இலங்கையில் 18 வயதுக்கு பின் கட்டாய ராணுவப் பயிற்சி: அமைச்சர் சரத் வீரசேகர திட்டம்

இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒய்வூபெற்ற ரியர் எட்மிரல் சரத் வீரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் கட்டாயம் ராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சிகளை வழங்கும் இந்த யோசனையை விரைவில் தான் நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் திங்களன்று ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டே, இந்த யோசனை முன்வைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராணுவப் பயிற்சி என்பதற்காக எவரும் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் கூறுகின்றார்.

ராணுவ பயிற்சிகளின் ஊடாகவே நேர்மையாக இருக்க முடியும் எனவும், கண்களைப் பார்த்துப் பேச முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ராணுவப் பயிற்சிகளின் ஊடாகவே தலைமைத்துவத்தை ஏற்கும் பண்பு வரும் என அவர் தெரிவிக்கின்றார்.

அதேபோன்று, ராணுவப் பயிற்சிகளை பெறுவதன் ஊடாக, சட்டத்திற்கு மரியாதை வழங்குதல், ஒழுக்கத்துடனான சமூகத்தை உருவாக்குதல் போன்ற விடயங்களும் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் சரத் வீரசேகர கூறுகின்றார்.

இளைஞர்களுக்கான பொறுப்புகளை வளர்க்கும் செயற்பாடுகளும் ராப்ணுவ பயிற்சிகளின் ஊடாக பெற்றுக்கொடுக்க முடியும் என அவர் தெரிவிக்கின்றார்.

ஒழுக்கத்துடனான சமூகமொன்றை உருவாக்குவதே இதன் நோக்கம் என அமைச்சர் கூறுகின்றார்.

பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் 18 வயதை பூர்த்தி செய்த அனைத்து இளைஞர்களுக்கும் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, 6 மாதங்கள் ராணுவப் பயிற்சிகளை வழங்கும் வகையிலேயே தான் யோசனையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதனால், இந்த பயிற்சிகள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒய்வூபெற்ற ரியர் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: