You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிதி ராஸ்தான்: பிரபல பத்திரிகையாளர் சந்தித்த ஃபிஷிங் மோசடி - சிக்காமல் தப்புவது எப்படி?
என்டிடிவி தொலைக்காட்சியில் முன்பு பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் நிதி ராஸ்தான் வெள்ளிக்கிழமை முதல் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பேசப்பட்டு வருகிறார்.
இதற்கு காரணம் அவரின் ட்விட்டர் பதிவுதான்.
தான் ஆன்லைனில் ஏமாற்றப்பட்டதாகவும் தனக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட பேராசிரியர் பணி ஒரு மோசடி என்றும் அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்ததாக கூறி அவர் சமீபத்தில் என்டிடிவி நிறுவனத்தில் இருந்து விலகினார்.
அவரது டிவிட்டர் பதிவில், "ஒரு மோசமான ஃபிஷிங் தாக்குலுக்கு நான் ஆளானேன்," என அவர் தெரிவித்தார்.
ஃபிஷிங் தாக்குதல் என்றால் என்ன?
இது ஒரு ஆன்லைன் மோசடி. இதில் வங்கி கணக்குகள் மற்றும் கடவுச் சொற்கள் போன்ற தனிநபர் தகவல்கள் கோரப்படும்.
இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள் தாங்கள் புகழ்பெற்ற நிறுவனங்களை சார்ந்தவர்கள் என்று கூறி தனிநபர் தகவல்களை பெறுவார்கள்.
இந்த ஆன்லைன் தாக்குதல் டெக்ஸ்ட் மேசேஜ் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடி தொலைபேசி அழைப்பு மூலமாகவோ நடைபெறும்.
இந்த தாக்குதலுக்கு உள்ளானவர்கள், தங்களது வங்கிகளிடமிருந்தோ அல்லது சேவை வழங்குவோரிடமிருந்தோ அழைப்பு வந்தது என நினைத்து கொள்வர்.
இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது வங்கி கணக்கை ஆக்டிவேட் செய்வதற்காக தகவல்கள் கேட்கப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும் இந்த தகவல்களை தரவில்லை என்றால் வங்கி கணக்கு செயலிழந்துவிடும் என்றும் கூறப்படும்.
இந்த மோசடியில் நிஜமான வலைதளங்களைப் போல காட்சியளிக்கும் வலைதளத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் அழைக்கப்படுவார்கள்.
அந்த வலைதளத்தில் தனிநபர் தகவல்கள் கேட்கப்படும்.
அந்த வலைதளத்தில் தரவுகளை பதிந்தவுடன் சைபர் கிரிமினல்கள் எளிதாக தங்கள் வேலையை செய்து விடுவார்கள். மேலும் அந்த வலைதளம் மூலம் உங்கள் தனிநபர் தகவல்கள் திருடப்படும் `மால்வேர்` இணைக்கப்பட்டிருக்கும்.
கடவுச் சொற்கள் கேட்பதும், தனிநபர் தகவல்களை கேட்பதும் உலகம் முழுவதும் நடைபெறும் ஒரு சைபர் மோசடியாகும்.
இதை எப்படி தடுக்கலாம்?
இந்த மாதிரியான மோசடிகளில் நீங்கள் சிக்காமல் இருக்க வழிகள் உள்ளன.
உங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள், மின்னஞ்சல்கள், மேசேஜ்கள் குறித்து கவனமாக இருங்கள். குறிப்பாக அழைப்பவர்களுக்கு உங்களின் பெயர் தெரியவில்லை என்றால் கூடுதல் கவனம் தேவை.
பெரிய நிறுவனங்கள் உங்கள் தனிநபர் தகவல்களை தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ மின்னஞ்சல்கள் மூலமாகவோ கேட்க மாட்டார்கள்.
ஏதோ ஒரு லிங்கை கிளிக் செய்ய சொல்லும் மேசேஜ்களில் கூடுதல் கவனமாக இருங்கள்.
உங்களை அழைக்கும் நபர் மீது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்புடைய நிறுவனத்தை நீங்களே நேரடியாக அழைத்துப் பேசி விடுங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :