You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடராஜன் 4 மெய்டன் ஓவர் வீசிய Ind Vs Aus 4-வது டெஸ்ட் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பென் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் மார்னஸ் 108 ரன்களையும், கேமருன் க்ரீன் 47 ரன்களையும், மேத்யூ வேட் 45 ரன்களையும், டிம் பெயின் 50 ரன்களையும் விளாசினர்.
நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 336 ரன்களை எடுத்தது. ரோஷித் சர்மா 44 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களையும், ஷர்துல் தாக்கூர் 67 ரன்களையும் அடித்தனர். இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பிய போது, சுந்தர் மற்றும் ஷர்துல் இணை, நிலைத்து நின்று ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டதற்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, ஹேசில்வுட் ஐந்து விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
நான்காவது நாளான இன்று (ஜனவரி 18) ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸை 294 ரன்களுக்கு முடித்து வைத்தது இந்தியா. டேவிட் வார்னர் 48 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களையும் அடித்தனர்.
19.5 ஓவர்களை வீசி 73 ரன்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் ஈர்த்தார் மொஹம்மத் சிராஜ். இதில் 5 ஓவர்கள் மெய்டன் வீசப்பட்டதும் அடக்கம். ஹேசில்வுட் இந்தியாவுக்கு எதிராக வெளிப்படுத்திய ஆட்டத்திறனை, சிராஜ் திருப்பிச் செய்துவிட்டார் எனலாம். மொஹம்மத் சிராஜை கடந்த ஜனவரி 16-ம் தேதி, சச்சின் டெண்டுல்கர் பாராட்டியிருந்தார்.
இந்தியா ஆஸ்திரேலியாவுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று, மொஹம்மத் சிராஜ் வீசிய பந்து, அவரின் திறனை வெளிப்படுத்துகிறது என சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டினார். அதோடு, சிராஜின் பந்து வீசும் திறனை விளக்கி ஒரு காணொளியையும் பதிவிட்டிருந்தார் சச்சின்.
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்தியா சார்பில் களமிறங்கிய பந்துவீச்சாளர்கள் போதுமான அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்களிலேயே அதிக டெஸ்ட் அனுபவம் கொண்ட பந்துவீச்சாளர் என்றால் அவர் மொஹம்மத் சிராஜ் தான்.
ஷர்துல் தாக்கூரும் தன் பங்குக்கு 19 ஓவர்களை வீசி 61 ரன்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
நடராஜன் இந்த இன்னிங்ஸில் எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை. இருப்பினும், அவர் வீசிய 14 ஓவர்களில் 4 ஓவர்களை மெய்டன் செய்தார். 41 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, இந்த இன்னிங்ஸிலேயே குறைவாக 2.93 எகானமியை வைத்திருக்கிறார் நடராஜன்.
328 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கி இரண்டு ஓவர்களைக் கூட முழுமையாக எதிர்கொள்ளவில்லை, அதற்குள் மழை வந்து ஆட்டத்தை நிறுத்திவிட்டது. எனவே நான்காவது நாள் முடிவில் இந்தியா 1.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி நான்கு ரன்களை எடுத்திருக்கிறது.
ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை (ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
பிற செய்திகள்:
- விவசாயிகளின் குடியரசு தின பேரணி: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- விஷத்திலிருந்து உயிர் தப்பிய எதிர்க்கட்சி தலைவர் ரஷ்யாவில் நுழைந்தவுடன் கைது
- "ரஜினி ரசிகர்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்துகொள்ளலாம்"
- "மேடையில் சரஸ்வதி படமா? எனக்கு விருது வேண்டாம்" என மறுத்த எழுத்தாளர்
- 'பிக் பாஸ் - 4' நிகழ்ச்சியின் வெற்றியாளர் - யார் இந்த ஆரி அர்ஜூனன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :