பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு

பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளுடனும் உற்சாகத்துடனும் நடந்து முடிந்தது.
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் மாடுபிடி வீரர்களை களத்திலேயே காளைகள் பந்தாடிய காட்சிகள் காண்போருக்கு மெய்சிலிர்க்கும் அனுபவத்தை கொடுத்தன. இந்த போட்டியில் 18 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரும் பொறியியல் கல்லூரி மாணவருமான கார்த்திக்கு கார் பரிசாகவும், சிறந்த காளைக்கு காங்கேயம் கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
வீரர்களின் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கிய ஜல்லிகட்டு போட்டியில் பாலமேடு கிராம கோயில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்க்கப்பட்டு பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
8 சுற்றுகளாக நடந்த போட்டியில் 674க்கும் மேற்பட்ட காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.
போட்டியில் காளைகள் அதிகளவிற்கு. ஆதிக்கம் செலுத்தி தனது பலத்தை வெளிப்படுத்தின. போட்டிகளில் கலந்துகொண்டு முதல் சுற்றில் இருந்து 5 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்கள், 5ஆம் சுற்றில் அடுத்தடுத்து மாடு குத்தியதில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார்கள்.

இந்த நிலையில் 5ஆம் சுற்றில் நுழைந்து கடைசி மூன்று சுற்றுகளில் பங்கேற்று மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த பொறியியல் மாணவரான கார்த்தி என்ற மாடுபிடி வீரர் 18 காளைகளை அடக்கி முதல் பரிசாக காரை பெற்றார்.
சிறந்த காளையாக தேர்வுசெய்யப்பட்ட பாலமேடு யாதவ உறவின்முறையின் தலைவர் ஜெயராமனுக்கு கன்றுடன் கூடிய காங்கேயம் பசு வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இதையடுத்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்வுசெய்யப்பட்ட மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரனுக்கு 2ஆம் பரிசாக 1 பவுன் தங்க காசு வழங்குவதற்காக அழைத்தபோது மாடுபிடி வீரர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விழா கமிட்டியினருடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் அவர் பரிசை வாங்க மறுத்துவிட்டு சென்றார்.
இதையடுத்து தங்க மோதிரமானது கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் போட்டியின் இறுதி நேரத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக களம் கண்ட வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கு குக்கர், எல்.இ.டி TV, பிரிட்ஜ், தங்ககாசு, மோட்டார், கிரைண்டர், பைக், கட்டில் மெத்தை, சைக்கிள் போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
பரிசுகளை அளிக்கும் போது அதிக எடை கொண்ட கிரைண்டர் மற்றும் மோட்டார்களை தூக்கிப்போட்டபோது அதை பிடிக்க முயன்ற காளை உரிமையாளர்களுக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது.
இதேபோல் போட்டிகளில் கலந்து கொண்ட மாடுகளை சேகரிக்கும் பகுதியான கண்மாய் பகுதியில் நூற்றுக்கணக்கான காளைகள் ஆங்காங்கே சிதறி ஓடின. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
மாடு முட்டியதில் மாடுபிடி வீரர்கள், காவல்துறையினர், காளை உரிமையாளர், பார்வையாளர்கள் உட்பட்ட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முதல் பரிசு பெற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது மகிழ்ச்சி தெரிவித்த பொறியியல் மாணவரான கார்த்திக் தனக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பிற செய்திகள்:
- வட கொரியாவின் புதிய ஏவுகணை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும்
- திறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
- Ind Vs Aus 4வது டெஸ்ட்: களமிறங்கிய தமிழ்நாடு வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர்
- “கொரோனா தொற்று மாதக்கணக்கில் நோய் எதிர்ப்பு திறனை வழங்கலாம்”
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்களாக இருவர் தேர்வு, ஒரு காளை உயிரிழப்பு
- அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேறியது: பதவி நீக்கம் இருக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












