லவ் ஜிகாத்: அமைப்பி மதம் கடந்த காதலை அச்சுறுத்தும் இந்திய சட்டம்

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி இந்தியா

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,000 மதம் கடந்த காதல் ஜோடிகள் டெல்லியில் உள்ள ஏதாவது ஓர் ஆதரவு அமைப்பின் உதவியை நாடுகின்றன.

இந்து - முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த ஜோடியினர் தங்கள் வீட்டில் திருமணத்துக்கு அனுமதி மறுக்கும்போது வழக்கமாக தானக் அமைப்பைத் தேடி வருகின்றனர். 20 - 30 வயது உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசுமாறு அல்லது சட்ட உதவி பெற உதவுமாறு கோருகின்றனர்.

தானக் அமைப்பிற்கு வரும் ஜோடிகளில் 52 சதவீதம் பேர் முஸ்லிம் ஆணை திருமணம் செய்ய விரும்பும் பெண்ணாக இருக்கின்றனர்; 42 சதவீதம் பேர் இந்து ஆணை திருமணம் செய்ய விரும்பும் முஸ்லிம் பெண்ணாக இருக்கின்றனர்.

``இந்தியாவில் இந்து மற்றும் முஸ்லிம் குடும்பத்தினர் தத்தமது மதங்களைக் கடந்து திருமணம் செய்து கொள்வதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்'' என்று தானக் நிறுவனர் ஆசிப் இக்பால் என்னிடம் தெரிவித்தார்.

``அந்தத் திருமணத்தை நிறுத்த அவர்கள் எந்த அளவுக்கும் செல்கிறார்கள். தங்கள் மகள் மீதே குறைகூறும் அளவுக்கு கூட பெற்றோர்கள் செல்கின்றனர். இதுபோன்ற உறவுகள் ஏற்படாமல் குறைக்க `லவ் ஜிகாத்' என்ற பதத்தை இன்னொரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்'' என்று அவர் தெரிவித்தார்.

திருமணம் செய்வதன் மூலம் இந்து பெண்களை மதம் மாறச் செய்வதாக முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு அடிப்படைவாத இந்துக்கள் பயன்படுத்தும் வார்த்தை `லவ் ஜிகாத்' என்பதாக உள்ளது'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வடக்குப் பகுதியில் இந்து பெண் ஒருவரை இஸ்லாம் மதத்திற்கு மாற்ற முயற்சித்தார் என்று கூறி முஸ்லிம் ஆண் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர் - லவ் ஜிகாத்தை தடுப்பதாக கூறும் புதிய மதமாற்றத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் அவர்.

இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி ஆளும் நான்கு பிற மாநிலங்களும் இதேபோன்ற சட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. ``வஞ்சனை, மோசடி மற்றும் தவறான நம்பிக்கை ஏற்படுத்துதலை'' தடுக்க இதுபோன்ற சட்டங்கள் தேவைப்படுகின்றன என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

``இந்து ஆண் ஒருவர் முஸ்லிம் பெண்ணை மணந்தால், அது காதல் என்று இந்து அமைப்பினர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு எதிரான முறையில் இந்துப் பெண்ணை முஸ்லிம் ஆண் மணந்தால் அது கட்டாயத்தின் பேரில் நடப்பதாகச் சொல்கிறார்கள்'' என்று டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றாளர் சாரு குப்தா தெரிவித்தார். ``லவ் ஜிகாத் என்ற தவறான நம்பிக்கை'' குறித்து அவர் ஆராய்ச்சி செய்துள்ளார்.

குடும்ப உறவு, மதம், ஜாதி மற்றும் குடும்ப கௌரவம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் காதல் என்பது கஷ்டமானதாக, ஆபத்து நிறைந்ததாக பார்க்கப்படுகிறது.

இருந்தாலும், கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் பல நூறாண்டுகளாக சமூக எதிர்ப்புக்கு ஆளகியுள்ள காதலில் இளம் பெண்களும், ஆண்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். செல்போன்கள், மலிவான செலவில் இன்டர்நெட் டேட்டா கிடைப்பது, சமூக நெட்வொர்க் தளங்கள் ஆகியவை காரணமாக, முன் எப்போதையும்விட அவர்கள் அதிக அளவில் காதலில் விழுகிறார்கள்.

``யாரைக் காதலிக்கலாம், எப்படி காதலிக்கலாம், எந்த அளவுக்குக் காதலிக்கலாம்'' என்பவை ``காதல் சட்டங்களாக'' இருக்கின்றன என்று புக்கர் பரிசு பெற்ற The God of Small Things என்ற தன் நாவலில் எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியுள்ளார். காதலர்கள் பிரிவு பற்றிக் கூறும்போது இப்படி குறிப்பிடுகிறார்.

ஒரு துணைவர், பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட, இரு பாலருக்கு இடையிலான மற்றும் ஒரே சாதியிலான திருமணங்கள்தான் முறையானவையாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமான திருமணங்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டவையாக இருக்கின்றன. மதங்களைக் கடந்து திருமணம் செய்வது அபூர்வமானதாக இருக்கிறது. 2 சதவீதத்துக்கும் சற்று கூடுதலாகத்தான் மதங்களைக் கடந்த திருமணங்கள் இருப்பதாக ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக இந்து குழுக்கள் அவ்வப்போது ``லவ் ஜிகாத்`` என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதாக பலரும் கருதுகிறார்கள். இந்தியாவில் இதுபோன்ற மதங்களைக் கடந்த திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் இருப்பது வரலாற்றில் நீண்ட காலமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

1920கள் மற்றும் 1930களில் மத மோதல்கள் அதிகரித்து வந்த பின்னணியில், வட இந்தியாவில் இந்து தேசியவாத குழுக்கள் இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் ``கடத்திச் செல்வதாக'' எதிர்ப்பு தெரிவித்து, அவர்களின் இந்து மனைவிகளை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்து பெண்களை முஸ்லிம்கள் கடத்துவதாகச் சொல்லப்படும் நிகழ்வுகளைத் தடுப்பதற்காக ஐக்கிய மாகாணங்களில் (இப்போது உத்தரப் பிரதேசம்) ஓர் இந்து குழு உருவாக்கப்பட்டது. 1924-ல் இந்து சிறுமியை ``கடத்தி சம்மதிக்கச் செய்து'' கட்டாயமாக மதமாற்றம் செய்ததாக கான்பூர் நகரின் முஸ்லிம் அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதிகாரியின் வீட்டில் இருந்து இந்து பெண்ணை ``மீட்க வேண்டும்'' என்று அந்தக் குழு கோரிக்கை விடுத்தது.

காலனி இந்திய நாடாளுமன்றத்திலும் இந்த விஷயம் பற்றி விவாதம் நடந்தது. இப்போது பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும், அப்போதைய காங்கிரஸ் கட்சி ``கடத்திச் சென்று கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்; பெரும் எண்ணிக்கையில் மதமாற்றம் செய்வது அர்த்தமற்றது அல்லது செல்லக் கூடியதாக இருக்காது. மக்கள் தங்கள் விருப்பத்தின்படியான வாழ்க்கைக்குத் திரும்ப ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்'' என்று தீர்மானம் நறைவேற்றியது.

ஆகஸ்ட் 1947-ல் இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்ட போது, முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் சென்ற சமயத்தில் சுமார் 10 லட்சம் பேர் இறந்தனர், 15 மில்லியன் பேர் குடிபெயர்ந்தனர். அங்கிருந்து சீக்கியர்களும், இந்துக்களும் திரும்பி வந்தனர். வன்முறையில் பெரும்பாலும் பெண்கள்தான் பாதிக்கப்பட்டனர். அதனால் வேறு பிரச்னை ஏற்பட்டது.

சமீப காலங்களில் தேர்தலுக்கு முந்தைய சமயங்களில் வாக்காளர்களை ஒன்றுதிரட்ட இந்து தேசியவாத குழுக்கள் ``லவ் ஜிகாத்'' என்ற பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. 2014ல் உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது இதுபோல செய்தனர்.

சுவரொட்டிகள், வதந்திகள் மூலமாக ``திட்டமிட்டு பிரசாரம்'' செய்வது இந்து குழுக்களின் பாணியாக உள்ளது என்று பேராசிரியர் குப்தா தெரிவித்தார். ``இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்வது மற்றும் திருமணம் செய்வது, வீட்டைவிட்டு வெளியேறுவது, காதலில் ஈடுபடுவது, கவர்ச்சியாகப் பேசி மயக்குவது, மதமாற்றம் செய்வது'' போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள் என்று இந்தக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.

வலதுசாரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் ``லவ் ஜிகாத்'' பற்றி முதல்பக்க கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ``நிரந்தரமான காதல் இருக்கட்டும், லவ் ஜிகாத் ஒருபோதும் வேண்டாம்'' என்ற முழக்கத்தை எழுப்புமாறு மக்களை அதில் ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.

முஸ்லிம் ஆண்கள்தான் இப்படி செய்கிறார்கள் என்ற ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்து பெண்களை ஈர்ப்பதற்காக ``உலக அளவிலான இஸ்லாமிய சதி'' நடக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்து பெண்களை ஈர்க்க அவர்களுக்கு ஆடம்பர உடைகள், கார்கள், பரிசுகள் வாங்கவும், இந்துக்களைப் போல நடிக்கவும் முஸ்லிம் ஆண்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ``இந்துக்களில் எளிதில் பிறரை நம்பும் பெண்களை குறிவைத்து உலக அளவில் இதுபோன்ற லவ் ஜிகாத் நடைபெறுகிறது'' என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ``பெண்களின் பெயரால் அரசியல் மற்றும் மத ரீதியில் மக்களை ஒன்று திரட்டுவதற்கான முயற்சியாக இது உள்ளது'' என்று பேராசிரியர் குப்தா கூறுகிறார்.

கடந்த கால மற்றும் தற்போதைய ``லவ் ஜிகாத்'' பிரசாரங்களுக்கு இடையில் ஒருமித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் காலம் மாறும்போது, ஆளும் பாஜக முன்னெடுப்பதால், இந்தப் பிரசாரம் அதிக தீவிரமானதாக இருக்கிறது.

``சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் இதுபோன்ற செய்திகள், பத்திரிகைகளின் உள்பக்கத்தில் ஓரத்தில் பிரசுரிக்கப்படும். அந்த பதற்றங்களை பெரிதுபடுத்தக் கூடிய பிரதான அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்கள் கிடையாது. இப்போது இது முதல்பக்கத்தில் இடம் பெறும் செய்தியாக உள்ளது. இந்தச் சட்டங்களை அமல் செய்வதில் அரசு தீவிர ஈடுபாடு காட்டுகறது. இந்து பெண்களை திருமணத்திற்காக முஸ்லிம் ஆண்கள் மதம் மாற்றுகிறார்கள் என்று செய்திகளைப் பரப்புவதற்கு சமூக ஊடகங்களும், செய்தி அனுப்பும் செயலிகளும் பயன்படுத்தப் படுகின்றன'' என்றும் பேராசிரியர் குப்தா தெரிவித்தார்.

இந்தியாவின் சிறப்பு திருமண சட்டத்தின்படி, மதங்களைக் கடந்து திருமணம் செய்ய, ஜோடியினரின் விவரங்களுடன் அதிகாரிகளிடம் ஒரு மாதத்திற்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த நடைமுறையில் இருந்து ``தப்புவதற்காக'' அவர்கள் மதம் மாறும் முடிவுக்கு வருகிறார்கள் என்று பலர் கூறுகின்றனர். எனவே தங்கள் திருமணத்தை நிறுத்த பெற்றோர்கள் தலையிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள்.

மதங்களைக் கடந்த திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என்ற வகையில் சட்டங்கள் அறிமுகம் செய்யப்படுவதால், பெற்றோரும், அதிகாரிகளும் இளைஞர்களுக்கு மிரட்டல் விடுப்பவர்களாக இருப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதே சமயத்தில், காதலில் ஈடுபடும்போது மதம், சாதியைக் கடந்து, வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள, நிறைய ஆண்களும், பெண்களும் துணிச்சலாக முடிவு எடுக்கின்றனர். இதுபோல ஜோடிகள் திருமணம் செய்வதை அரசே எதிர்த்தாலும், அரசு நடத்தும் பாதுகாப்பு விடுதிகளில் பலரும் தஞ்சம் அடைகின்றனர்.

``காதலிப்பது இந்தியாவில் சிக்கல் நிறைந்தது, கடினமானது'' என்கிறார் இக்பால்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: