You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'லவ் ஜிகாத்' கட்டாய மதமாற்ற தடை அவசரச் சட்டம்: உத்தரப்பிரதேச ஆளுநர் ஒப்புதல்
உத்தரப் பிரதேசத்தின் ஆளுநர் ஆனந்திபென் படேல், இன்று (21 நவம்பர் 2020 சனிக்கிழமை), கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
உத்தரப் பிரதேச சட்டவிரோத மதமாற்ற தடுப்பு அவசரச் சட்டம், 2020 என்கிற இந்தச் சட்டத்துக்கு, உத்தரப் பிரதேச ஆளுநர் அனுமதி கொடுத்து இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை, இந்த வார தொடக்கத்தில் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.
இந்த அவரசச் சட்டத்தின் மூலம், கட்டாயப்படுத்தியோ, "நேர்மையற்ற" முறையிலோ, மத மாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதில் திருமணத்தின் பெயரால் மதமாற்றம் செய்வதும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அவசரச் சட்டத்தின்படி, திருமணத்துக்காக மட்டுமே பெண்கள் மதம் மாறினால் அது செல்லாது என அறிவிக்கப்படும். திருமணத்துக்குப் பிறகு மத மாற்றம் செய்து கொள்ள விரும்புபவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் .
பாஜக தலைவர்களும் லவ் ஜிகாத் குற்றச்சாட்டுகளும்
கடந்த சில வாரங்களில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள், இந்து பெண்களை திருமணம் என்கிற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு மாற்றுவதற்கு எதிராக சட்டங்களை இயற்றும் திட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.
"கட்டாயப்படுத்தி, ஏமாற்றி, அல்லது ஆசை வார்த்தைகள் கூறி நடைபெறும் மதம் மாற்று திருமணங்களை செல்லாது என்ற சட்ட விதி இருக்கும். இந்த குற்றத்திற்கு உதவி செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்" என்று சில நாட்களுக்கு முன் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியிருந்தார்.
இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டம் அம்மாநில சட்டசபையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
"மாநிலத்தில் காதல் என்ற பெயரில் லவ் ஜிகாதுக்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இதற்கு எதிராக சட்ட விதிகள் கொண்டுவரப்படும்" என்று ஏற்கனவே மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்திருந்தார்.
முன்னதாக கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவும், லவ் ஜிகாதுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர முனைப்பு காட்டினார்.
"காதல் மற்றும் பணம் என்ற பெயரில் பெண்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். இதனை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். சரியான ஆய்வுக்குபின், இது தொடர்பான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா பேசினார்.
'லவ் ஜிகாத்' என்று இந்து வலதுசாரிகள் கூறுவது என்ன?
இந்துப் பெண்களை இஸ்லாமிய ஆண்கள் ஏமாற்றி திருமணம் செய்து மதம் மாற்றுகிறார்கள் என்று தாங்கள் வைக்கும் குற்றச்சாட்டைக் குறிக்க 'லவ் ஜிகாத்' எனும் பதத்தை தீவிர இந்துத்துவ வலதுசாரிகள் பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய திருமணங்களைக் குறிக்க லவ் ஜிகாத் எனும் பதத்தை பாஜக தலைவர்களும் பயன்படுத்துகிறார்கள்.
எனினும், தற்போது வரை 'லவ் ஜிகாத்' என்ற சொல்லாடல் இந்திய சட்ட அமைப்பில் கிடையாது.
திருமண நோக்கத்திற்காக மட்டும் மதத்தை மாற்றுவது சட்டபூர்வமானது அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் கடந்த அக்டோபர் மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனது இஸ்லாமிய புகுந்த வீட்டினர், ஓர் இந்துப் பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செய்வதைப் போல சித்தரிக்கப்பட்டிருந்த விளம்பரம் ஒன்று "லவ் ஜிகாத்தை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளதாக" தீவிர இந்து வலதுசாரிக் குழுக்கள் குற்றம்சாட்டியதால், அந்த விளம்பரத்தை தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து, அக்டோபரில் தனிஷ்க் நிறுவனம் நீக்கியது.
பிற செய்திகள் :
- டெல்லியைச் சுற்றி குவியும் விவசாயிகள்: கடுங்குளிர், கொரோனாவை மீறி போராட்டம்
- வங்கக் கடல், இந்தியப் பெருங்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - முக்கிய தகவல்கள்
- அணு விஞ்ஞானி படுகொலைக்கு பழிவாங்குவோம் என்கிறது இரான் - யார் அவர்?
- 100 கோடிக்கும் அதிக இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது எப்படி?
- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்