You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: காவல் துறை ஊழியர் கைது
எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் தகவல்கள் உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம்.
காரைக்குடியில் ஏழு வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவல் துறை ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் மதுரை சரக காவல்துறை தலைவர் அலுவலகத்தில் தட்டச்சராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மதுரையில் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார்.
இந்தத் தம்பதியினர் காரைக்குடி பொன் நகரில் உள்ள சொந்த வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.
பாலாஜி தனது வீட்டின் அருகில் வசிக்கும் ஏழு வயது சிறுமிக்கு தொடர்ந்து பல நாட்களாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார் என்று அந்தச் சிறுமியின் குடும்பத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பயந்து ஓடிய சிறுமி
சனிக்கிழமை மாலை பாலாஜி சிறுமியின் வீட்டுக்கு வந்தபோது சிறுமி பயந்து ஓடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் விசாரித்த போது பாலாஜி அளித்த பாலியல் தொந்தரவு குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலாஜியிடம் காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானதால், அவர் மீது பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அருண் பிபிசி தமிழிடம் பேசுகையில், "காரைக்குடி பொன் நகரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பாலாஜி. இவர் மதுரை ஐ.ஜி அலுவலகத்தில் வேலை செய்யும் தட்டச்சு பணியாளர்; காவலர் அல்ல. மதுரையில் குடும்பத்துடன் குடியிருந்து வந்த பாலாஜி கொரோனா காரணமாக காரைக்குடியில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்."
"கடந்த சனிக்கிழமை மாலை சிறுமியின் வீட்டிற்கு பாலாஜி சென்றுள்ளார். அவரை பார்த்ததும் சிறுமி பயந்து வீட்டிற்குள் சென்று ஒளிந்து இருக்கிறாள். இதை பார்த்த பெற்றோர் சிறுமியை அழைத்து விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி கண்ணீருடன் கூறி இருக்கிறாள்."
பின்னர் சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நான் தற்போது இரண்டாம் வகுப்பு படிக்கிறேன். என்னை பாலாஜி யூ.கே.ஜி வகுப்பு விடுமுறையில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார் என்று சிறுமி கூறினார்.
இது பற்றி உன் அம்மாவிடம் சொன்னால் உன் அம்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வார் என்று மிரட்டி தன்னிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக சிறுமி போலீசாரிடம் கூறினார்.
பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காரைக்குடி காவல் துறையினர் பாலாஜியை கைது செய்தனர் என்று தெரிவித்தார் காவல் துணை கண்காணிப்பாளர் அருண்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: