You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதிய வீடு வாங்கும் திட்டமுள்ளதா? அதற்கு "2021" சிறந்த ஆண்டா?
- எழுதியவர், நிதி ராய்
- பதவி, மும்பை
மும்பையை சேர்ந்த சாவி டாங் தனது புதிய முதலீடு குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். தனது கனவு இல்லத்திற்கான டீலை அவர் சமீபத்தில் பேசி முடித்துள்ளார்.
"நான் மும்பையின் தெற்கு பகுதிக்கு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த பெருந்தொற்று காலத்தில் அது சாத்தியமாகியுள்ளது. ஏனென்றால் தற்போது சந்தை விலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு முன்பு 7 - 8 கோடி வரை இருந்த சொத்துக்கள் தற்போது 5 - 6 கோடிக்கு கிடைக்கிறது. மேலும் வீட்டுக் கடன்களும் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கின்றன. எனவே உங்களிடம் பணம் இருந்தால் வீடு வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்," என்கிறார் டாங்.
37 வயதான டாங் தற்போது தானே நகரில் வசித்து வருகிறார். "விலைகள் பெரிதும் குறைவதை கண்டு கடந்த நவம்பர் மாதம் நான் புதிய வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன்," என்கிறார் அவர்.
இந்திய ரியல் எஸ்டேட் அறிக்கை 2020 என்ற சர்வேயில் 89% பேர் இதே உணர்வை பிரதிபலிக்கின்றனர். இந்த சர்வே NoBroker.com என்ற இணையதள நிர்வாகத்தால் எடுக்கப்பட்டது. இது முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் தொடர்பான சேவையை வழங்கி வரும் ஒரு தளம்.
மேலும், "இந்த சர்வேயில் பதிலளித்த இளைஞர்கள் பலரும் புதிய வீடு வாங்குவது குறித்து ஆர்வம் தெரிவித்துள்ளனர். 25 - 40 வயதுடையவர்களில் 63% பேர் புதிய சொத்துக்களை வாங்க ஆர்வமாக உள்ளனர். கடந்த வருடம் இது வெறும் 49%மாக இருந்தது," என NoBroker.com-ன் துணை நிறுவனரும், முதன்மை வர்த்தக அதிகாரியுமான செளரப் கார்க் பிபிசியிடம் தெரிவித்தார்.
சொத்துகள் குறித்த ஆலோசனைகள் வழங்கும் ஜேஎல்எல் இந்தியா நிறுவனத்தின் தகவல்படி, 2020ஆம் ஆண்டு ஜூலை - செப்டம்பரில் நடைபெற்ற விற்பனையைக் காட்டிலும் அக்டோபர் - டிசம்பர் மாதம் 51% அளவு அதிகரித்துள்ளது. இதில் புனே நகருக்கு பெரும் பங்குண்டு. 147% அளவு விற்பனைகள் அங்கு நடந்துள்ளன. சென்னை, மும்பை, பெங்களூரூ, டெல்லி, புனே, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய முக்கிய ஏழு நகரங்களில் விற்பனை அதிகரித்துள்ளது.
ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான அனாராக் நிறுவனத்தின் தரவுகளின்படி கடந்த காலாண்டை விட அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் முக்கிய ஏழு நகரங்களில் விற்பனைகள் அதிகரித்துள்ளன.
பெருந்தொற்று காலத்தில் பலர் வேலையிழந்த சூழலிலும் வீடுகள் விற்பனையாவதில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் இந்த பெருந்தொற்று காலத்தில் சொந்தவீட்டின் தேவை மேலும் உணரப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
"பெருந்தொற்று காலத்தில் வீடு வாங்குவது என்பது குறைந்துவிட்டது என பலர் நினைக்கலாம் ஆனால் இந்த சமயத்தில் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் வசதியை வழங்கியுள்ளதால் பலர் தங்கள் சொந்த இடத்தில் தங்களுக்கு பிடித்தமாதிரி ஒரு சூழலில் இருந்து பணிபுரிய விரும்புகின்றனர். மேலும் குறைந்த வட்டி கொண்ட வீட்டுக் கடன்கள், ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும் விதத்தில் அரசு திட்டங்களுடன் குறைந்த விலை போன்ற வசதிகளால் விற்பனைகள் அதிகரித்துள்ளன. மேலும் வரிச்சலுகை பெற இயலும் இடங்களில் மக்கள் வீடு வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்,"என பிபிசியிடம் தெரிவித்தார் கேர் ரேடிங்க்ஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வாளர் ஊர்விஷா எஹெச் ஜகஷேத்.
2021 நம்பிக்கைக்குரிய ஆண்டா?
ஹிரனன்தானி குழுமத்தின் துணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான நிரஞ்சன் ஹிரனன்தானி 2020ஆம் ஆண்டு அரசால் வழங்கப்பட்ட உதவிகள் 2021ஆம் ஆண்டிலும் பலன் தரும் என நம்புகிறார்.
"நகர்புற ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி யோஜ்னா ஆவாஸ் திட்டத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட 18,000 கோடி, 2 கோடி வரை வீடுகள் வாங்குபவர்களுக்கு வருமான வரி சலுகை, மற்றும் பிற அறிவுப்புகள் 2021ஆம் ஆண்டிலும் பலன் தரும்," என்கிறார் அவர்.
"திட்டங்கள், குறைந்த அடமான வட்டி விகிதம், முத்திரை வரி குறைத்தல், ஆகியவை மூலம் அரசு ஆதரவு வழங்கினால், வீடு வாங்குவதற்கு 2021ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்," என நஹர் குழுமத்தின் துணை தலைவரும், மகராஷ்டிராவின் தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சிலின் மூத்த துணை தலைவருமான மஞ்சு யாக்னிக் பிபிசியிடம் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் விலைகள் எவ்வாறு இருக்கும்?
எதிர்வரும் காலங்களில் சொத்துக்களின் விலை மதிப்பு உயரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
"வீடுகள் வாங்குவதற்கான தேவைகள் அதிகரிப்பதால் புதியதாக கட்டப்படும் வீடுகளின் விலை, ஸ்டீல், சிமெண்ட் போன்ற பொருட்களின் விலையேற்றத்தால் உயர்வை சந்திக்க நேரிடும். மேலும் வீடுகளுக்கான தேவைகள் தொடருந்து அதிகரிப்பதால் 2021ஆம் ஆண்டு 10 சதவீதம் வரை விலைகளில் உயர்வு ஏற்படும்," என்கிறார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் எஸ் ரஹேஜா ரியால்டி நிறுவனத்தின் இயக்குநர் ராம் ரஹேஜா.
மேலும், "2021ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரியுடன் உள்ளீட்டு வரிக் கடன் சேர்க்கப்பட வேண்டும், குறைந்த கடன் விகிதங்கள், பீரிமியம் குறைப்பு, ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான செஸ் வரி குறைப்பு ஆகிய சலுகைகளை அரசு வழங்கினால் ரியல் எஸ்டேட் துறைக்கு பலன் தரும்," என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :