கொரோனா தடுப்பூசி: 447 பேருக்கு எதிர்மறை விளைவுகள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் முதல் இரண்டு நாள்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

முதல் நாளில் 1.91 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அரசு அறிவித்தது. ஆனால், 2-வது நாளில் 6 மாநிலங்களில் 17,072 பேர் ஊசி போட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாவது நாளில் 165 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் தடுப்பூசித் திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட இந்தியாவில் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

முதல் இரண்டு நாள்களில் 447 பேருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதாகவும், ஆனால், அவற்றில் பெரும்பாலானவை காய்ச்சல், தலைவலி, உமட்டல் போன்ற லேசான அறிகுறிகள்தான் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஆனால், 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது சுகாதாரத் துறை.

டெல்லியில் மட்டுமே 51 பேருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதாகவும், அவர்களில் ஒருவருக்கு கொஞ்சம் சீரியசான பாதிப்பு என்றும் டெல்லி யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை மேற்கோள் காட்டி என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை கூறுகிறது.

பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் வடக்கு ரயில்வே மருத்துவமனையில் இருந்தும், ஒருவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று சுகாதாரத் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வழக்கமான சுகாதாரப் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வாரத்துக்கு 4 நாள்கள் மட்டுமே தடுப்பூசி போடும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: