You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம்: ஆதரிக்கும் நாராயணசாமி, எதிர்க்கும் கிரண் பேடி
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுச்சேரி யூனியன் பிரதேசம் சுற்றுலா நகரம் என்பதால் எந்த ஒரு பண்டிகையும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படும். அதிலும் புதுச்சேரியில் புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்பது இந்தியாவின் பிற மாநிலங்களை விட கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதனால், புதுச்சேரிவாசிகள் மட்டுமின்றி வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் புதுச்சேரிக்கு புத்தாண்டை கொண்டாட வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி இருக்கும், ஒரு லட்சத்திற்கும் அதிகமாக கூடும் மக்களை இந்த நோய்த்தொற்று சூழலில் புதுச்சேரி அரசு எப்படி கையாள போகிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 2021ஆம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாட அண்மையில் மாவட்ட ஆட்சியர் பூர்வ கார்க் தடை விதித்திருந்த நிலையில், "புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை இல்லை. இதற்கு தடை விதிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை," என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து கவலை தெரிவித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தமிழகத்தில் புத்தாண்டுக்கு தடை விதித்திருப்பதைக் குறிப்பிட்டு, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கு, மற்ற விஷயங்களை விடமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவிறுத்தியதை மேற்கோள்காட்டி முதல்வருக்கு கடிதம் அனுப்பினார்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் புத்தாண்டிற்கு தடை விதித்து இருப்பதால் அங்கிருந்து பெரும்பாலான மக்கள் புதுச்சேரிக்கு புத்தாண்டை கொண்டாட வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
"புத்தாண்டு கொண்டாட்ட தடை விஷயத்தில் தமிழ்நாட்டை சுட்டிக்காட்டும் நீங்கள் தமிழ்நாட்டில் பொங்கல் விழாவையொட்டி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.2,500 பரிசு கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது போல் இங்கேயும் பரிசு வழங்க ஒப்புதல் தர வேண்டும்," என்று குறிப்பிட்டு ஆளுநருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பதிலளித்துள்ள முதல்வர் நாராயணசாமி, "கொண்டாட்டங்கள் தொடர்பான முடிவுகளை உள்ளூர் நிர்வாகம் எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றின் தற்போதைய சூழலை அடிப்படையாக வைத்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளின் அடிப்படையில் தற்போது முழுமையாக தடை விதிக்கத் தேவையில்லை. முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட ஒழுங்குபடுத்துதலே போதுமானதாக உள்ளது," என்று கூறியுள்ளார்.
புதுச்சேரி பிரெஞ்சு கலாசார நகரம். இங்கு புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொண்டாடுவது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. விழாக்களோ, கொண்டாட்டங்களோ இல்லாமல் இருப்பது கொரோனாவை தடுக்காது. அப்படி இருந்தால் இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் தடை செய்திருக்க வேண்டும். இதில் பாதுகாப்புதான் முக்கியமானதாக இருப்பதாக நாராயணசாமி குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த கிரண்பேடி, "தமிழ்நாடு அரசு சாதாரண வணிகம் தொடர்புடைய மதுபான கடைகள் மற்றும் ஹோட்டல்கள் மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளது. மக்கள் மிக அதிக அளவில் வந்து போகக் கூடிய கடற்கரையை இரண்டு நாட்களுக்கு தடை செய்துள்ளது. இந்த விஷயத்தில் நாம் தமிழ்நாடோடு ஒத்து போகவில்லை என்றால், கடற்கரைகள் மற்றும் பொது இடங்களில் எல்லையை தாண்டி மக்கள் ஒன்று கூடுவர். இரண்டு நாட்கள் வணிகத்திற்காக சுகாதார பாதுகாப்பில் சமரசம் செய்ய நாம் தயாரா என்பதே தனது கேள்வி," என்று கூறியுள்ளார்.
"கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடந்த 8 மாதங்களாக அனைத்துத் துறைகளிலும் கடுமையான முயற்சி எடுக்கப்பட்டது. மீண்டும் பரவல் ஏற்பட்டால் பல மாதங்கள் செலவழிக்க நேரிடும். இதனால், பல உயிர்களை இழப்பதற்கும், வலி, துன்பம் மற்றும் வாழ்நாள் முழுவதும் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்," என்று முதல்வரின் கடிதத்திற்கு ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கட்சி பொதுக்கூட்டங்கள் தற்போது பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். அதெற்கெல்லாம் யாரும் தடை விதிக்கவில்லை. அங்கே ஏற்படாத தொற்று, இந்த பண்டிகை கொண்டாட்டம் மூலம் ஏற்படும் என்பதை ஏற்க முடியாத ஒன்றாக நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
"தொடர்ந்து புதுச்சேரியில் இந்த புத்தாண்டு கொண்டாட்டம் நடத்துவது குறித்து இதுவரை இறுதிக்கட்ட முடிவு அறிவிக்கப்படாமல் பிரச்னை நீடித்து கொண்டே இருக்கிறது.
இதனால் விடுதி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக கருதுகின்றனர். இறுதி நேரத்தில் இது போன்று பிரச்னை நிலவுவதால் பெரும்பாலானோருக்கு குழப்பம் இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால், எங்களை பொறுத்தவரை அரசு அறிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளின்படி நடத்த அனைவரும் தயாராக இருக்கிறோம் ," என நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"புதுச்சேரியில் சமீப நாட்களாக அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தால் பலரின் வாழ்வாதாரம் மேம்படும். சுற்றுலா தலம் என்பதால், உணவு கலைஞர்கள், கலை நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் ஆடல், பாடல், தொழில்நுட்ப கலைஞர்கள் என ஆயிரக்கணக்கான விளிம்பு நிலை மக்களுக்கும் இந்த புத்தாண்டு மூலமாக அவர்களின் வாழ்வாதாரம் மேம்படப்போகிறது," என்று நிகழ்வு மேலாளர் சுரேஷ் கூறுகிறார்.
"தீபாவளி தொடங்கி இன்று வரை வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரியில் உள்ள கடை வீதிகளுக்கு வாரந்தோறும் ஆயிரக்கணகான வந்து செல்கின்றனர். அப்படி இருக்கும் சூழலில் ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக அரசு தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று இந்த ஒரு விழாவை கட்டுப்படுத்தினால், இதன்பிறகு வரக்கூடிய விழாக்களுக்கும் தடை விதிக்கப்படலாம். எனவே, அரசு அறிவிப்பு செய்த பாதுகாப்பு வழிமுறைகள்படி இந்த புத்தாண்டை கொண்டாடலாம்," என்கிறார் சுரேஷ்.
இது குறித்து சமூக செயல்பாட்டாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் கூறுகையில், "கடந்த 8 மாதங்களாக முதலீடு செய்து வியாபாரம் இல்லாமல் இருக்கக்கூடிய வியாபாரிகளின் நிலையை பற்றி யோசிக்க வேண்டும். புதுச்சேரி போன்ற சுற்றுலா நகரில், இந்த புத்தாண்டை வர்த்தக ரீதியாக பார்க்க வேண்டும். இதனால் நீண்ட காலங்களுக்கு பிறகு பலரது வாழ்வாதாரம் புத்துணர்வு பெறும். எனவே, இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அதிக அளவில் மக்கள் கூடாத வகையில், ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் அரசு கவனிக்க வேண்டும். அனைவரும் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கலாம். பல்வேறு பகுதிகளில் இசை கச்சேரிகள் மற்றும் உணவு விற்பனையகம் ஏற்படுத்திய பகுதிகளில் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஒருங்கிணைக்கலாம்," என்கிறார்.
"சமூக தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாடலாம். உள்ளூர் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சரியான முன்னெச்சரிக்கை வழிமுறைகளுடன் இந்த புத்தண்டை கொண்டாட அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற தேவையற்ற தடை மூலம் புதுச்சேரி மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக் கூடாது,"என்கிறார் சமூக செயல்பாட்டாளர் காயத்ரி ஸ்ரீகாந்த்.
இந்த புத்தாண்டு மற்ற புத்தாண்டுகளை போல் வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
புதுச்சேரியில் தற்போது தான் தொற்றின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. சிலர் இதில் பணம் சம்பாதிக்க வேண்டும், வியாபாரம் செய்ய வேண்டும் என்ற ஆசைக்காக செய்கின்றனர் என்று கூறுகிறார் பொதுநல அமைப்பைச் சேர்த்த சக்திவேல்.
"பொதுவாக இது போன்று புத்தாண்டு கொண்டாடுவதை தடை விதிக்க வலியுறுத்தும் போது, அரசியல் பொது கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனரே என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். எடுத்துக்காட்டாக கடலூர் அல்லது விழுப்புரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்றால், அங்கே கூட கூடிய மக்கள் அப்பகுதியை சேர்ந்தவர்களாக இருப்பர். வேறு மாவட்டத்தில் இருந்தோ, மாநிலத்தில் இருந்தோ யாரும் பங்கேற்பதில்லை.
ஆனால் இந்த புத்தாண்டு கொண்டாட்டம் என்பது பிற பகுதிகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்தியா முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் தடை விதிக்கப்பட்ட நிலையில், அனைவரும் புதுச்சேரிக்கு புத்தாண்டை கொண்டாட வருவார்கள். இதன் மூலமாக புதுச்சேரி மட்டுமின்றி இங்கே வரும் சுற்றுலா பயணிகளால் இந்தியா முழுவதும் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது பெரிய ஆபத்தை விளைவிக்க கூடும் என்பதை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ளவேண்டும்," என சக்திவேல் கூறுகிறார்.
கொரோனா தொற்று சூழலில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் சிலரிடம் பிபிசி பேசியது. இதையொட்டி மருத்துவர் மணிகண்ட ஜோதி கூறுகையில், "கடற்கரையில் மக்கள் அனைவரும் புத்தாண்டு நாளில் ஒன்று கூடும்போது, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மக்கள் கூட்டம் அதிகமாகிவிடும், நேரம் செல்லச் செல்ல கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. அதிலும் புதுச்சேரியில் புத்தாண்டை அதிக அளவில் கொண்டாட வரும் மக்கள் அனைவரும் தமிழகம், கேரளா, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை போன்ற பகுதியில் இருந்து தான் வருகின்றனர். தற்போது இ-பாஸ் நடைமுறை இல்லாததால், உள்ளே வரும் சுற்றலா பயணிகள் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடியாது. இதுபோன்ற சூழலில் ஒருவருக்கு தொற்று இருந்தாலும், அதன் மூலமாக நூற்றுக்கணக்கான நபர்களுக்கு பரவ வாய்ப்பிருக்கிறது," என்கிறார் அவர்.
"ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் எத்தனை பேர் சமூக இடைவெளியைப் பின்பற்றி, முக கவசம் அணிந்து வழி முறைகளை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? அதிலும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடும் முறை எப்படி இருக்கும் என்று அனைவரும் அறிந்ததே. ஆகவே இதுபோன்ற நோய்த்தொற்று சூழலில், புத்தாண்டு கொண்டாட்டத்தை ஊக்குவிக்கக்கூடாது. பொருளாதார ரீதியாக இதை ஒருபுறம் பலரும் வரவேற்றாலும், மருத்துவ ரீதியாக மக்களின் பாதுகாப்பை உணரும்போது தற்போதைய சூழலில் இந்த கொண்டாட்டம் சரியானதாக அமையாது," என்கிறார் மருத்துவர் மணிகண்ட ஜோதி.
பிற செய்திகள்:
- "வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளின் ஆதரவு உள்ளது" - நரேந்திர சிங் தோமர்
- சிசுவின் கோவிட் இறப்பு மீது சந்தேகம்: சிக்கலாகுமா முஸ்லிம் பெற்றோர் வழக்கு?
- பிரமாண்ட பனிப்பாறை உடைவதால் உயிரினங்களைத் தொடரும் ஆபத்து
- நடராஜன் குழந்தையைப் பார்க்கப் போகவில்லை, விராட் கோலி போகிறார்: கவாஸ்கர் விமர்சனம்
- கொரோனா தடுப்பூசியை இஸ்லாம் ஏற்கிறதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK
- அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு பிரிட்டனில் அபராதம்
- பிரிட்டனுடன் கைகோர்த்து 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய ஏர்டெல் குழுமம்
- தண்டனை பெற்ற சம்பந்தி, மேலாளர், ஆலோசகருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்