You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென்னாப்பிரிக்காவில் இன்னொரு கொரோனா திரிபு: வேகமாகப் பரவும், இளைஞர்களையும் தாக்குமா?
- எழுதியவர், ஜேம்ஸ் கல்லேகர்
- பதவி, சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர், பிபிசி
உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகள் வரத் தொடங்கிவிட்டன என்று மனித குலம் ஆசுவாசப்படுவதற்குள், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த வைரசின் புதிய திரிபு வேகமாகப் பரவக்கூடியது என்று தெரிய வந்த நிலையில் மீண்டும் மேற்கத்திய நாடுகளில் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்நிலையில், இது போதாதென்று தென்னாப்பிரிக்காவில் உலாவரும் கொரோனா வைரசின் மேலும் ஒரு புதிய திரிபு அடுத்தடுத்த பீதிக்கு காரணமாகியுள்ளது.
பிரிட்டனில் இரண்டு பேருக்கு, கொரோனா வைரஸின் தென்னாப்பிரிக்க வகை புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, அந்நாட்டின் சுகாதாரச் செயலர் மேட் ஹான்காக் கூறியுள்ளார்.
லண்டன் மற்றும் வட மேற்கு பிரிட்டனில் புதிதாக பரவத் தொடங்கி இருக்கும் இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு, தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தென்னாப்பிரிக்க வகை திரிபு தொற்றியவர்கள் சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவுக்கு பயணத் தடை
கடந்த இரண்டு வார காலத்தில், தென் ஆப்பிரிக்காவுக்கு பயணித்தவர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும், தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறது அரசு.
"இளைஞர்கள் மற்றும் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் கூட தற்பொது நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என தென் ஆப்பிரிக்காவின் சுகாதார அமைச்சர் ஸ்வெலி ஹிஸ் (Zweli Mkhize) தன் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
எச்.ஐ.வி. தொற்று வந்த ஆரம்ப காலகட்டத்தில், தென் ஆப்பிரிக்கா சந்தித்த சவால்களை, தற்போது மீண்டும் சந்திக்க முடியாது எனக் குறிப்பிடுகிறார் அமைச்சர் ஹிஸ்.
தென் ஆப்பிரிக்காவில், இந்த புதிய திரிபு அதிவேகமாக பரவி வருவதாகவும், கொரோனா நோயாளிகளில் பலரும் இந்த புதிய திரிபினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸின் இந்த புதிய தென் ஆப்பிரிக்க திரிபைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். இந்த திரிபு அதிவேகமாக பரவுவதை மட்டும் தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்த புதிய தென் ஆப்பிரிக்க திரிபு, முதல் முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது.
பயங்கரமாக பரவும் தொற்று
ஏற்கனவே பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் திரிபுடன், இந்த புதிய தென் ஆப்பிரிக்கத் திரிபு சில ஒற்றுமைகளை வெளிப்படுத்துகிறது.
இரண்டு திரிபுகளிலுமே N501Y என்கிற மரபணு மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. இது தான் இந்த வைரஸின் மிக முக்கிய பகுதி. இந்த பகுதியைக் கொண்டு தான், மனித உடலில் இருக்கும் செல்களைத் தாக்குகிறது கொரோனா வைரஸ்.
தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் கொரோன வைரஸின் புதிய திரிபுதான் நமக்கு இப்போது இருக்கும் மிகப் பெரிய கவலை. இந்த தென் ஆப்பிரிக்க திரிபு, அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது என அறிக்கைகள் கூறுகின்றன. அதோடு இந்த புதிய திரிபால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறார் இம்பீரியல் காலேஜ் ஆஃபு் லண்டன் பேராசிரியர் நீல் ஃபெர்குசன்.
பிரிட்டனில் 4-ம் அடுக்கு கட்டுப்பாடு
கொரோனா வைரஸின் புதிய தென் ஆப்பிரிக்கத் திரிபு மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. சுயமாக தனிமைபடுத்திக் கொள்ளும்படி கூறப்பட்டிருப்பவர்கள், கட்டாயமாக யாருடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருக்கிறார் பிரிட்டனின் சுகாதாரச் செயலர் ஹான்காக்.
அதே சந்திப்பில்தான், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பிரிட்டனில் லட்சக் கணக்கான மக்களை 4-ம் அடுக்கு கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவரும் அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
இரண்டு திரிபுகளுமே எளிதில் பரவக் கூடியதாகத் தெரிகின்றன. ஆனால் தென் ஆப்பிரிக்க திரிபைக் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும், பயணத் தடைகள் மற்றும் தாமே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஆகியவை இந்த வைரஸ் பரவலை கணிசமாகக் குறைக்கும் என்று நம்புவதாகக் கூறுகிறார் பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்தின் மருத்துவர் சூசன் ஹாப்கின்ஸ்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்படும் வழக்கமான வழிமுறைகளே, புதிய திரிபு வைரஸ் தொற்று ஏற்படுவதையும் தடுக்கும். கடுமையான ஊரடங்கு விதிமுறைகளுக்குள் நாடு செல்வதை தவிர்க்க முடியாது என்கிறார் வார்விக் மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் லாரன்ஸ் யங்.
தென் ஆப்பிரிக்கா இந்த தொற்றை எப்படி சமாளிக்கிறது?
பண்டிகை கால கொண்டாட்டங்களுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் பிரபலமான கார்டன் ரூட் கடற்கரைகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பதும் இதில் அடக்கம்.
மேற்கு கேப் பிராந்தியத்தில் இருக்கும் மருத்துவமனைகள், கடுமையான நெருக்கடியில் இருப்பதாக, அப்பிராந்தியத்தின் பிரீமியரான அலன் விண்டே கூறுகிறார். இதற்கு முன்பு இந்த பிராந்தியத்தில் இருந்த கொரோனா நோயாளிகளை விட, தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்கிறார் அவர்.
தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 9.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 25,000 பேர் இறந்துள்ளனர்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசியை இஸ்லாம் ஏற்கிறதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK
- அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு பிரிட்டனில் அபராதம்
- பிரிட்டனுடன் கைகோர்த்து 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய ஏர்டெல் குழுமம்
- தண்டனை பெற்ற சம்பந்தி, மேலாளர், ஆலோசகருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்