மக்களுக்காக உழைத்தவர்,'' என்றார்.
இதுமட்டுமின்றி, திரையுலகை சேர்ந்த நடிகர் விவேக், நடிகை கௌதமி உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: