You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி முதல் இஸ்தான்புல் வரை: மத வழிபாட்டுத் தலங்களின் அரசியல்
- எழுதியவர், ஜுபைர் அஹமத்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, பாபர் மசூதியின் பெயர் வரலாற்றின் பக்கங்களில் மட்டுமே வாழும். ஆறாம் நூற்றாண்டில் துருக்கியில் கட்டப்பட்ட கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயமான அய சோஃபியா போல.
1453-ஆம் ஆண்டு முதல், ஒரு தேவாலயமாக அதன் அடையாளம் வரலாற்றின் பக்கங்களாக மட்டுமே இருந்து வருகிறது. ஏனெனில் இது ஒரு மசூதியாகவும், பின்னர் ஒரு அருங்காட்சியகமாகவும், இப்போது மீண்டும் ஒரு மசூதியாகவும் மாற்றப்பட்டுள்ளது.
மசூதிக்கு பதிலாக கோயில், தேவாலயத்துக்கு பதிலாக மசூதி! உலகெங்கிலும் உள்ள வழிபாட்டு தலங்களை மாற்றியது நீண்ட வரலாறு. இன்றும், தாலிபான் மற்றும் ஐ.எஸ் குழு, மத வழிபாட்டு தலங்களையும் வரலாற்று நினைவுச்சின்னங்களையும் தொடர்ந்து அழித்து வருகின்றன.
2001-இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பாமியனில் உள்ள புத்தர் சிலைகளை அழித்தனர். சிரியா மற்றும் இராக்கில் பண்டைய மத மற்றும் கலாசார பாரம்பரியத்தை ஐ.எஸ் அழித்தது.
20 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேலிய தலைவர் ஏரியல் ஷரோன், காவல்துறையினருடன் சேர்ந்து, முஸ்லிம்களின் புனித அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்து இஸ்ரேலின் உரிமையைக் கோரினார்.
அவர் தனது லிக்குட் கட்சியின் வளர்ந்து வரும் நட்சத்திரமான பினியமின் நெதன்யாகுவின் புகழுக்கு அஞ்சி, இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும், அரசியல் ஆதாயங்களுக்காக மத உணர்வுகளை சீண்டியதாகவும் கூறப்படுகிறது.
மதம் சார்ந்த தேசியவாதம்
இத்தகைய எடுத்துக்காட்டுகள் ஜனநாயகம், சர்வாதிகாரம் என்ற இரு வகை அரசாங்கங்களிலும் காணப்படுகின்றன,.
துருக்கிய அதிபர் எர்துவான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் மத உணர்வுகளை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதில் பெயர் பெற்றவர்கள என்று அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மத தலைவர்கள் கருதுகிறார்கள்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
டெல்லியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைவரான ஏ.சி. மைக்கேல், "இந்த சூழலில் ராமர் கோயிலையும் அய சோஃபியாவையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். "அவற்றுக்கிடையே ஒரு பொதுவான தன்மை உள்ளது. நோக்கம் ஒன்றே. அதிகாரத்திற்கு வருவது அல்லது தக்க வைத்துக்கொள்வது என்பது தான் நோக்கம். ஆட்சி அதிகாரத்திற்கு மதம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது." என்று கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், "கோயில் கட்டப்படுவதற்குக் காரணம், அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக. 20-25 ஆண்டுகளுக்கு மோடி அல்லது பாஜக அரசு தான் இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறப்படுகிறது. 2024 க்குள் கோயில் கட்டப்பட்டு விட்டால், ஆட்சிக்கான அடித்தளம் பலப்படுத்தப்படும்." என்று கூறுகிறார்.
இந்திய பிரதமராக நரசிம்மராவ் இருந்த காலத்தில், மத வழிபாட்டுத்தலங்களை பாதுகாப்பதற்காக 1991 ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்ததால், அயோத்தி வழக்கு ஒதுக்கி வைக்கப்பட்டது. தாராளமய ஜனநாயகத்தின் நலனுக்கானதாக இந்த சட்டம் பாராட்டப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ், அனைத்து மதங்களின் வழிபாட்டுத்தலங்களின் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று முடிவு செய்யப்பட்டது.
எளிதான புகழ்
கலிபோர்னியாவின் சான் டியாகோ மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஹ்மத் குரு, "எர்துவான் ஆட்சி முறை,உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் மோடியின் போக்கும் அவ்வாறே. ரஷ்யாவிலும் புடின் தேவாலயத்தைப் பயன்படுத்துகிறார். அமெரிக்காவிலும் டிரம்ப், பைபிளை ஒரு அரசியல் அடையாளமாகப் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அரசியல்-மத உரையின் மூலம் அவர்கள் கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே இது உண்மையில் உலகம் முழுவதும் தொடரும் ஒரு போக்கு. " என்று கூறுகிறார்.
மிலன் வைஷ்ணவ் அமெரிக்காவின் சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் தெற்காசியா திட்டத்தில் மூத்த நிபுணர் ஆவார். 2019 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜகவின் மகத்தான வெற்றிக்கான காரணங்களை அவர் ஆராய்ந்தார்.
மத தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டும் நடக்கும் ஒன்றல்ல என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
"உலகெங்கிலும் உள்ள பல ஜனநாயக நாடுகளில் இத்தகைய அரசியல் போக்கு நிலவி வருகிறது. துருக்கி மற்றும் இந்தியா தவிர, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் மத ரீதியான அரசியலின் பரவலான பயன்பாடு காணப்படுகிறது. " என்று அவர் கூறுகிறார்.
அய சோஃபியா
இஸ்தான்புல்லின் புகழ்பெற்ற அய சோஃபியாவின் வரலாற்றுக் கட்டடம், ஒரு அருங்காட்சியகமாக மதசார்பற்ற துருக்கியின் அடையாளமாக இருந்தது.
பிரபல துருக்கிய எழுத்தாளர் ஓர்ஹான் பாமுக், "துருக்கியர்கள் ஒரு மதச்சார்பற்ற முஸ்லீம் தேசமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். இப்போது அய சோஃபியாவை ஒரு மசூதியாக மாற்றுவது நாட்டின் பெருமையை முடிவுக்குக் கொண்டுவரும். என்னைப் போன்ற லட்சக்கணக்கான மதசார்பற்ற துருக்கியர்கள், இந்த முடிவால் வருத்தப்படுகிறார்கள். ஆனால் அவரது குரல் கேட்கப்படவில்லை. " என்று வருத்தம் தெரிவிக்கிறார்.
கிறிஸ்தவ பேரரசர் ஜஸ்டினியன், ஆறாம் நூற்றாண்டில் அய சோஃபியாவின் கட்டடத்தை ஒரு தேவாலயமாகவே கட்டினார். ஓட்டோமான் பேரரசர் சுல்தான் மெஹ்மத், 1453-இல் அந்த தேவாலயத்தை மசூதியாக மாற்றினார். நவீன மற்றும் மதசார்பற்ற துருக்கியை நிறுவிய முஸ்தபா கமால் அட்டடூர்க், அதை ஒரு அருங்காட்சியகமாக மாற்றினார்.
எர்துவானின் 17 ஆண்டுகால ஆட்சியில் அட்டடூர்க்கின் மரபு பலவீனமடைந்து வருகிறது, அதேபோல் மோதி அரசாங்கத்தின் ஆறு ஆண்டுகால ஆட்சியில் நேருவின் மதசார்பற்ற மரபு பலவீனமடைந்துள்ளது.
அய சோபியா ஒரு மசூதியாக மாற்றப்படுவது, வளர்ந்து வரும் இந்தப் போக்கின் விளைவாகும்.
பேராசிரியர் ஏ.கே.பாஷா, "எர்துவானும் அவரது ஏ.கே கட்சியும் 2002-ஆம் ஆண்டு முதல் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றன, அவர்களின் நோக்கங்களில் ஒன்று முஸ்தபா கமாலின் ஆட்சிக்காலம் முதல் அல்லது முதலாவது உலகப் போருக்குப் பின்னர் அங்குள்ள மக்கள் மதசார்பற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அவர்களை அடக்க வேண்டும். அவர்கள் அளித்த வாக்குறுதியை, அய சோஃபியாவில் நமாஸ் படித்து நிறைவு செய்தனர். 1453-இல் தேவாலயத்தை கைப்பற்றிய முஸ்லிம்கள் மீது தங்களுக்கு முழு செல்வாக்கு மற்றும் கட்டுப்பாடு உள்ளது என்பதை அவர்கள் சொல்ல விரும்பினர். " என்று விளக்குகிறார்.
இந்தியாவில், ராம் ஜென்ம பூமி இயக்கம் காரணமாக ஆரம்ப காலத்தில் பாஜக, அரசியல் வானில் நட்சத்திரமாக ஒளிர்ந்தது. பின்னர் 2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு, அந்த நட்சத்திரம் சில ஆண்டுகளாக மேகத்தில் மறைந்திருந்தது. இப்போது பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில், கடந்த 6 ஆண்டுகளில் அந்த கட்சி தனது வரலாற்றின் மிக வெற்றிகரமான கட்டத்தைக் கடந்து வருகிறது. இதில் மத தேசியவாதம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
துருக்கிய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் அஹ்மத் கூறுவது போல், பிரபுத்துவத்திற்கும் ஜனரஞ்சகத்திற்கும் இடையில் ஒரு சமநிலையை நிலைநிறுத்துவது கடினம், "இந்தியாவிலும் துருக்கியிலும் நிலவும் ஜனநாயகம் பெரும்பான்மை சமூகம் செயல்படும் பெரும்பான்மை ஜனநாயகம். இது சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதிக்கிறது." என்கிறார் அவர்.
பேராசிரியர் அஹ்மத்தின் வாதம் என்னவென்றால், நேரு மற்றும் கமால் அட்டடூர்க் இருவரும் தேவைக்கு மேல் வலுவாகத் தங்கள் நாடுகளின் மீது மதசார்பின்மையை சுமத்தினார்கள் என்பதுதான்.
மறுபுறம், மோதி மற்றும் எர்துவானின் மத தேசியவாதத்தையும் ஜனநாயகத்திற்கான சரியான கருவிகளென்றும் அவர் கருதவில்லை. பிரான்சின் மதசார்பற்ற ஜனநாயகத்திற்கு பதிலாக இரு நாடுகளும் அமெரிக்காவின் ஜனநாயகத்தின் மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறுகிறார், இதில் மதம் சமூகத்தில், குறைந்த அளவே பங்களிப்பு செய்கிறது.
வரலாற்றின் ஆதரவு
ஸ்பெயின், கிரிமியா, பால்கன் நாடுகளில் மசூதிகள் இடிக்கப்பட்டு தேவாலயங்களாக மாற்றப்பட்டன என்பது எர்டோவானின் ஆதரவாளர்கள் வைக்கும் வாதம். 1237 க்கு முன்னர் ஒரு அற்புதமான மசூதியாக இருந்த ஸ்பெயினின் கர்தோபாவின் பெரிய கதீட்ரலின் உதாரணத்தை அவர்கள் குறிப்பாக மேற்கோள் காட்டுகிறார்கள். இது முஸ்லீம் சமுதாயத்தில் அதன் பழைய பெயரான மஸ்ஜித்-இ-கர்தோபாவாக இன்றும் நினைவில் கொள்ளப்படுகிறது.
இது குறித்து, 20 ஆம் நூற்றாண்டின் பெரிய உருது கவிஞரான அல்லாமா இக்பால் ஒரு கவிதையும் எழுதியுள்ளார்.
சான் டியாகோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஹ்மத், "அவையெல்லாம் நடந்தது உண்மை தான். ஆனால் இப்போது பழங்கதையாகிவிட்டது. திரும்பிப் பார்ப்பதற்குப் பதிலாக நாம் வருங்காலத்தை எதிர்நோக்க வேண்டும். பழைய கணக்குகளை அதே வழியில் தீர்க்க முயற்சித்தால், இதற்கு முடிவே கிடையாது" என்கிறார்.
அய சோஃபியாவை ஒரு மசூதியாகப் புனரமைப்பதன் மூலம் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட தவறை அவர் சரி செய்வதாக முஸ்லிம்களை நம்பவைக்க, ஜூலை 24 ஆம் தேதி அரபு மொழியில் எர்டோவான் ட்வீட் செய்தார்.
பைஜென்டான் சகாப்தத்தின் தேவாலயம் ஒட்டோமான் பேரரசால் ஒரு மசூதியாக மாற்றப்பட்ட, பின்னர் அதை கமால் அட்டடூர்க் ஒரு அருங்காட்சியகமாக மாற்றினார். இப்போது அது மீண்டும் ஒரு மசூதியாக மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இதைத் தவறான நடவடிக்கையாகப் பார்க்கும் போது, அவர் இதை தவறைச் சரி செய்யும் முயற்சி என்று காட்ட விரும்புகிறார்.
எதிர்காலம் எப்படி இருக்கும்?
"இரு தலைவர்களும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை பல ஆண்டுகளுக்குத் தொடர்வது ஜனநாயகத்தில் சாத்தியமில்லை" என்பது தான் பேராசிரியர் அஹமதின் கருத்தாகவுள்ளது.
பேராசிரியர் பாஷா, "மன வலிமை இல்லாத தலைவர்களின் ஆயுதம் தான் மதம் சார்ந்த அரசியல். அவர்கள் வெளியில் தாம் மிகவும் வலிமையானவர் என்ற தோற்றத்தை உருவாக்குவார்கள். ஆனால், இது அதிக காலம் பயன் தராது. அத்தகைய தலைவர்கள், ஒரு தவறை மறைக்க, பல தவறுகள் செய்து, இறுதியில், அவர்களின் அரசியல் அதிகாரம் வலுவிழக்கிறது." என்று கூறுகிறார்.
எர்துவானின் ஏ.கே.பி கட்சி, நெத்தன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் பல கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கம் நடத்தி வருகிறது. ஆனால், 2019 ல் பாஜகவுக்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்தும் கூட்டணி அரசாங்கத்தை நடத்துகிறது என்று பேராசிரியர் அஹமத் கூறுகிறார்.
"கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் நீண்ட காலம் மத அரசியல் செய்வது சாத்தியமல்ல. பொருளாதார பிரச்சினைகள் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகள் இந்த தலைவர்களுக்கு ஒரு சவாலாக மாறும்." என்று நம்புகிறார் பேராசிரியர் அஹமத்.
பிற செய்திகள்:
- அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்”
- ராமர் கோயில் விழா: ஸ்பெயினில் இந்தியர்கள் கொண்டாடினார்கள் என்பது உண்மையா?
- நேரு முதல் நரேந்திர மோதி வரை: மதச்சார்பின்மை முதல் பிரதமர்களின் மத ஊர்வலங்கள் வரை
- பா.ஜ.க தலைவரை சந்தித்த திமுக எம்எல்ஏ கு.க. செல்வத்தின் பதவிகள் பறிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: