"முஸ்லிம்கள் குரான் படிப்பதை நிறுத்த வேண்டும்" - 'இந்து பஞ்சாயத்தில்' சர்ச்சை பேச்சு

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

முஸ்லிம்களுக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் 'இந்து பஞ்சாயத்து' கூட்டப்பட்டதாகவும், வைரலான அதன் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"உ.பி.யின் மீரட்டில் மாநில அரசின் சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் ஐந்து நாட்களுக்கு முன் சங்கராச்சார்யா பரிஷத் எனும் அமைப்பின் தலைவரான சுவாமி ஆனந்த் ஸ்வரூப் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

'இந்து பஞ்சாயத்து' எனப் பெயரிடப்பட்ட அக்கூட்டத்தில் ஏராளமான வலதுசாரி சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தலைமை ஏற்று பேசிய சுவாமி ஆனந்த் ஸ்வரூப், "முஸ்லிம்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால், எங்களுடன் நீங்கள் இணைந்திருக்க வேண்டும் எனில், முதலில் அனைவரும் குரான் படிப்பதை நிறுத்த வேண்டும்" என்று கூறுவது சர்ச்சையாகி உள்ளது.

இதே காணொளியில் தொடர்ந்து பேசிய சுவாமி ஆனந்த் ஸ்வரூப், "இதற்காக முஸ்லிம்களின் கடைகளில் எதையும் வாங்கக் கூடாது என நாம் இந்துக்கள் முடிவெடுக்க வேண்டும். இதுபோல், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தம் இஸ்லாத்தை விட்டு இந்து மதத்திற்கு மாறுவார்கள்" எனத் தெரிவிக்கிறார். இந்த நிலையில், இதுகுறித்து அந்த மாநில காவல்துறையினர் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

இவர் கடந்த ஜனவரி 6ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவேக்ஸின் தடுப்பூசி: பக்கவிளைவு ஏற்பட்டால் இழப்பீடு - பாரத் பயோடெக் அறிவிப்பு

கொரோனா நோய்த்தொற்றுக்கான கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நபா்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அவா்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று (ஜனவரி 16) தொடங்கின. நாட்டு மக்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கோவேக்ஸின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. அத்தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

எனினும், இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தடுப்பூசியானது மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது. இத்தகைய சூழலில், பாரத் பயோடெக் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபா்களுக்குப் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால், அவா்களுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படும். கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டது உறுதியானால், அதற்கான இழப்பீட்டுத் தொகையை நிறுவனம் வழங்கும்.

இந்த விவரங்கள் கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் நபா்களுக்கான ஒப்புதல் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்க விளைவுகள் குறித்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஏழு நாள்களுக்குள் மக்கள் தெரிவிக்க வேண்டும்" என்று அந்த கூறியுள்ளதாக தினமணியின் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவுடனான எல்லை மோதல் குறித்து ராஜ்நாத் சிங் கருத்து

சீனாவுடனான எல்லை மோதலில் இந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழலில், கிழக்கு லடாக்கில் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சீன படைகள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்தன. அப்போதெல்லாம், இந்திய ராணுவம் சீன படைகளுக்கு பதிலடி கொடுத்து வந்தது. இதுதொடர்பாக உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, "எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, இந்திய ராணுவத்தின் கவர்ந்திழுக்கும் செயல்திறன் நாட்டின் மன உறுதியை உயர்த்தி பிடிக்க உதவியது. அது மட்டுமின்றி நாட்டு மக்கள் தலை நிமிர்ந்து நிற்கவும் வழிவகுத்தது" என்று கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: