கோவேக்சின் தடுப்பூசியை போடக்கூடாது - எதிர்க்கும் திருமாவளவன்

(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
இந்தியாவில் சனிக்கிழமை தொடங்கும் கொரோனா தடுப்பூசி திட்டத்தின்போது கோவேக்சின் தடுப்பூசி மருந்தை பயன்படுத்தக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை கூறியது: ஜனவரி 16 ஆம் தேதி நாடெங்கும் துவங்க இருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் அந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளும் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்துக்கும் அவ்வாறு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் 'கோவேக்சின்' தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நிறைவு செய்யாத நிலையில் உள்ளதால், அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த ஐயம் மருத்துவர்களாலும், அறிவியல் அறிஞர்களாலும் எழுப்பப்படுகின்றன. அதற்கு எந்த ஒரு விளக்கத்தையும் இதுவரை மத்திய அரசு தரவில்லை.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில அரசு தனது மாநிலத்தில் கோவேக்சின் தடுப்பூசியை அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத்துறையைச் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆகிய முன்களப் பணியாளர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. மருத்துவ சங்கத்தினரும் கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, அத்தகைய அய்யங்கள் ஏதும் எழுப்பப்படாத நிலையிலுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டுமே தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் முன்களப்பணியாளர்கள் யாருக்கேனும் பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு பாதிப்பு நேர்ந்தால் இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அது இதுவரை வழங்கப்படவில்லை.
அவ்வாறிருக்கும்போது முன்களப்பணியாளர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் அவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமாயின் அதற்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
எனவே, இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும் எவருக்கேனும் பக்க விளைவு ஏற்பட்டால் அதற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். அது மட்டுமின்றி அவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
தற்போது 10 பேருக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி மருந்து ஒரே பாட்டிலில் அடைத்து அனுப்பப்படுகிறது. இந்த மருந்தை திறந்தால் மூன்று மணிநேரத்துக்குள் அதைப் பயன்படுத்தி விட வேண்டும்; இல்லாவிட்டால் அது காலாவதி ஆகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மருந்தைப் பயன்படுத்தும் நேரத்தில் மருந்து ஏராளமாக வீணாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, ஊசியுடன் கூடிய ஒரு டோஸ் மருந்தை தனித்தனியே வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதுதான் இந்த ஊசியைப் போட்டுக் கொள்பவர்களுக்குப் பாதுகாப்பாக அமையும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக தேர்தல்: கமல் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் பேட்டரி டார்ச் லைட் சின்னம்

பட மூலாதாரம், Getty Images
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலின்போது 234 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது," என்று கூறியுளளார்.
இந்த விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்! என்று தமது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலின்போது கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டபோது அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், எதிர்வரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின்போது புதுச்சேரியில் மட்டும் அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், தங்குக்கு அந்த சின்னம் தேவையில்லை என்று அந்த கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஏ.ஜி. மெளரியா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படுவதாக அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.

எல்லையை தன்னிச்சையாக மாற்றும் சீன சதி முறியடிப்பு - ராணுவ தலைமைத் தளபதி

பட மூலாதாரம், Getty Images
இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்னையில் தனியாக எல்லைப் பகுதியை மாற்ற நடந்த சதித்திட்டத்துக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது என இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே தெரிவித்துள்ளார்.
ராணுவ தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்ட பேசிய அவர், "இந்தியாவின் வடக்குப் பகுதியில், சீனா உடன் பதற்றமான சூழல் நிலவுவதை நீங்கள் அறிவீர்கள். இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பகுதிகளைத் தன்னிச்சையாக மாற்றும் சதித்திட்டங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் நீத்த இந்திய வீரர்களின் தியாகத்தை வீணாக்க மாட்டேன் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன்" என்று கூறினார்.
"இந்திய ராணுவ வீரர்கள் காக்கும் மலைகளை விட, அவர்களின் உறுதியும் உற்சாகமும் பெரியது" என நராவனே தெரிவித்தார்.
"இந்திய எல்லை பகுதிக்கு அருகில் சுமார் 300 - 400 தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ பயிற்சி முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு சண்டை நிறுத்த ஒப்பந்த மீறல் சம்பவங்கள் 44 சதவீதம் அதிகரித்தன. இது பாகிஸ்தானின் மோசமான உள்நோக்கத்தை காட்டுகிறது. தீவிரவாதிகளுக்கு உதவவும், ஆயுதங்களை வழங்கவும் ட்ரோன்கள் மற்றும் சுரங்கங்கள் கூட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன" என இந்திய ராணுவ தளபதி குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு காஷ்மீரில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பல்வேறு நடவடிக்கைகள் மூலம், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்திய ராணுவத்தை நவீனமயமாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன."
"கடந்த ஆண்டில் அவசர மற்றும் விரைவுத் திட்டங்களின் கீழ், இந்திய ராணுவம் 5,000 கோடி ரூபாய்க்கு உபகரணங்களை வாங்கியிருக்கிறது. 13,000 கோடி ருபாய்க்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டிருக்கிறது. ராணுவ காவலர்கள் பிரிவைச் சேர்ந்த 100 பெண் ராணுவ ஜவான்கள், வரும் மே மாதத்துக்குள் ராணுவ கள ராணுவ பிரிவுகளில் பணியாற்ற தயாராகி விடுவார்கள்" என்றும் நவாரனே தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கியவருக்கு கார் பரிசு
- வட கொரியாவின் புதிய ஏவுகணை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும்
- திறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
- Ind Vs Aus 4வது டெஸ்ட்: களமிறங்கிய தமிழ்நாடு வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர்
- “கொரோனா தொற்று மாதக்கணக்கில் நோய் எதிர்ப்பு திறனை வழங்கலாம்”
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்களாக இருவர் தேர்வு, ஒரு காளை உயிரிழப்பு
- அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேறியது: பதவி நீக்கம் இருக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












