"வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்காவிட்டால் நாங்களே நிறுத்த நேரிடும்" - மத்திய அரசை எச்சரித்த உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் மீதான விவசாயிகளின் ஆட்சேபம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும்வரை அதை மத்திய நிறுத்தி வைக்க வேண்டும் இல்லாவிட்டால் அதை நாங்கள் நிறுத்தி வைக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் ஜா உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு திங்கட்கிழமை விசாரித்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், எட்டாம் சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருப்பதாக கூறினார்.
ஆனால், மத்திய அரசின் பதிலால் திருப்தியடையாத நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை சரியாக இல்லை என்று தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர். மேலும், அடுக்கடுக்கான கேள்விகளை தலைமை நீதிபதி பாப்டே எழுப்பினார்.
"வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு நாம் அனைவருமே பொறுப்பு. நமது கரங்களில் ரத்தக்கறைகளோ பாதிக்கப்பட்டவர்களுக்கு காயங்கள் ஏற்படுவதையோ பார்க்க நாங்கள் விரும்பவில்லை," என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு விவசாயிகளுடன் பேசி ஒருமித்த கருத்தை எட்ட அவகாசம் வழங்க வேண்டும் என்று கே.கே. வேணுகோபால் கேட்டுக் கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் மத்திய அரசு வலுவான வகையில் செயல்படுவதாக நாங்கள் கருதவில்லை. கடந்த முறை நடந்த விசாரணையின்போதும் இதையேதான் மத்திய அரசு தெரிவித்தது. போராட்டக்களத்தில் யாராவது உயிர் இழக்க நேர்ந்தால் யார் பொறுப்பு ஏற்பது?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில் இன்றே நாங்கள் ஒரு முடிவெடுக்கப்போகிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், "அவசரகதியில் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம்," என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், "பொறுமையாக இருப்பது பற்றி எங்களுக்கு பாடம் எடுக்காதீர்கள். உங்களுக்கு போதுமான அளவுக்கு அவகாசம் கொடுத்தாகி விட்டது," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
"கடந்த முறை விசாரணையின்போதே உங்களிடம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பீர்களா என கேட்டோம். ஆனால், அரசு தரப்பிடம் இருந்து சரியாக பதில் வரவில்லை. போராட்ட பகுதியில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். கடுமையான குளிர் நிலவும் சூழலில் வயதானவர்களும் பெண்களும் கூட போராட்டத்தில் கலந்து கொள்கிறார்களே. அதில் இருந்தே தீவிரம் தெரியவில்லையா?" என்று தலைமை நீதிபதி பாப்டே கேள்வி எழுப்பினார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் விவசாயிகளின் கோரிக்கை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பாக ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க வலியுறுத்துகிறோம். அதை அரசு செய்யாமல் போனால் நாங்களே அக்குழுவை அமைக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.

பட மூலாதாரம், Getty Images
இதையடுத்து வாதிட்ட அட்டர்னி ஜெனரல், "உச்ச நீதிமன்றம் அப்படி விரும்பினால், அது குழுவை அமைக்கட்டும், ஆனால், சட்டத்தை தடை செய்யாதீர்கள். தற்போதைய நிலையில் வெறும் இரண்டு, மூன்று மாநிலங்கள்தான் களத்தில் போராடுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் இருந்து யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை," என்று குறிப்பிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், "முதலில் சட்டத்தை நிறுத்தி வையுங்கள், பிறகு பேச்சுவார்த்தை நடத்துங்கள். அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஏதாவது நடந்தால் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால்தான் எந்த முடிவுக்கும் இரு தரப்பால் வர முடியவில்லை என்ற விமர்சனம் நீதித்துறை மீது வரக்கூடாது. அதை நாங்கள் விரும்பவில்லை," என்று தெரிவித்தனர்.
தற்போதைய சூழலில் எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளின் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படலாம் என நாங்கள் அஞ்சுகிறோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசி வேறு பாதுகாப்பான இடத்தில் அவர்கள் போராட்டத்தை தொடருமாறு கேட்டுக் கொள்ள முயற்சி செய்யுங்கள் என்றும் நீதிபதிகள் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான வழக்கறிஞர் எம்.எல். சர்மா, "மக்கள் மீது சட்டத்தை திணிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை," என்று வாதிட்டார்.
ஆனால், அவரது வாதத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பிறகு அட்டர்னி ஜெனரலை பார்த்து, "அடிப்படையில் போதிய கலந்தாலோசனைகளின்றி மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. எனவே இந்த சட்டத்துக்கு நாங்கள் தடை விதிக்கவிருக்கிறோம்," என்று குறிப்பிட்டனர்.
இதையடுத்து, "உரிய சட்ட நடைமுறைப்படி சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லையென்றால்தான் நீதிமன்றத்தால் சட்டத்துக்கு தடை விதிக்க முடியும்," என்று அட்டர்னி ஜெனரல் கூறினார்.
ஆனால் நீதிபதிகள், "அந்த சட்த்தால் பொது அமைதிக்கு பிரச்னை, வன்முறை, சொத்துகள் சேதம் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும்போது அதில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது," என்று கூறினர்.

பட மூலாதாரம், Getty Images
"வரும் 26ஆம் தேதியன்று விவசாயிகள் ராஜ்பாத்தில் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது டிராக்டர்களை ஓட்டுவோம்," என்று கூறியுள்ளனர் என்று அட்டர்னி ஜெனரல் சுட்டிக்காட்டியபோது, "அமைதி வழியில் போராட்டங்கள் நடக்கலாம். அது காந்தியின் சத்யாகிரக போராட்டம் போல இருக்க வேண்டும்," என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி, "போராட்டக்களத்தில் இருப்பவர்கள் ராம் லீலா மைதானத்துக்கு சென்று போராட அனுமதிக்கப்பட வேண்டும்," என்று கோரினார்.
இதைத்தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் ஹெச்.எஸ். ஃபூல்கா, "நான் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் சார்பில் ஆஜராகிறேன். அங்கிருந்து 40 டிராக்டர்களில் விவசாயிகள் போராட வந்துள்ளனர்," என்று கூறினார்.
இதையடுத்து தலைமை நீதிபதி பாப்டே, "இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு யோசனையை கூற விரும்புகிறது. முதலில் போராட்ட பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு விவசாயிகள் செல்லட்டும். எதிர்மறை போராட்டத்தில் அவர்கள் பங்கேற்க அவசியம் இல்லை. அவர்களின் கோரிக்கை பற்றிய ஆராய ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயரை யோசனை தெரிவிக்கலாம். அதை நாங்கள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கிறோம்," என்று தெரிவித்தனர்.
முன்னதாக, வழக்கு விசாரணையின்போது இன்றே உத்தரவு பிறப்பிக்கப் போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், கடைசியில் அவர்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அந்த உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் விவசாயிகள், அரசு தரப்பு தெரிவிக்கும் பதில்களைப் பொறுத்தே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- ஹனும விஹாரி - அஷ்வின்: "கவலைப்படாம பத்து, பத்து பாலா போவோம்"
- அலறும் வாட்சாப் பயனர்கள்: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகளுக்கு மாற முடியுமா?
- முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது
- "அரசியலுக்கு வர வலியுறுத்தாதீர்கள்" - ரஜினிகாந்த் வேதனை
- "அனுபவம் மிக்க கேப்டன், புதுமண தம்பதி, சமீபத்தில் தந்தையான இளைஞர்" - குமுறும் மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












