கொரோனா தடுப்பூசி பணி தமிழ்நாட்டில் எப்படி தொடங்கியது: யார் யார் போட்டுக்கொண்டது?

கொரோனா தடுப்பூசி போடும் பணி.
படக்குறிப்பு, கொரோனா தடுப்பூசி போடும் பணி.

தமிழ்நாடு முழுவதும் கோவிட் - 19 நோய்க்கான தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. மதுரையில் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கிவைத்தார். இதற்கான செயலியில் பிரச்சனை ஏற்பட்டதால், பல மாநிலங்களில் ஊசி போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கோவிட் - 19 நோய்க்கு எதிராக தடுப்பூசி போடும் திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடங்கி வைத்தார். காணொளிக் காட்சி மூலம் தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டம் துவங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தைத் துவக்கிவைத்துப் பேசிய முதலமைச்சர், "மருத்துவர்களே இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்போது நான் நிச்சயமாகப் போட்டுக்கொள்வேன்" என்று தெரிவித்தார். தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக, கோவிட் தடுப்பூசியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தலைவர் செந்தில் போட்டுக்கொண்டார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணி.

இன்று தமிழ்நாட்டில் காலையில் 11.30 மணியளவில் 166 தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்பட்டன.

சென்னையில் ராஜீவ் காந்தி தலைமை அரசு மருத்துவமனையில் அதன் டீன் தேரணி ராஜன் கோவாக்ஸின் மருந்தைப் போட்டுக்கொண்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதன் டீன் பாலாஜி தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் அப்பலோ, எம்ஜிஎம் ஹெல்த் கேர் ஆகிய இரண்டு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அப்பல்லோவில் நடந்த முகாமில், அந்த மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி போட்டுக்கொண்டார்.

இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்ள 'கோவின்' என்ற செயலியில் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என்ற நிலையில், சில மாநிலங்களில் அந்த செயலியில் ஏற்பட்ட பிரச்சனையால் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

"தமிழ்நாட்டில் அதுபோன்ற பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. இதுவரை வந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. 2,684 பேருக்கு கோவிஷீல்ட் ஊசியும் 99 பேருக்கு கோவாக்ஸினும் போடப்பட்டுள்ளது. இப்போது வருபவர்களுக்கும் போட்டுக்கொண்டிருக்கிறோம்" என தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் பிபிசியிடம் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அனைவரும் அரைமணி நேரம் வரை அங்கேயே அமரவைக்கப்பட்டு, பிறகு அனுப்பிவைக்கப்பட்டனர்.

புதுவையில்...

புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். முனுசாமி என்ற மருத்துவப் பணியாளர் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

புதுச்சேரியை பொறுத்தவரை தற்போது 1,750 பாட்டில்களில் 17,500 டோஸ் கோவிஷீல்ட் மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு நிறுவன ஊழியர்கள் 9 ஆயிரம் பேர் உட்பட 24 ஆயிரம் பேருக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது.

புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர், கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், காரைக்காலில் அரசு பொது மருத்துவமனை, மாஹே அரசு பொது மருத்துவமனை, ஏனாம் அரசு பொது மருத்துவமனை ஆகிய 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாம்களில் தினமும் ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 147 இடங்களில் தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியைப் போட மாநில அரசு தயாராக இருக்கிறது. ஆகவே மத்திய அரசானது அதற்கான மருந்தை விநியோகம் செய்ய முடியுமா? அப்படி இல்லையென்றால் மாநில அரசே எங்கள் நிதியில் இருந்து புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என்று நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

கொரோனா தடுப்பூசி

அமெரிக்காவின் தற்போதைய அதிபர், துணை அதிபர், இங்கிலாந்து நாட்டு ராணி, அவரது கணவர், ஜோடன் நாட்டு மன்னர் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல் நாங்கள் எல்லாம் போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு முதல்கட்டத்திலேயே முன்னுரிமை கொடுத்து, அவர்கள் போட்டுக்கொண்டால்தான் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்த மருந்தின் மீது நம்பிக்கை வரும். அதற்கு பிரதமர் ஒப்புதல் அளிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :